'நான் பார்த்த முதல் கிறிஸ்தவ திருமணம்!- ரஜினி மகிழ்ச்சி
சென்னை: சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொழில் அதிபர் வி.ஜி.செல்வராஜ் மகன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 'தனது வாழ்த்துரையில், நான் பார்த்த முதல் கிறிஸ்தவ திருமணம் இதுவே!' என்று குறிப்பிட்டார் ரஜினி.
வி.ஜி.பி. குழும துணை தலைவர் வி.ஜி.செல்வராஜ் மற்றும் வத்சலா தேவி செல்வராஜ் ஆகியோரின் மகன் வி.ஜி.எஸ்.பரத்ராஜுக்கும், ஏ அண்டு எஸ் குழுமத்தை சேர்ந்த பி.ஆறுமுகம்-தங்கம் ஆறுமுகம் ஆகியோரின் மகள் ஏ.சாந்திக்கும், சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று மாலை 6 மணிக்கு திருமணம் நடைபெற்றது
வி.ஜி. குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் தலைமை தாங்கினார். வி.ஜி.பி.யுனிவர்சல் கிங்டம் நிர்வாக இயக்குனர் ரவிதாஸ், இயக்குனர் ராஜா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த திருமணத்தை அசெம்பிளி ஆப் கார்ட் திருச்சபையின் கண்காணிப்பாளர் பாதிரியார் டி.மோகன் நடத்திவைத்தார். அதைதொடர்ந்து 7.30 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெற்றது.
கர்த்தர் துணையாக இருப்பார்!
வரவேற்பு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களை வாழ்த்தி அவர் பேசுகையில், 'நான் பங்கேற்ற முதல் கிறிஸ்தவ திருமணம் இது. பொதுவாக நான் கிறிஸ்தவ திருமண வரவேற்பில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் கிறிஸ்தவ திருமணத்தை இப்போதுதான் பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சி. மணமக்களுக்கு கர்த்தர் துணையாக இருந்து ஆசி வழங்குவார்' என்றார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், இலங்கை மந்திரி சந்திரசேகர், தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பாதிரியார் ஜெகத் கஸ்பார், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
-சங்கநாதன்
|