 தமிழக அரசின் ஐந்தாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தலைவர் பற்றிக் குறிப்பிட்டு இருந்தது பலரின் வயித்தெரிச்சலை கிளப்பி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இதுவரை என்னமோ யாரையுமே சேர்க்காதது போலவும், முதல் முறையாகத் தலைவரை சேர்த்தது போலவும் இவர்கள் கொந்தளித்துக்கொண்டுள்ளார்கள்.
இது 100% வயித்தெரிச்சல் அன்றி வேறில்லை.
இதற்கு முன்பும் பல்வேறு அரசியல் தலைவர்கள், மற்ற தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்கள் பற்றிப் பலமுறை வந்துள்ளது. அதுபோலத் தற்போது தலைவர் பற்றி வந்துள்ளது.
தலைவர் பற்றி ஏற்கனவே CBSE பாடத்திட்டத்தில் 2008 ல் வந்துள்ளது. அப்போதெல்லாம் எதிர்க்காதவர்கள் தற்போது எதிர்க்கிறார்கள் என்றால், அரசியல் அன்றி வேறில்லை.
இதில் இவர்களுக்கு என்ன பிரச்னை?
உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் ஏழையாக இருந்து தங்களுடைய கடும் உழைப்பால் பலரும் வியக்கத்தக்க அளவில் முன்னேறியவர்கள் பற்றிப் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்து இதில் சேர்த்து இருக்கிறார்கள்.
அதில் இந்தியாவில் இருந்து திரைத்துறையில் சாதனை செய்த தலைவரை இதில் தற்போது சேர்த்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு மக்கள் திலகத்தையும், நடிகர் திலகத்தையும் சேர்த்து இருக்கிறார்கள்.
ரஜினி என்ன செய்து விட்டார்?
பலருக்கு பொழுதுபோக்குத் துறை என்றாலே நக்கலாக உள்ளது. அதுவும் மற்ற துறைகளைப் போல ஒரு துறை ஆனால், இதில் கிடைக்கும் புகழ் மற்ற துறைகளில் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. இதுவே பலரின் கண்ணை உறுத்தக்காரணம்.
மக்களுக்கு உழைத்தவர் தான் சாதனையாளர் என்பதல்ல, தன்னுடைய துறையில் சாதித்தவரும் சாதனையாளர் தான்.
எடுத்த உடனே தலைவருக்கு நடிக்க எளிதாக வாய்ப்புக் கிடைத்து விடவில்லை.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கார்பெண்டர் வேலையைச் செய்து பின்னர் பேருந்து நடத்துனராக இருந்து, நண்பர்களின் ஆலோசனையால் திரைத்துறைக்கு முயன்று, இதற்கு என்று உள்ள படிப்பை கற்று முறையாக நடிக்க வந்துள்ளார்.
இது மட்டுமே தகுதியாகாது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விஷயம்.
ஆனால், இது போல வந்தவர்கள் எத்தனை பேர் இவ்வளவு வருடங்கள் தாக்குப் பிடித்துள்ளார்கள், அதே புகழோடு இருந்துள்ளார்கள்? இருக்கிறார்கள்? நிலை உயர்ந்தும் தன்னிலை மறக்காமல் அதே பணிவுடன் இருப்பது எத்தனை பேர்?
தன் துறையில் தன்னை ஆளாக்கியவர்கள் ஒரு கட்டத்தில் சிரமத்தில் இருந்த போது அவர்களுக்காக ஒரு படம் எடுத்து லாபத்தை அவர்களுக்குப் பகிர்ந்தவர்.
தன்னால் ஒரு படம் நட்டம் என்றால், தன்னுடைய பணத்தைக் கொடுத்து நட்டத்தை ஈடு கட்டியவர்.
40 வருடங்களுக்கு மேலாக இக்கால நடிகர்களின் போட்டிகளையும் கடந்து முதலிடத்தில் தொடர வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதான காரியம் என்று நினைக்கிறார்களா?
தமிழகத்தின், சென்னையின் அடையாளம்
இன்றும் பலரும் இந்தியா, சென்னை என்றால் ரஜினி தான் தெரியும் கூறுகிறார்கள். அது வட இந்தியாவில் இருந்து என்றாலும், இந்தியாக்கு வெளியே என்றாலும் இதே நிலை தான்.
இன்றும் இந்திய முழுக்க வெளியிடும் அடையாளங்களில் சென்னையின் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக தலைவரின் படத்தையும் சேர்க்கிறார்கள்.
இதெல்லாம் எளிது என்று நினைக்கிறீர்களா?
ரஜினி தமிழகத்தின் பெருமை.
