'ஈரமில்லா நிலம்.. ஈரமில்லா மனசு இவை இரண்டாலும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை’, என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஈரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார். தமன் இசையில் உருவான பாடல்களை ரஜினி வெளியிட, முதல் சிடியை இயக்குநர் - நடிகர் சசிகுமார் பெற்றுக் கொண்டார்.
சிடியை வெளியிட்ட பிறகு ரஜினி பேசியதாவது:
ரொம்ப நாள் கழிச்சி இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன். திரையுலகைச் சேர்ந்த நிறைய பேர் வந்திருக்கீங்க. பொதுவா என்னால திரையுலக நிகழ்ச்சிகளில் நிறைய கலந்துக்க முடியல. இப்ப எந்திரன் ஷூட்டிங் தொடர்ந்து போயிட்டிருக்கு. அதனால் எந்த பங்ஷனுக்கும் போக முடியல. யாரும் தப்பா நினைச்சிக்காதீங்க. ஷங்கர் வந்து எங்கிட்ட இந்த பங்ஷன் பத்திச் சொன்னார். நான் வரணும்னு கேட்டார். சின்ன யோசனைகூட செய்யல… உடனே ஒத்துக்கிட்டேன்.
வீட்டுக்கு வந்த பிறகுதான் யோசிச்சேன்… எப்படி உடனே ஒப்புக்கிட்டேன்னு. காரணம் அவர் மீதுள்ள ஈர்ப்பு.
நண்பர் ஷங்கர் மிக நல்ல மனிதர். கடினமான உழைப்பாளி. நல்ல சிந்தனையாளர், நல்ல தேடல் உள்ள மனிதர் எனக்கு நண்பராகக் கிடைச்சிருக்கார்.
என் நண்பர் ரவி ராஜாபினிஷெட்டி (பெத்தராயுடு இயக்குநர்) குறிப்பிட்டதுபோல, முன்பு பெத்தராயுடு வெற்றி விழா மேடையில் அவருடன் இருந்தேன். இன்று ஈரம் படத்தோட வெற்றிக்கு முந்திய விழாவில இருக்கேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்.
இந்த வெற்றி பத்தி ஷங்கருக்கு நல்லா தெரியும். ஒவ்வொரு படத்தைத் தயாரிக்கும் போதும் அது பத்தி சரியாகவே கணிப்பார்.
புலிகேசி, வெயில் படங்களைத் தயாரிச்சப்பல்லாம் அப்படித்தான் இந்தப் படம் நல்லா போகும் சார் என்பார்.
கல்லூரி படம் எடுத்தப்ப, இந்தப் படம் நல்லா போகணும்னு ஆசைப்படறேன் என்றார்.
இந்த ஈரம் படம் நிச்சயம் பெரிய வெற்றிப் படமா அமையும். இந்தப் படம் நல்லா இருக்கும், அது நல்லாவே தெரியுது.
எந்திரன் படத்துக்காக அவரது உழைப்பு அபாரமானது. இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு சந்தோஷமான ஒரு விஷயம் சொல்லிக்கிறேன்…
எந்திரன் படத்தோட 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் ஷங்கர். எங்களது உழைப்பை இங்கே குறிப்பிட்டு சாக்ஸ் (ஹன்ஸ்ராஜ் சக்சேனா) பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.
நடிக வேள் எம்ஆர் ராதா எனக்கு மிகப் பிடித்த, நான் மதிக்கிற நடிகர். சில ஆண்டுகளுக்கு முன், விஜிபி கடற்கரைப் பூங்கா திறப்பு விழாவுக்கு அவரை அழைத்திருந்தார்கள். விஜிபி சகோதரர்கள் விஜி பன்னீர்தாஸ் மற்றும் சந்தோஷம் பற்றி அந்த விழாவில் பேசியவர்கள் மிகவும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் அவர்களது உழைப்பைப் புகழ்ந்துவிட்டுச் சென்றனர்.
அடுத்து எம் ஆர் ராதா பேச வந்தார் -
‘என்னய்யா எல்லோரும் அவங்க உழைப்பைப் பத்தியே பேசுறீங்க… நாம உழைக்கலியா… எதுக்குய்யா இப்படி ஜால்ரா அடிக்கறீங்க. நாமளும்தான் உழைக்கிறோம். என்ன… நாம மாடு மாதிரி உழைக்கிறோம். அவங்க மனுஷன் மாதிரி உழைக்கிறாங்க.
