16 fEBRUARY 2011
தலைவருக்கு என்.டி.டி.வி. சார்பாக ‘Entertainer of the Decade’ விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியை பார்த்த ஒவ்வொரு ரசிகனும் ஒரு கணம் நிச்சயம் கண்கலங்கியிருப்பான். ‘ரஜினி ரசிகன்’ என்பதற்கு தன் காலரை ஒரு கணம் தன் தூக்கிவிட்டிருப்பான்.
‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்ற அமுத மொழிகளையும் விஞ்சி, ‘மாபெரும் சபை நடுவே நீ நின்றால், மகுடங்கள் உன்னை தேடி வரவேண்டும்’ என்ற புதிய மொழியை உண்டாக்கியிருக்கிறார் தலைவர்.
2010 ஆம் ஆண்டிற்கு Indian of the year என்ற விருதை தான் தலைவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் சேர்த்து, “Entertainer of the Decade” என்ற விருதை பெற்றபோது, உண்மையிலேயே சரித்திரம் படைத்துவிட்டார் தலைவர்.
இந்த 10 ஆண்டுகளில் எத்துனை ஏச்சுக்கள், பேச்சுக்கள், துவேஷங்கள், ஆரூடங்கள், சதித் திட்டங்கள், ஓரங்கட்டும் முயற்சிகள்…. அப்பப்பா… நினைத்தாலே ஒரு கணம்…. தலை சுற்றுகிறது. அத்துனையையும் அனாயசமாக ஓரமாக தள்ளிவிட்டு, சத்தியத்தின் வழி நின்று தான் பாட்டுக்கு தன் வேலையை செவ்வனே செய்ததால் இந்த நிலையை அடைந்திருக்கிறார் தலைவர்.
அமைச்சர் சிதம்பரத்தை சூப்பர் ஸ்டாருக்கு விருது பெற அழைத்து, பின்னர் அவரை பற்றி சில வார்த்தைகள் பேசுமாறு கேட்டுக்கொண்டபோது, “1996 லேயே அவருக்கு மிகப் பெரிய வாய்ப்பு வந்தது. அப்போதே அவர் நினைத்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கலாம்.” என்று கூற, அதற்க்கு பிரணாய் ராய், “அரசியல் மிகவும் சென்சிடிவ் என்பதால் அவர் தயங்குகிறாரா?” என்று கேட்க, அதற்க்கு சிதம்பரம், “அவர் தயங்குகிறார் என்பதாலேயே அவர் வரமாட்டார் என்பது பொருளல்ல. இப்போது வந்தாலும் அவர் சரித்திரம் படைப்பார்” என்று கூறியதில் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.
“2011 இல் நான் முதல்வர்” என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாள் குறித்துவிட்டு, தற்போது “2016 இல் நிச்சயம் நான் முதல்வர்” என்று வருடத்திற்கொரு ஆரூடம் கூறிக்கொண்டிருக்கும் செல்வாக்கு(!) மிக்க நடிகர்களிடையே சூப்பர் ஸ்டார் குறித்து சிதம்பரம் கூறிய வார்த்தை தான் எத்துனை அர்த்தம் பொதிந்தது.
பிரணாய் ராய் தலைவரை எப்படி அழைத்தார் தெரியுமா? “ஒரு முக்கியமான நபருக்கு இந்த ‘ENTERTAINER OF THE YEAR’ விருதை அளிக்க விரும்புகிறேன். மிகப் பெரிய, கற்பனைக்கு எட்டாத வெற்றிக்கிடையேயும் எளிமையாக அடக்கமாக இருக்கும் நல்ல மனிதர் இவர். இந்த 2010 ஆம் ஆண்டில் — ஒரு படத்தை தயாரித்து — அது அதிகாலை 4.00 மணிக்கு ஹவுஸ்புல்லாகும் அதிசயத்தை — அதுவும் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களுக்கு உங்களால் நம்ப முடிகிறதா? என்னுடன் அந்த விருதை அளிக்க திரு.ப.சிதம்பரத்தை அழைக்கிறேன். ஒரே ஒரு ரஜினிகாந்துக்கு.”
