"நான் சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்" - தலைவரின் திரைப்பட வசனம்.
ஆனால் இப்போது அரசியலில் "நான் சொன்னதை எல்லாரையும் செய்ய வைப்பேன்" என்ற நிலையை உருவாக்கி விட்டார்.
தலைவரின் நீண்ட காலக் கனவு / திட்டங்களில் முக்கியமான ஒன்று நதி நீர் இணைப்பு.
காவேரிக்காக நடிகர் சங்கம் நெய்வேலியில் போராட்டம் நடத்திய போது அவர்கள் தண்ணீர் தரவில்லை என்றால் நாங்கள் மின்சாரம் தர மாட்டோம் என்ற தொனியிலேயே போராட்டம் நடந்தது.
மிரட்டல் பாணியில் நடந்த போராட்டம் ஒரு தீர்வை நோக்கி நகராமல், பதற்றத்தை அதிகமாக்கும் நிலைக்கே சென்றது.
ஆனால் அடுத்த நாள் தலைவர் நடத்திய போராட்டம் அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய போதும், அதன் இறுதியில் தான் அதைச் சுயலாபத்திற்காகச் செய்யவில்லை, மாறாக ஒரு மனிதனாக, பதற்றத்தை குறைக்கக்கூடிய ஒரு பொறுப்புள்ள அரசியல் ஞானம் பெற்ற குடிமகனாகச் செய்தேன் எனத் தலைவர் உணர்த்தினார்.
ஆம், ஒரு தீர்வை முன்வைத்தார். "நதி நீர் இணைப்பு".
அத்திட்டம் ஒன்றே தீர்வை நோக்கிய பயணமாக இருக்கும். அதைச் செயல்படுத்த முன் வந்தால் முதல் ஆளாக என் பாக்கெட்டில் இருந்து 1 கோடி ரூபாயை கொடுக்கிறன் என அறிவித்தார்.
நதி நீர் இணைப்பு என்பது பல ஆண்டுக் காலமாகப் பேசு பொருளாக இருந்த போதிலும், தலைவர் அதைக் கூறிய பின்பு தான் பட்டி தொட்டி எங்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு வந்தது.
அதைத் தொடர்ந்து வாஜ்பாய் அவர்கள் நதி நீர் இணைப்பை சாத்தியப்படுத்துவார் என்ற நம்பிக்கையில், அந்த ஒரு காரணத்தை மட்டுமே கூறி அவருக்குப் பகிரங்க ஆதரவை 2004 மக்களவை தேர்தலில் அளித்தார்.
ஆனால் மாநில கட்சிகள் ஆதரவு காரணங்களினால் பாஜக தோல்வியுற, நதி நீர் இணைப்பு எனும் திட்டம் வார்த்தை அளவிலேயே நின்று விட்டது.
ஆனாலும் தலைவர் தனது முக்கியத் திட்டமாக / கனவாக / வாழ்நாள் லட்சியமாக நதி நீர் இணைப்புத் திட்டத்தை வைத்து இருந்தார். அதை அவ்வப்போது போது மேடைகளில் வெளிப்படுத்தியும் வந்தார்.
ஆனால் சட்டத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றும் கடமை அரசிடம் / அதைத் தீர்மானிக்கும் அரசியல்வாதிகளிடமும் இருப்பதால் அது கேட்பாரற்றுக் கிடந்தது.
இந்நிலையில் தான் தலைவரின் அரசியல் பிரவேசம் அரங்கேறியது.
தலைவருக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு, தலைவரின் தொலைநோக்கு செயல் திட்டங்கள் அனைத்தும் எங்கே நமது வாக்கு வங்கியை பதம் பார்த்து விடுமோ என அனைத்து அரசியல் கட்சிகளும் அஞ்சின.
2017 டிசம்பரிலேயே அறிவித்தபடி 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டதால், நடைபெறும் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விட்டார்.
