சூப்பர் ஸ்டார் ரஜினி தீவிர அரசியலுக்கு நுழைவதற்க்கு முன்பே, அதாவது அவர் கட்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே அவரை எதிர்த்து எத்தனை பேர் தான் வாய்ச்சவடால் விட்டு கொந்தளிக்கிறார்கள். இதில் சீமான் மட்டுமே ரஜினியை எதிர்த்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் பிரச்சனைகள் அடிப்படையில் அந்த பிரச்சனை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன கருத்து சொல்கிறாரோ அதன் அடிப்படையில் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் கூட இதில் இரண்டாவது வகை தான். சில விஷயங்களில் ரஜினியை விமர்சித்து வரும் திருமாவளவன், சூப்பர் ஸ்டார் ரஜினி தனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை என்று சொன்ன பின், அவரது தூய எண்ணத்தை புரிந்து கொண்டு, அவரை எதிர்க்கும் தனது மன நிலையை முற்றிலுமாக மாற்றி கொண்டார் என்றே தெரிகிறது. கொரோனா சமயத்தில் டாஸ்மாக் விவகாரத்தில் அவை ரஜினியை விமர்சித்தது கூட தான் சார்ந்திருக்கும் கூட்டணி கட்சியை திருப்திபடுத்துவதற்காக தான் இருக்கும். உண்மையில் அவர் ரஜினியின் அரசியல் வருகையையும் எதிர்க்கவில்லை, அவர் முதல்வர் ஆகுவதையும் எதிர்க்கவில்லை என்றே தற்போது ஒரு பேட்டியில் தெள்ள தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அரசியலுக்காக ரஜினியை எதிர்ப்பது எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.
மேற்கொண்டு திருமாவளவன் கூறியதாவது, "ரஜினிகாந்த் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்று நாம் சொன்னால், அவர் இந்தியாவை ஆளுவதர்க்கே வழிவகை செய்வார்கள். அதாவது இந்தியாவின் பிரதமர் ஆவதற்க்கு கூட, இந்தியாவின் பிரதமர் ஆகிவிட்டால் தமிழ்நாட்டையும் சேர்த்து ஆளுகிற நிலைமை வரும். அதாவது தமிழகத்தை ஒரு நடிகர் ஆளக்கூடாது அல்லது ஒரு கன்னடர் ஆளக்கூடாது அல்லது ஒரு மராட்டியர் ஆளக்கூடாது என்பது தமிழகத்தை பொறுத்தவரை ஒரு எடுபடாத முழக்கமாக தான் இருக்கிறது. 25 ஆண்டுகளாக இதை திருமாவளவன் பேசி வருகிறான். இன உணர்வு, மொழி உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டி வருகிறேன். ஒரு தமிழர் முதலமைச்சராக வரவேண்டும் என்று நானும் மேடையில் முழங்கி இருக்கிறேன். ஆனால், நடைமுறை எதார்த்தம் என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இந்த 21ம் நூற்றாண்டில் இன அடிப்படையில், மொழிஅடிப்படையில் அரசியல் ரீதியாக வெற்றியை எட்ட முடியுமா? என்பது கேள்வி குறியாக இருக்கிறது. எம் ஜி ஆரை மலையாளி என்றார்கள். ஆனால் அவரை புரட்சி தலைவர் என்றது தமிழ் சமூகம். ஜெயலலிதா அவர்களை கன்னடர் என்றார்கள், ஆனால் அவரை அம்மா அம்மா என்று அழைத்தது தமிழ் சமூகம். ஆகவே மொழி இன உணர்வுகளை தாண்டி தமிழர்கள் தனக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்து எடுக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்து வருகிறார், திரைத்துறையில் ஆளுமை செலுத்தி வருகிறார். ஆகவே அவரை நாம் அரசியலுக்காக எதிர்ப்பது என்று முடிவெடுத்தால் அதில் நமக்கு எந்த பயனும் கிட்டாது என்பது என் கருத்து."
|