 தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜா.க தலைவர் முன்பாக பாசிச பா.ஜா.க ஒழிக என்று முழங்கிய சோபியா எனும் மாணவியை விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினி கருத்து கூற மறுப்பு - செய்தி.
மன்னிக்க வேண்டும் தலைவா. இந்த செய்தியை பார்த்த உடன் உங்கள் ரசிகனான எனக்கு கோவம் தான் வந்தது.
43 வருட சினிமா அனுபவம், அதில் 40 வருடமாக SUPERSTAR அந்தஸ்து..... என்ன பிரயோஜனம். ஒரு சிறிய விஷயத்தில் உங்களுக்கு நடிக்கத் தெரியாமல் போய்விட்டதே.
இது நீங்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கூறிய கருத்தத்துக்கு முன்னாள் காவல் துறை ஆய்வாளர் திரு.சித்தண்ணன் அவர்கள் "தந்தி டிவி" நிகழ்ச்சியில் கூறியது.
நான் கடுமையாக இதை வழி மொழிகிறேன்.
உங்களுக்கு ஏன் அரசியலில் இந்த வேண்டாத வேலை. அரசியலுக்கு வந்தோமா, மீம்ஸ் போடுற நாலு பேரு சொன்ன கருத்தையே உணர்ச்சிவசமா சொன்னோமா, ஓட்டு வாங்குனோமா, ஜெயிச்சோமான்னு போகுறதை விட்டுட்டு, மாற்றம் வேணும்னு ஏன் நினைக்குறிங்க.. கருத்து சொல்லு தலைவா, அமைதி பேரணி நடத்துன அண்ணன்அழகிரி கிட்ட சோபியா பத்தி கேக்காம உங்க கிட்ட கேட்டா தான் "T.R.P" எகிறும்னு கணக்கு போட்டு கேக்குற மீடியா பசிக்கு கருத்து சொல்லு தலைவா.
இந்தியாவிலேயே சிறந்த பஞ்சாயத்து மாடல் என்ற விருது வாங்கிய, முற்றிலும் லஞ்சம் ஊழலை ஒழித்துக் கட்டியதாக பாராட்டப்பட்ட ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் திரு. சண்முகம் அவர்களை நீங்கள் பார்த்ததை செய்தியாக போடாமல், நீங்க கருத்து சொல்லலைனு Headlines போடுறாங்களே, அந்த நான்காம் தூணிற்கு கருத்து சொல்லுங்கள் தலைவா.
நம்ப ஊருல நெறைய பேருக்கு "ஆன்மீகத்துக்கும்", "மதத்துக்கும்" வித்யாசம் தெரியல. அவங்க கிட்ட போய் 'நான் லஞ்சம் ஒழிப்பை பத்தி ஆக்கப்பூர்வமான விவாதம் பண்ணினேன்னு' சொன்னா கண்டுக்கவே மாட்டாங்க.
இந்த மாதிரி சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்குற விஷயத்துக்கு "நானும் சமூக விரோதி தான்", "நானும் அரசியல்வாதி தான்"னு ஊருக்கு முன்ன தம்பட்டம் அடிக்கணும். அதை பண்ணுறவன் தான் நியாயஸ்தன்னு ஒரு குரூப் சொல்லிட்டு தெரியுது. ஆனா நீங்க என்னடானா நியாமான அரசியல்வாதியா இருந்து, மாற்றம் கொண்டு வரணும்னு நெனைக்குறிங்க.
"உனக்கு ஏன் இந்த அக்கறை ? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை"னு பராசக்தி படத்துல நடிகர் திலகம் பேசுனது தான் எனக்கு ஞாபகம் வருது.
பா.ஜா.க வ திட்டி பேசுனா அது உங்க அரசியல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு உதவும்னு சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இந்த எடத்துல அரசியல் நாகரிகம் காக்குறிங்களே தலைவா. நரம்பு புடைக்க பேசி உணர்ச்சியை தூண்டிவிட்டு கலவரம் ரேஞ்சுக்கு கொண்டுபோறது தானே மத்த அரசியல்வாதிகள் ஸ்டைல்.
