இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ரஜினி, தன்னை காட்டிலும், இசையமைப்பாளர் இளையராஜா கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்திருப்பதாக தெரிவித்தார். இசைக் கலை விழாவில் அவர் பேசியதாவது, " அனைத்து கலைகளிலும் சிறந்த கலை இசைக் கலை தான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசை கலை தான். அதனால் இசை கலைஞர்கள் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு.
லிங்கங்கள் மூன்று வகைப்படும். நீர் லிங்கம், மனிதனால் உருவாக்கப்படும் லிங்கம், மற்றும் சுயம்பு லிங்கம். இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர், அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும். அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன்.
நான், அவரை சார்னு தான் கூப்பிடுவேன். ஒரு வருட இடைவெளிக்கு பிறகு அவரை ஒருநாள் பார்த்த போது, பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறியிருந்தார். அப்போது முதல் அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். என்னை அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார், மன்னன் படத்தில் என்னை பாட வெச்சார். அதுவெறும் ஆறு வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு ஆறு மணி நேரம் ஆனது.
எனக்கு நிறைய பாடல் போட்டிருக்கார். ஆனால், என்னை விட கமலுக்கு தான் நிறைய ஹிட் பாடல் கொடுத்திருக்கார்" என ரஜினி கூறினார். அப்போது குறிக்கிட்ட இளையராஜா, "இவர் இப்படி சொல்கிறார். கமலை கேட்டால் ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார்" என பதில் தந்தார். பின்னர் மேடைக்கு வந்த கமல்ஹாசனும் இளையராஜா சொன்னதை அமோதித்தார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுஹாசினி மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள் ஒருவர் நடிப்பில் சூப்பர் ஸ்டார் இன்னொருவர் இசையில் சூப்பர் ஸ்டார் என்று கூற அதை மறுத்த இளையராஜா மேடையில் இருக்கிறோம் என்பதற்காக இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று சுஹாசினியை அன்பாக கண்டித்து தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் என்று உறுதியாகக் கூற மைதானம் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலால் அதிர்ந்தது.
|