அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் மீண்டும் தலைவரிடமே வந்து நிற்கிறது தமிழகத் தேர்தல் களம் .
ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் தனியாக மக்களைச் சந்திக்க முடியாமல், கூட்டணி களேபரத்தில் இருந்த போது தலைவர் தனது முதல் அதிரடியை வைத்தார்.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்கும் கட்சிக்கு ஆதரவளிக்கத் தலைவர் வேண்டுகோள் விட்டதும் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு போன்ற தண்ணீர் சார்ந்த வாக்குறுதிகளை அள்ளித்தெளித்தார்கள்.
அதுதான் தலைவர் ரசிகர்களுக்குத் தேவையான வாக்குறுதியை கொடுத்து விட்டோமே , இனி நம்முடைய சொந்த பலத்தில் வேலையைச் செய்யலாம் என்றால் அதுவும் முடியவில்லை.
மீண்டும் தலைவர் பெயரை இழுத்து ஆதாயம் அடைய முடியுமா எனக் கழுகு பார்வையோடு காத்துக்கொண்டு இருந்தார்கள்.
கடைசி நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் ஒரு அதிர்வலை இருக்கும் எனப் பாஜக கருதியது இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.
ஏற்கனவே தங்களை நடுநிலை என அழைத்துக்கொள்ளும் பல பத்திரிகைகள் ஏதோ ஒரு அரசியல் கட்சி சார்புடையதாகவே உலா வருகின்றனர்.
பாஜக தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பு பற்றிக் கூறியுள்ளார்களே! என்று ஊடகங்கள் கேட்டதற்கு, மிக்க மகிழ்ச்சி, மக்கள் அவர்களைத் தேர்தெடுத்தால் இதைத் தான் முதல் வேலையாகச் செய்ய வேண்டும் எனச் சொன்னார் .
அதாவது சென்ற தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதி இந்தத் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றது போல இல்லாமல், இந்தத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
ஆனால் ஊடகங்கள் காட்டியது என்ன?
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவு என்று!!
மீண்டும் அழுத்தமாகக் கூறுகிறேன் , தலைவரை அரசியலுக்கே வரக்கூடாது என முழங்கும் சீமான் அவர்கள் இந்தக் கருத்தை கூறி இருந்தாலும் அதைத் தலைவர் வரவேற்று இருப்பார்.
காரணம் தலைவர் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியலை தேர்ந்தெடுத்தவர் அல்ல. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அதற்கு அதிகாரம் இருந்தால் சிறப்பாகச் செய்ய முடியும் எனக் கருதி இந்த வயதில் அரசியல் சுமையை ஏற்கிறார்.
அதனால் தான் எவர் நல்லது செய்தாலும் மனம் உவந்து பாராட்ட முடிகிறது அவரால்.
ஆனால் அரசியல் காழ்புணற்சி கொண்ட கட்சிகள் என்ன செய்தன ??
திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பை செயல்படுத்துவோம் எனக் கூறியதை மறந்து விட்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினி அவர்களுக்கு மட்டும் தான் புரியும் என உணர்ச்சிவசப்படுகிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள்.
அடுத்த நாளே ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ரஜினி அவர்கள் என்றுமே சூப்பர் ஸ்டார் , அவர் பாஜகவை ஆதரிப்பதாகக் கருதவில்லை, பொதுவான கருத்தாகச் சொல்லி இருப்பர் எனக் கூறி "ஜகா" வாங்குகிறார்... (முதல்ல ஸ்டடியா நில்லுங்க சாரே !!).
ஒரு வேளை எடப்பாடி சார் கிட்ட மோதியே 40/40 வருமான்னு உறுதியா சொல்லமுடியாத நிலை.... இதுல தலைவர் வேற வராரு ?? அதனால இப்போ இருந்தே ஒரு தொலைநோக்கு பார்வையில செயல்படுறாரோ ??
சீமான் இவரை விட ஒரு படி மேலே சென்று ஆறுகளை இணைக்கவே முடியாது !! அதை அதன் போக்கில் போக விட வேண்டும், நதிநீர் இணைப்பு சாத்தியமே இல்லை என்று கூறுகிறார்.
அது சரி, எல்லா மேடையிலும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் எனப் பிரிவினைவாதம் பேசும் அவர் "இணைப்பு" பற்றிப் பேசுவார் என எப்படி எதிர்பார்க்க முடியும் ?
இவரும் இவரது 'தும்பிகளும்' தான் இத்தனை நாட்களாக, காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் யாரும் அணை கட்டவில்லை எனக் கம்பு சுற்றிக்கொண்டு இருந்தார்கள் என்பது கூடுதல் தகவல் !!
தலைவரை திட்டுவதால் மட்டுமே அவரது பிழைப்பு ஓடிக்கொண்டு இருப்பதால், ஏதாவது சொல்லி முட்டுக்கொடுத்து ஆக வேண்டுமே !!!
இதைவிடக் கொடுமை நமது அரை நூற்றாண்டு நண்பர் செய்தது.
மற்ற கட்சிகள் எல்லாம் தண்ணீர் பிரச்னையை முன்வைத்து தலைவரின் காவலர்களின் ஆதரவை பெற மறைமுக முயற்சி செய்து கொண்டு இருக்கையில், இவரோ ஒரு படி மேலே சென்று, ரஜினி எனக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார் எனப் புதுக் குண்டை போட்டார்.
(ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன், ஆதரவு அளித்தால் நல்லது, நான் கேட்காமல் கொடுக்க வேண்டும், ஆதரவு தருவதாகச் சொல்லிவிட்டார் எனப் பல பரிணாம வளர்ச்சி இதில் அடங்கி உள்ளது )
ஆதரவு தருவீர்களா எனக் கேட்ட போது "கண்டிப்பாக" எனக் கூறியதாகக் கூறும் அவர், இந்தத் தேர்தலில் எவருக்கும் ஆதரவில்லை என "கண்டிப்புடன்" அறிக்கையாகக் கூறியதை மறந்து விட்டாரோ ?
அப்படியானால் தலைவர் அவரிடம் பொய் கூறினாரா ?
எதிரியை கூடப் பாராட்டும் தலைவர் தன்னுடைய நண்பனை கைவிடுவாரா ?
மக்கள் நீதி மையம் ஓராண்டு நிறைவு செய்த போதே வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மக்களுக்காக எடுக்கப்படும் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் தலைவரின் ஆதரவு உண்டு.
ஆனால் அவர்களது ரசிகர்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் கூட்டம் அவரது "ஆதரவு" என்ற ஒரு வார்த்தையில் திசை மாறி விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதால் வாழ்த்துக்களோடு நின்று விட்டார்.
கவலைப்படாதீங்க சார், நாங்களும் எங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம் !!!
எதிர்ப்பு அரசியல் செய்யப்போவதில்லை , நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மட்டும் கூறி வாக்கு கேட்க போகிறேன் என்ற முடிவில் தலைவர் உள்ளார்.
அவரின் வழியில் செல்வதால், எவர் மீதும் தாக்குதல் செலுத்தாமல், அவர்கள் முன்னர் கூறிய நிலையையும் இப்போதைய நிலையையும் அவர்கள் அடித்த அந்தர் பல்டியையும் மட்டும் சுட்டிக்காட்டி இருக்கிறோம் !!
வாழ்க தமிழ் !
வளர்க தமிழக மக்கள் !!
ஜெய் ஹிந்த் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|