 அப்போது நான் எட்டாம் வகுப்பு என நினைக்கிறன். அதுவரை பாபா மட்டுமே நான் தியேட்டரில் பார்த்த தலைவர் படம். சில காரணங்களால் சந்திரமுகியை அப்போது தியேட்டரில் பார்க்கவில்லை.
பாபா படம் வந்த போது சுதந்திர நாள் விடுமுறைக்குப் 'படத்துக்குக் கூட்டிட்டு போங்கப்பா' என நான் கேட்டதற்கு 'உனக்கு ரஜினி படத்துக்கு அவ்வளவு ஈஸியா டிக்கெட் கிடைக்கும்னு நெனப்பா?' என அப்பா கேட்டது ஒரு நச் நினைவு.
ஆனால் அழுது புரண்டு ஒரு வாரம் கழித்துப் பள்ளிக்கு விடுமுறை எடுத்து எனது அப்பாவையும் லீவ் போட வைத்து முதன் முதலில் ரஜினி படத்தைத் தியேட்டரில் பார்ததெல்லாம் வரலாறு!!! ( மூன்றாம் வகுப்பிலேயே நீ ரஜினி வெறியன் டா என எனது அம்மா இப்போதும் கிண்டல் அடிப்பார்கள்)
அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்துத் தலைவர் படம் !!! ஏதோ ஒரு feel !!! என்னவென்று அப்போது சத்தியமாகப் புரியவில்லை. தப்பித் தவறி டீவியைப் போட்டால் கூட ரஜினி படம் தான் ஓடும் எங்கள் லோக்கல் கேபிளில்.
அப்படி இருந்த போதும் ஏதோ முதல் முறையாக அவரை நேரில் பார்க்க போகிறோம் என்பது போல ஒரு எதிர்பார்ப்பு !!!
எங்கள் ஊர் ஓசூர் தலைவரின் கோட்டைகளில் ஒன்று. (காலா படத்திற்குத் தலைமை செயலகம் போலத் தியேட்டர் முகப்பை அமைத்தோம் !!) அதனால் சிவாஜி படம் வெளி வரும் முன்பே அந்தத் தீ பற்றிக்கொண்டது .
ஒரு மாதம் முன்பாகவே, எங்கள் நட்பு வட்டத்தில் பேசு பொருள் ஆகி விட்டது சிவாஜி படம். மே மாதம் ஆண்டு விடுமுறையில் கிரிக்கெட்டுக்கு நடுவே சிவாஜி சிவாஜி சிவாஜி மட்டும் தான்.
அதுவும் சரியாகப் பள்ளி திறப்பதற்கு ஒரு நாள் முன்னர் ட்ரைலர் டிவியில் வெளியானது. மிகவும் வசதியாகப் போய்விட்டது !!! பள்ளியில் முக்கியப் பேசு பொருளாகச் சிவாஜி வளம் வந்தது.
"டேய் அதுல அவரு Bachelor of Social Service னு சொல்றாரு டா. அதனால தான் அவரு BOSS " அந்தச் சூயிங்கம் வாயில போடுவாரு பாரு என்று அது போலக் காப்பி அடிக்க முயன்று எத்தனை சூயிங்கம் தரையில் விழுந்தது என்று கணக்கு தெரியவில்லை.
"டேய் அத விட ரஜினி நடந்து வரும் போது பின்னாடியே ரோடு வரும் டா, முக்கியமா ரஜினி டபுள் ஆக்ட் டா. ஒரு வெள்ளை ரஜினி , பயங்கரக் கருப்பு ரஜினி அப்புறம் ஒரிஜினல் ரஜினி. !!! (ரஜினியையே ஒரிஜினல் டூப்ளிகேட் ரஜினி எனப் பிரித்த பெருமை என்னையே சாரும் !!!) அதே மாறி சந்திரமுகில வர மாறி ராஜா கெட்டப்ல கூட வராரு" என அவர் அவர் கற்பனை குதிரையையும் பறக்க விட்டோம்.
எனக்கு ட்ரைலரிலேயே மிகவும் பிடித்த விஷயம் அந்தக் கடைசி நொடி தான். துப்பாக்கியை தோள் வழியாக வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றுவார். (தீ தீ தீ பாடல்). அது என்னை என்னவோ செய்தது.