நாம அறியாமையோட உழைக்கிறோம்… அவங்க அறிவுப்பூர்வமா உழைக்கிறாங்க. நாம காட்டுப் பக்கமா 100 ஏக்கர் வாங்கிப் போடுவோம். அவங்க கடல் பக்கமா 100 ஏக்கர் வாங்கிப் போட்டு உழைக்கிறாங்க’ என்றார்.
ஆக, உழைக்கணும்.. ஆனா புத்திசாலித்தனமா உழைக்கணும்.
இந்தப் படத்துக்கு ஈரம்னு டைட்டில் வைச்சிருக்காங்க. மனுசனுக்கு ஈரம் ரொம்ப முக்கியம். ஈரமில்லாத மனசும், ஈரமில்லா நிலமும் யாருக்கும் பிரயோஜனமில்லை…", என்றார் ரஜினி.
விழாவில் தமிழ் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள், இயக்குநர்கள் அனைவரும் வந்திருந்தனர். அவர்கள் பேசியதிலிருந்து:
கஷ்டத்தில் உதவும் என் நண்பர் ரஜினி! - இயக்குநர் ஷங்கர்
“இன்று காலையில் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. ‘A real friend is one who walks in when the rest of the world walks out…!’ என்ற அந்த எஸ்எம்எஸ்ஸூக்கு முழு அர்த்தம் நமது சூப்பர் ஸ்டார் அவர்கள்தான்.
நான் பெரிய பெரிய படங்களை இயக்குவதால் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை என நினைக்க வேண்டாம். எனக்கும் கஷ்டங்கள், தாங்க முடியாத வேதனைகள் உண்டு. இந்த சமயங்களில் கேட்காமலேயே ஒரு உதவி வரும்… அது சூப்பர் ஸ்டாரிடமிருந்து.
சிவாஜி, எந்திரன் படங்களில் நான் அவருடன் பணியாற்றியதன் மூலம், ஒரு மிகச் சிறந்த நண்பரைப் பெற்றேன்.
எனக்கு பல முக்கிய தருணங்களில் பெரும் துணாகவும், ஆறுதலாகவும் இருந்தவர், இருப்பவர் நமது சூப்பர் ஸ்டார். நான் அவரிடம் இந்த விழாவுக்கு தேதி கேட்டேன். அவர் உடனடியாக ஒப்புக் கொண்டு என்னை பெருமைப்படுத்தினார். அவருக்கு எப்படி நன்றி சொல்வேன்…!
மனிதருக்குள் மாணிக்கம் நம் ரஜினி! - ராம நாராயணன்
“எங்கள் அன்பு சூப்பர் ஸ்டார் இந்த விழாவுக்கு வந்திருப்பதிலிருந்தே இந்தப் படம் பெறப்போகும் வெற்றியின் பிரமாண்டம் தெரிகிறது.
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கலைஞர்களிலே மிகச் சிறந்த நடிகர்…
நடிகர்களிலே மிகச் சிறந்த மனிதர்…
மனிதர்களிலே அவர் ஒரு மாணிக்கம்…
இது அவருடன் பழகிய எல்லோரும் புரிந்து கொண்ட உண்மை. அவரால் நமது மண்ணுக்கே பெருமை!”
யாரையும் நஷ்டமடைய விடாத ஈரமனசுக்காரர் ரஜினி! - கலைப்புலி ஜி சேகரன்
“தமிழ் மண்ணாம் கிருஷ்ணகிரியில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து, இன்று தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கும் என் அன்புக்குரிய அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஈர மனசுக்கு சொந்தக்காரர். அந்த மனிதரைத் தாங்கி நிற்கும் இந்த ரசிகர்களும் ஈரமனசுக்காரர்களே.. இந்த ஈரம் இருதரப்பிலும் இருப்பதால்தான் தமிழ் சினிமா தழைத்து நிற்கிறது.
நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, ‘பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.