ஆனால் 20 வருடங்களாக அரசியலை கவனித்து வரும் அவர், இக்கட்சிகள் எல்லாம் வெறும் வாக்கு வங்கியை மையமாக வைத்தே பேசுகிறார்களே தவிர, உண்மையான மக்கள் பிரச்னையைப் பேசுவதில்லை என்பதை உணர்ந்தே உள்ளார்.
அதனால் தானே இறங்காவிட்டாலும், தன்னுடைய எண்ணம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக ஒரு அறிக்கையை விட்டார்.
அது ஒரு சாதாரண அரைப் பக்க அறிக்கை தான். தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்ற ஒற்றை வரி தான். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் நதி நீர் இணைப்பு என்ற வார்த்தையைத் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்த்து விட்டனர்.
இதென்ன வேடிக்கை... ரஜினி சொல்லிவிட்டார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகச் சேர்க்கப்பட்ட வரிகளா இவை எனக் கேள்வி எழலாம்.
சற்றே சிந்தித்துப் பாருங்கள். கடந்த இரு வருடங்களாகத் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் தண்ணீர் மையமாக இருந்தது எத்தனை ? அதுவும் காவேரி போராட்டத்தின் போது கூடக் கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்றே சில போராளிகள் கூறினார்கள் தவிர, நதி நீரை இணைப்போம் எனக் கூறவில்லையே.
திமுக நடத்திய போராட்டங்களில் எத்தனை முறை நதி நீர் இணைப்பை பற்றிப் பேசி இருக்கிறார்கள்? 37 எம்பிக்களைக் கொண்ட அதிமுக இதுவரை எத்தனை முறை பாராளுமன்றத்தில் நதி நீர் இணைப்பை வலியுறுத்தி இருக்கிறார்கள் ?
ஆனால் இன்று தலைவர் கூறியவுடன், அது மோடியால் தான் முடியும் ராகுலால் தான் முடியும் என அவர் அவர் தலைவர் ரசிகர்களின் ஆதரவை பெற முயற்சிக்கிறார்கள்?
சரி இது ரஜினியை பார்த்து காபி அடித்ததாகவே இருக்கட்டும். இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விட்டால் தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா ?
ஆம், குடிநீர், விவசாயம், வேலை வாய்ப்பு, மின்சாரம், கால் நடை பராமரிப்பு போன்ற அனைத்திற்கும் தண்ணீரே மூலதனம்.
1000 பிரச்சனைகளை 1000 வழிகளில் தீர்ப்பதற்கு, அந்த 1000 பிரச்னைகளுக்குமான மூல காரணத்தைச் சரி செய்யும் முனைப்பில் தலைவர் ஈடுபட்டுள்ளார்.
ரஜினி எப்போதுமே தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கக் கூடியவர்.
பிறர் வாக்கு வங்கியாகப் பார்க்கும் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்குத் தேவையானதை பார்ப்பவர் மட்டுமே தலைவர்.
ஒரு உதாரணமாக 2018 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அவர் கூறியது. 'ஈழ தமிழர்ன்னு எல்லாரும் போராடுறாங்க, ஆனா இங்கேயே அகதியாக இருக்கும் அவங்களுக்குக் குடியுரிமை வேணும்ன்னு யாரும் கேக்கலையே ?'
இந்த எண்ணம் எந்த அரசியல்வாதிக்கு இத்தனை நாள் வந்தது ? ஆம் திடீர் என்று வந்தது.... அவர்களின் தேர்தல் அறிக்கையில்....
இதற்கு விதை நான் போட்டது எனத் தலைவர் credit எதிர்பார்க்க மாட்டார். காரணம், மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நல்லது நடந்தாலே போதும் என்று எண்ணுபவர் இவர்.
களம் இறங்காமல் களம் எப்படி இயங்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் அவர்.... களம் இறங்கினால் ......
காவலர்களே தயாராக இருங்கள்.... தலைவரின் வழி, என்றுமே தனி வழி தான்....
வாழ்க தமிழ் !
வாழ்க தமிழக மக்கள் !!
ஜெய் ஹிந்த் !!!
- விக்னேஷ் செல்வராஜ
|