தலைவர் மேடை ஏறியதும், பிரணாய் ராய் விருது பெற்ற பிற பாலிவுட் பிரபலங்களான அஜய் தேவ்கான், கத்ரீனா கைப், வித்யா பாலன் மற்றும் த்ரிஷா ஆகியோரையும் மேடைக்கு அழைத்து சூப்பர் ஸ்டாரை பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசவைத்தது எதிர்பாராதது.
விருதை பெற்றுவிட்டு, உரையாற்றுகையில் ஒரு கணம் கண்கலங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார். “இந்த பெயரும் பெருமையும் என் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு தான் போய்சேரவேண்டும். எனக்குள் இருந்து என்னை ஒரு கருவியாக இயக்கும் இறைவனுக்கு நன்றி” என்றார் கண்கலங்கியபடி. அவர் ஏதேதோ பேச நினைத்து, கடைசியில் எமோஷனலாகி பேசமுடியாது நின்றுவிட்டார். அந்த இடத்தில் அப்படி ஒரு சூழலில் உண்மையில் யாருக்குமே பேச வராது. வரவே வராது.
“நீங்கள் அடுத்து எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோரை பின்பற்றி அரசியலுக்கு வருவீர்களா?” என்று அரசியல் பிரவேசம் குறித்து, விடை பெறும்போது பிரணாய் ராய் கேட்டபோது, “No comments on politics please. Thank you!” என்று கூறி அந்த கேள்வியையே அழகாக தவிர்த்துவிட்டார் தலைவர்.
“இந்தியாவுக்கு மட்டுமல்ல… உலகத்துக்கே அவர் மிகப் பெரிய நடிகர்” - அஜய் தேவ்கான்
“அவருடன் நிற்கிறேன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை” - வித்யா பாலன்
“ரஜினியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பதையே என் அம்மா பெருமையாக கருதுகிறார்” - கத்ரீனா கைப்.
— இப்படி கூறி தங்கள் பங்கிற்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் நட்சத்திரங்கள்.
* நிகழ்ச்சி நடந்த ஹால் முழுதும் வி.வி.ஐ.பி.க்களால் நிரம்பியிருந்தது.
* சூப்பர் ஸ்டார், தமது துணைவியாருடன் வந்திருந்தார்.
* த்ரிஷா மற்றும் அவரது அம்மா உமா கிருஷ்ணனும் வந்திருந்தார்கள்.
* பீகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய பிரதேஷ முதல்வர் சிவாராஜ் சௌகான், மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவான், மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், ப.சிதம்பரம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
* வித்யா பாலனின் தாயாரை மேடைக்கு சூப்பர் ஸ்டாருடன் நின்று போஸ் கொடுக்க அழைத்த போது, கூச்சத்தில் மறுத்துவிட்டார்.
* சூப்பர் ஸ்டாரின் பெயரை அழைத்தபோது, அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டியது கவனிக்கத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. அனைவரும் சூப்பர் ஸ்டார் மீது வைத்திருக்கும் இந்த அன்பிற்கும் மரியாதைக்கும் காரணம் அவர் சிறந்த வெற்றியாளர் என்பதால் மட்டுமல்ல. நல்ல மனிதர் என்பதாலும் தான்.
வெறும் ‘வெற்றி’ என்பது வாசமில்லா மலர் போன்றது. அதை பார்க்கலாம்; ரசிக்கலாம்; நுகர முடியாது. ஆனால், அந்த வெற்றி, நற்குணங்களால் அலங்கரிக்கப்படும்போது, அது மணம் வீசும் அழகிய மலராகிவிடுகிறது. அனைவராலும் போற்றப்படுகிறது.
“தமிழர்களுக்கு பெருமை தரும்படி செய்வேன்” ன்னு தலைவர் சொன்னாரு. செஞ்சி காட்டிட்டாரு.
சாத்தியமாக்கிய இறைவனுக்கு நன்றி.
|