தமிழின் எல்லையை விரிவுபடுத்தியவர்
தன்னுடைய படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் எல்லையை விரிவுபடுத்தி அதன் மூலம் அதன் பிறகு மற்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு வியாபார எல்லையை விரிவுபடுத்தினார்.
தமிழே தெரியாத நாடுகளில் கூடத் தமிழைக் கொண்டு சேர்த்தார். ஜப்பானில் தமிழ் ஆர்வமாகப் பேச கற்றுக்கொள்ளத் தூண்டுகோலாக இருந்தார்.
தலைவர் நடித்த 2.0 படம் சீனாவில் இதுவரை எந்த இந்தியப் படமும் செய்து இராத அளவுக்கு மிக அதிக அளவிலான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
அடுத்ததாக முதல் முறையாக ரஷ்யா மொழியிலும் 2.0 படம் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் தமிழராக நமக்குப் பெருமையில்லையா?!
ஏற்கனவே, கபாலி "மலாய்" மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போலத் தமிழ் மொழியின் பெருமையை உலங்கெங்கும் கொண்டு செல்ல தான் முக்கியக் காரணியாக இருக்கிறார்.
அப்போதைய நம்முடைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் ஜப்பான் சென்றது போது தலைவர் குறித்து ஜப்பான் பிரதமரே பாராளுமன்றத்தில் பேசி சிறப்புச் செய்து இருக்கிறார்.
மலேசியா பிரதமர் சென்னை வந்த போது தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
தலைவரை தமிழர் இல்லையென்று விமர்சிக்கும் எத்தனை பேர் தலைவர் செய்தது போலத் தமிழுக்காகச் செய்து உள்ளார்கள்? கடல் கடந்து தமிழைக் கொண்டு சென்றுள்ளார்கள்?
பொறுப்பில் உள்ளவர்கள் செய்யாத ஒரு செயலை தன்னுடைய துறையின் மூலம் செய்வது எளிதான செயல் அல்ல.
இந்தியா என்றாலே பாலிவுட் என்று இருந்ததை, தனது எந்திரன் படத்தின் மூலம் மாற்றிக்காட்டினார். இந்தியாவில் தமிழ் என்ற பிராந்திய மொழி திரைப்படம் இருப்பதே பலருக்கு தெரிய வந்ததே எந்திரன் படம் வந்த பிறகு தான்.
இன்றளவும் பாலிவுட் படங்களுக்கு இணையாக உலகளவில் தமிழ் சென்று சேர்ந்துள்ளது என்றால், அது மிக முக்கியக் காரணங்களுள் ரஜினியும் ஒருவர்.
தன்னுடைய ரசிகர்களை / காவலர்களை நல்ல எண்ணங்களைக் கூறி வளர்த்ததால் தான், தமிழகம் முழுவதும் தண்ணீரை மக்களுக்குக் கொடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.
நல்ல கண்ணு அவர்களை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். ஏன் என்றால், அவர் நல்லவர் என்று கூறுகிறார்கள். நல்லவர் என்பது மட்டுமே தகுதியாகி விடாது.
நல்லகண்ணு நேர்மையான அரசியல்வாதி தான் அதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை ஆனால், அவரையும் சேருங்கள் என்று கேளுங்கள் ரஜினியை ஏன் சேர்த்தீர்கள் என்று கேட்க வேண்டாம்.
ரஜினி என்றாலே கொந்தளிப்பது சீமான்வழக்கம். சீமான் பற்றிக் கூறுவதற்கு நிறைய இருக்கிறது. நேர்மறை எண்ணங்களையே பேசுங்கள், நினையுங்கள் என்று தலைவர் அறிவுறுத்தி உள்ளதால், இவர் பற்றி மேலும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.
பள்ளி சிறுவன் யாசின் 50000 பணத்தைக் கண்டு எடுத்து அதை நேர்மையாக ஒப்படைத்த போது, அனைவரும் அவனைப் பாராட்டி உன்னுடைய விருப்பம் என்று கேட்ட போது "நான் ரஜினி அவர்களைச் சந்திக்க விரும்புகிறேன்" என்று கூறினான்.
இச்சின்ன பையன் தலைவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தது ஒன்றே போதும் ரஜினி எப்படி முன்னுதாரணமாக இருக்கிறார் என்று.
கண்ணா! தலைவர் பற்றி ஏன் பாடத்தில் ஏன் சேர்த்தார்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, நாம் அது போலப் புத்தகத்தில் வர என்ன சாதனை செய்யலாம் என்று யோசியுங்கள்.
நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும். எதிர்மறை எண்ணங்களை விட்டொழியுங்கள், நீங்களும் முன்னேறலாம், சாதிக்கலாம்.
- கிரி
|