உங்க பட விழாவுக்கு வந்து ஒரு விபத்துல சிக்கி அவரோட காலை இழக்குறாரு உங்க ரசிகர் ஒருத்தர்.அவருக்கு பண உதவி செஞ்சி, குழந்தை படிப்பு செலவு ஏத்துக்கிட்டு இருக்கீங்க. அதை facebook , twitter னு புபிளிசிட்டி பண்ணாம ஏன் இவ்ளோ நல்லவரா இருக்கீங்க. அப்டி இருந்தா நீங்க பெங்களூருல factory கட்டிவிட்டு தமிழக மக்களை ஏமாத்திதிங்கனு புரளியை கெளப்பிவிடுவாங்க.
லட்சுமி னு ஒரு குறும்படம் வந்த போது அது புரட்சிப்படம்னு புளங்காகிதம் அடைஞ்சவன் எல்லாம் அபிராமி விஷயத்துல சமூக பாதுகாவலன் ஆகிட்டாங்க. நேத்து சோபியா வந்த ஒடனே அவங்களுக்கு மீம்ஸ் போட வேற ஒரு கான்செப்ட் கெடச்சது .
ஆனா மனைவியையும் குழந்தையையும் இழந்து ஒரு கணவன் தவித்துக்கொண்டு இருக்கிறார். அவரை நாம் சந்தித்து ஆறுதல் கூறலாம்னு உங்களுக்கு மட்டும் தானே தலைவா தோணுச்சு. அது நெறைய பேருக்கு புரியாம, நீங்க அவரோட வீட்டுக்கு போய் இருக்கணும்னு சொல்றாங்க..
ஆமா தலைவா, நீங்க அவர் வீட்டுக்கு போய், அங்க மக்கள் கூடி, துக்கம் விசாரிக்க போன இடத்தை, ஒரு விழா மாறி ஆக்கி, ரஜினி இதை பப்லிசிட்டிக்காக பண்றாருனு இவர்களே சொல்வாங்க.
நீங்க நல்லது பண்ணாலும் அதுல குறைய தேடி கண்டு பிடிக்க ஒரு கூட்டம் இருக்கு. குறையே இல்லனா கூட, ரஜினி என்கிற ஒரே காரணத்திற்காக சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு கூட்டமும் இருக்கு. இவர்களுக்காக ஏன் தலைவா நீங்க உங்க பெயர் கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று நாகரிகமான ,ஆக்கப்பூர்வமான அரசியல் பண்ணனும்னு நெனைக்குறிங்க?
எனக்கு தெரியும்...
மக்கள் எதிர்பார்ப்புக்கெல்லாம் ஆடுபவன் தலைவன் அல்ல, மக்களுக்கு ஏற்றவற்றை செய்பவனே தலைவன். உணர்ச்சிவசமாக பேசிப் பேசியே, செயலில் சாதிக்காமல் உள்ள இந்த சமுதாயத்தை, ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவன் நீங்கள். மாற்றம் வேண்டும் என்று வாயால் மட்டும் சொல்லாமல் , கட்சிக் கொடி முதல் கட்அவுட் பேனர் வரை கண்ணியம் காக்குமாறு கட்சி தொடங்கும் முன்னே விதியை புகுத்தியவர் நீங்கள்.....
ஊரே எதிர்த்தாலும், ஊரின் நன்மைக்காக நீங்கள் எடுக்கும் முயற்சியில் பின்வாங்க மாட்டீர்கள் . மாற்றத்தைக் காணாமல் நீங்களும் ஓயப் போவதில்லை.... ஏன்னா ....
இது தான் ரஜினி ஸ்டைல்....
- விக்னேஷ் செல்வராஜ்
|