ட்ரைலர் போடும் போதெல்லாம் அந்த ஒரு காட்சிக்காகவே பார்ப்பேன். பாடத்தைப் பார்க்க வேண்டும் எனத் துடியாய்த் துடித்தேன்.
அந்த நாளும் வந்தது.......
காலாவுக்குத் தலைமை செயலகம் அமைத்த அதே தியேட்டர் தான்!!! ஆனால் இம்முறை தியேட்டரை விட உயரமான மொட்டை பாஸ் கட்டவுட் !!!
ஓஹோ ரஜினி ட்ரிபிள் ஆக்ட்டிங் இல்லை... 4 ரோல் போல என ஒரு பூரிப்பு. விடிந்தால் சிவாஜி தரிசனம்.... அப்போது எனது அப்பா அதே வசனத்தை அச்சுப் பிசகாமல் சொன்னார்.... 'உனக்கு ரஜினி படத்துக்கு அவ்வளவு ஈஸியா டிக்கெட் கிடைக்கும்னு நெனப்பா ?'
தூக்கி வாரி போட்டது எனக்கு. அழுதேன் , புரண்டேன்... சாப்பிட மாட்டேன் என அடம் ... ஆனால் தலைவர் படத்திற்கு டிக்கெட் கிடைப்பது எவ்வளவு அரிது என இப்போது தான் புரிகிறது. கனத்த இதயத்தோடு அடுத்தநாள் பள்ளிக்குப் பேருந்தில் ஏறினேன்.
ஓசூரில் வரலாற்றில் முதல் முறையாக 3 தியேட்டரில் ஒரே படம் ரிலீஸ் ஆகிறது. எனது போதாத காலம் எனது பேருந்து அந்த மூன்று தியேட்டரையும் கடந்து செல்லும்...
அனைத்து இடத்திலும் தோரணம், வெடி வெடித்துத் தியேட்டர் முன்னால் அப்படி ஒரு குப்பை, அடுத்த ஷோவிற்குக் காத்திருக்கும் கூட்டம் என வழியெங்கும் சிவாஜிமயம் !!!
அன்று எனது பள்ளியில் எல்லாரும் ப்ரெசென்ட். அதனால் ஒன்றும் தெரியவில்லை. சிவாஜியை பற்றிய பேச்சில் அன்றைய நாள் கடந்து விட்டது. ஆனால் சனி ஞாயிறு விடுமுறையில் ஒரு கூட்டம் படத்தைப் பார்த்து விட்டது!!!!
டேய் நாலு ரஜினி இல்லடா , ஒரே ரஜினி தான் டா என ஆரம்பித்து மொட்டை பாஸ் டா , சிங்கம் சிங்கிளா வரும் டா என அவர்கள் விளக்கிய ஒவ்வொரு காட்சியும் எனக்குள் வெறி ஏற்படுத்தியது...
பிறகென்ன, மீண்டும் வரலாறு தான். பள்ளிக்கு விடுமுறை போட்டுப் போகலாம் என முடிவு செய்து, அரை நாள் விடுமுறை எடுத்து மாலைக்காட்சியில் அமர்ந்தோம்.
படம் என்றால் எப்படிப் பார்க்க வேண்டும் என்று அன்று தான் எனக்குப் பாடம் எடுக்கப்பட்டது.
விசில் அடிக்கத் தெரியாத பருவம் என்பதால் கத்தி கத்தி தொண்டை கிழிந்தது. எல்லாரும் தியேட்டரில் ஆடும் போது நாள் பல்லேலக்கா பாடலை மனப்பாடமாக Tune னோடு பாடிக்கொண்டு இருந்தேன்.
அப்போது தான் படம் பார்த்த அனுபவம் என்ன என்பதையும், ஏன் ரஜினி படம் என்றால் திருவிழா என்பதும் புரிந்தது.
படம் முடிந்ததும் நாளைக்கு ஒன்ஸ் மோர் போலாமா டாடி என நான் கேட்க நாளைக்கு ஆபிஸ் இருக்கு, சண்டே போலாம் எனக் கூறியவாறே நகர்ந்தார் அந்த அப்பாவி தந்தை.
சிவாஜி is not just a movie........ It's an Experience and Emotion !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|