கடந்த இரு மாதங்களாக ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்காகப் பொதுமக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல் நாள் தண்ணீர் லாரியில் கொடுத்த போது, இன்னும் ஓரிரு நாட்களில் நிறுத்தி விடுவார்கள் என்றே பலரும் நினைத்தனர் ஆனால், அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் 50 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
துவக்கத்தில் ஒரு மாவட்டத்தில் ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாகின. இதில் சிறப்பு என்னவென்றால், தலைவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லையென்பதே.
தலைவர் முன்பே, தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்யுங்கள், இதற்காக உங்களைச் சிரமப்படுத்திக்கொள்ளாதீர்கள் அறிவுறுத்தி இருந்தார்.
தற்போது கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சேவைகள் தலைவரின் நேரடி கட்டளையில் இல்லாமலே மக்கள் மன்றத்தினர் முன்னின்று அவரவரே நடத்தி வருகின்றனர்.
"என் ரசிகர்களுக்கு யாரும் அரசியல் சொல்லித்தர வேண்டியதில்லை" என்று தலைவர் கூறினார். அப்போது கூட "என்னடா தலைவர் இப்படிச் சொல்றாரே!" என்று தோன்றியது.
ஆனால், அவர் தன் காவலர்கள் மீது வைத்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மையானது என்பதை நேரடியாகக் காணும் போது மிகப் பெரிய வியப்பை தருகிறது.
அரசியல் கட்சிகளை விடக் கட்சி துவங்காத அமைப்பு முழுக் கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் சலிப்படையாமல் 50 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டு இருப்பது சாதாரணச் செயல் அல்ல!
தலைவர் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கட்சி துவங்கவில்லையென்பதால், அவருக்கே உள்ள நெருக்கடிகளுடன் சிலவற்றை அதிகாரப்பூர்வமாகச் செய்ய முடியாமல், அறிவிக்க முடியாமல் உள்ளார்.
கட்சி துவங்கிய பிறகு அவர் கூறும் ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனையும் செய்ய முடியவில்லை.
எதுவுமே சொல்லாத போதே இந்த அளவுக்குக் கலக்கும் மன்றத்தினர் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், தமிழகமே கிடுகிடுக்கும் அளவுக்குச் செய்து அசத்தி விடுவார்கள்.
தண்ணீர் மட்டுமல்ல, மழை நீர் சேகரிப்பு தொட்டி கொடுப்பது, ஏரி குளங்களைச் சீரமைப்பது, மருத்துவ முகாம், ரத்ததானம், அன்னதானம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் என்று மிரட்டி வருகிறார்கள்.
இச்சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைத்து பணிகளும் தலைவரின் கவனத்துக்குச் செல்கின்றன.
ஊடகங்கள் புறக்கணிப்பு
பல ஊடகங்கள் ரஜினி மக்கள் மன்ற சேவைகளைச் செய்தி வெளியிடாமல், தவிர்த்து வருகின்றனர். தினமலர், பாலிமர் போன்றவை குறிப்பிட்டுள்ளன.
"தமிழ் இந்து" சிட்லபாக்கம் ஏரி தூர்வாரும் பணியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பங்கு பெற்றதை மட்டும் குறிப்பாகத் தவிர்த்து செய்தி வெளியிடுகிறார்கள்.
ரஜினி மக்கள் மன்றத்தினர் மட்டுமே இச்சேவையில் ஈடுபடவில்லையென்றாலும், அவர்களின் பங்கும் இருந்தது.
நல்லகண்ணு ஐயா வந்ததால் அவரை மட்டும் குறிப்பிட்டார்கள்.
"புதிய தலைமுறை" வெளியிட்ட காணொளியில் ரஜினி மக்கள் மன்றத்தினரை மட்டும் அதில் தவிர்த்து விட்டு வெளியிட்டுள்ளார்கள். மிக மோசமான செயல்.
ஆனால், ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் தற்போது பலரும் ஆர்வமாக மிகப்பெரிய அளவில் செய்து வருவதால், ஊடகங்கள் தவிர்க்கவே முடியாத அளவுக்கு நிலைமை கை மீறிப்போய் உள்ளது.
அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காகத் தண்ணீர் கொடுத்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு சத்தமே இல்லை.
ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் தங்கள் மன்றத்தினர் பணிகளை அரசியல் காரணமாக ஊடகங்கள் புறக்கணிக்கின்றனர் என்று வருத்தமடைகின்றனர்.
இவர்கள் புறக்கணித்தாலும் மக்களுக்கு உண்மை தெரியும், யார் சேவை செய்கிறார்கள் என்று.
எனவே, ரஜினி மக்கள் மன்றத்தினர் பணிகள் மக்களுக்கும் கடவுளுக்கும் தெரியும், கவலை வேண்டாம்.
இதற்குத் தலைவர் படப் பாடல் வரிகளே பொருத்தமானது.
உன்னைப் பற்றி யாரு அட என்ன சொன்னால் என்ன
இந்தக் காதில் வாங்கி அதை அந்தக் காதில் தள்ளு
மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம்தான் அழுக்காக ஆகாதென்று சொல்லு.
பூப் பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வைத்தாலும்
பந்துவரும் தண்ணி மேலே தான் .
உன்னை யாரும் இங்கு ஓரங்கட்டித்தான் வைத்தாலும்
தம்பி வாடா பந்து போலத்தான்
மூணாம்பிறை மெல்ல மெல்ல முழுநிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா ?
பொய்கள் புயல் போல வீசும் ஆனால், உண்மை மெதுவாய் பேசும்.
அதனால் கவலை வேண்டாம் காவலர்களே! அந்த ஆண்டவனே நம்ம பக்கம்.
நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!!
மகிழ்ச்சி.
- கிரி
|