அதையும் தாண்டி, சில பேராசைக்காரர்களின் சூழ்ச்சியால் நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல். ஆனால் நமது சூப்பர் ஸ்டார், தானே முன்நின்று இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தார். அவரது நல்ல மனசைப் புரிந்து கொண்டு நாமும் அவருக்கு ஒத்துழைத்தோம். இவரால் யாருக்குமே நஷ்டம் வராது… வர விட மாட்டார் என்பதற்கு இது ஒரு சான்று…”
ரஜினி என்ற நல்ல மனிதர்! -மிஷ்கின்
“வியட்நாமில் ஒரு முறை ஒரு நிலத்தை நான்காகப் பிரித்து, அதன் ஒரு பகுதியில் நல்ல மனிதர்கள் சிலர் மூலம் நெல் விதைத்தார்களாம். மற்ற பகுதிகளில் சாதாரணமாக விதைத்தார்களாம். நல்லவர்கள் விதைத்த பகுதியில் மட்டும் நெல் இரண்டு மூன்று அங்குலம் அதிக உயரம் வளர்ந்து அமோக விளைச்சல் தந்ததாம். உடனே மீண்டும் மீண்டும் இந்த சோதனையைச் செய்து பார்த்தார்களாம்.
ஒவ்வொரு முறையும் நல்லவர்கள் விதைத்த விதைகளே மிகச் சிறந்த விளைச்சலாக மாறியது.
இந்தப் படமும் அப்படித்தான். சூப்பர் ஸ்டார் என்ற நல்லவரால் வாழ்த்தப்பட்ட இந்தப் படத்துக்கு, அதை விட வேறு என்ன பெரிய ஆசீர்வாதம் கிடைத்துவிட முடியும்! ”
மாற்று சினிமாவின் ஆரம்பம் ரஜினி! - வசந்த பாலன்
“தமிழ் சினிமாவில் மாற்று சினிமா என்ற கருத்தை அன்றே அழுத்தமாக விதைக்கப்பட துணை நின்றவர் நமது சூப்பர் ஸ்டார். அவர் தந்த முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், எங்கேயோ கேட்ட குரல் போன்றவைதான் பிரபலமான மாற்று சினிமாக்கள். ‘படம் என்றால் அதைப் போல எடுக்கணும்’ என எல்லோரையும் வியக்க வைத்தவை ரஜினி சாரின் இந்தப் படங்கள்.
இன்று அந்த வழியில் படங்களை தயாரிப்பவர் இயக்குநர் ஷங்கர்…”
இந்திய சினிமாவின் உச்சம் எந்திரன்! - ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா
“பொதுவாக இயக்குநர் ஷங்க்ர பற்றி ஒரு குற்றச்சாட்டு உண்டு. தான் தயாரிக்கும் படத்துக்கு குறைவாக செலவு செய்யும் அவர், தான் இயக்கும் படங்களுக்கு மட்டும் பெரிய பட்ஜெட் போட்டு விடுகிறார் என்பார்கள். சில தினங்களுக்கு முன் என்னிடம் கூட இதைக் கூறினார்கள்.
இங்கே ஒன்றை நான் கூற வேண்டும்… சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரூ.150 கோடிக்கு மேல் செலவழித்து எந்திரனை எடுக்கக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி - ஷங்கர் மீதுள்ள நம்பிக்கைதான். இந்தப் படத்துக்கு ரஜினி அவர்களும், ஷங்கரும் உழைத்துள்ள உழைப்பு அபாரமானது. அதைப் பார்த்து கலாநிதி மாறன் அவர்கலே பெரிதும் வியந்து போனார்.
எந்திரனின் ஒவ்வொரு ப்ரேமையும் பார்த்துப் பார்த்து இழைத்துள்ளனர் ரஜினியும் ஷங்கரும். இந்தப் படம் வெளியானால் இந்திய சினிமாவின் உச்சகட்டமாக அமையும் என்பதை மட்டும் கூறிக் கொள்வேன்.
சூப்பர் ஸ்டார் நடித்து பெரும் வெற்றி கண்ட நினைத்தாலே இனிக்கும் படத்தின் இப்போதைய ரீமேக்கை சன் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்தப் பெயரில் அப்படி ஒரு ஈர்ப்பு உள்ளது…”
ரஜினி என் ஆதர்ஸ நாயகன்! - சசிகுமார்
“தமிழ் சினிமாவின் முதல்வர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கைகளால் வெளியிடப்பட்ட ஆடியோவை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்.
|