எக்மோர் பாந்தியன் ரோட்டிலிருந்து இடது புறம் திரும்பி மேம்பாலத்தினை கடந்து சுடிதார் தெருவில் நுழைந்தால் வலது புறத்திலேயே இருக்கிறது அந்தச் சின்ன சந்து. உள்ளே ஏகப்பட்ட வீடுகள். பில்லாவிலும், தீயிலும் பார்த்த கார், பார்க்கிங் ஏரியாவில் நிற்கிறது. சில நிமிஷங்கள் காத்திருப்புக்கு பின்னர் அவரே வெளியே வந்து உள்ளே அழைத்துப்போனார். பாலாஜி! பல வருஷங்களுக்குப் பின்னர் முதல்முறையாக நேரில் பார்த்தபோது பிரமிப்பாகத்தான் இருந்தது. அதே பழைய தாடி இப்போது பெரியார் தாடியாகி இருந்தது. ஹால் முதல் கார் பார்க்கிங் வரை பழமையின் வாசம். நுழைவாயிலில் பிளாக் அண்ட் வொயிட் போட்டோவில் சிரிப்பது பில்லா இன்ஸ்பெக்டர். இன்னொரு நாள் என்னுடைய மொபைலுக்கே அழைப்பு. நான்தான் பாலாஜி,,, பேசலாமா என்று கேட்டுவிட்டு அழகான ஆங்கிலத்தில் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். பால்ய நண்பன், சினிமாவில் காமிரா என்ஜினியராக இருப்பதில் கிடைக்கும் சகாயங்களில் இதுவும் ஒன்று. அடுத்தடுத்து நிறைய முறை பாலாஜியின் வீட்டுக்கு நண்பனுடன் போனதுண்டு.
பத்திரிக்கை சகவாசம் உண்டுங்கிறதை மட்டும் தப்பித் தவறி கூட சொல்லிடாதீங்க..... என்ற யூனிட் நண்பரின் வார்த்தையை என்னுடைய முதல் புத்தகம் வெளியாகும் வரை வரை வேதவாக்காக வைத்திருந்தேன்.
பாலாஜி என்னும் சினிமாக்காரரை பற்றிச் சொல்லாமல் சிவாஜி, நாகேஷ், ரஜினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிக்க முடியாது. நாகேஷை அறிமுகப்படுத்தியவர்.ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் கைகொடுத்தவர். ராஜா முதல் எங்கிருந்தோ வந்தாள் வரை எம்ஜிஆர் இல்லாமலும் ஜெயலலிதாவால் மிளிர முடிந்தது. சிவாஜி கூடாரத்தில் கடைசி வரை இருந்தவர். சிவாஜியோடு இருந்தவர்களெல்லாம் எம்ஜிஆர் பின்னால் சென்றபோது ஏனோ இவர் மட்டும் ஒதுங்கியிருந்தார். எம்ஜிஆரே நெருங்கி வந்தும் மறுத்தவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். வில்லன், துணை நடிகர் என்று கிடைத்த வேடத்தில் நடித்தாலும் படம் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததற்கு கலை தாகமெல்லாம் அல்ல; பணம்தான் காரணம் என்பதை கடைசி வரை சொல்லிக்கொண்டிருந்தவர். சிவாஜியை மட்டுமே வைத்து நிறைய படங்களை தயாரிக்க முடிந்ததற்கு காரணம் சிவாஜி அவருடைய வேலையில் குறுக்கீடாமல் இருந்ததுதான். தேவர் போலவே படத்தயாரிப்பில் யார் பேச்சையும் கேட்காமல் கடைசி வரை சர்வாதிகாரியாகவே இருந்தார். அதுதான் அவரது பலமும் பலவீனமும் கூட.
79ல் ரஜினியை அணுக எல்லோரும் தயங்கிய நேரத்தில் பில்லாவை எடுத்ததற்கு காரணம் டான் கதையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான். பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை. சுரேஷ் ஆர்ட்ஸை தொடர்ந்து ஏவிஎம், சத்யா மூவிஸ் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ரஜினியைப் பார்க்க போயஸ் கார்டனுக்கு வந்தன. சரிவிலிருந்து தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம் என்று மீண்டு கொண்டிருந்த ரஜினிக்கு ஒரு அதிரடி வெற்றி தேவைப்பட்டது. பில்லா, தமிழ்நாட்டுக்கு சூப்பர் ஸ்டார் கிடைத்திருப்பதை உறுதி செய்தது.
பள்ளிக்கூடத்து வாழ்க்கையில் கதையளக்கும்போது பாலாஜிக்கு டூமீல் பாலாஜி என்றுதான் பெயர். கிளைமாக்ஸில் பெரிய கோட், கையில் துப்பாக்கியோடு பத்து போலீஸார் புடை சூழ நிச்சயம் வருவார். அவரது கைத்துப்பாக்கி வெடிக்கவே வெடிக்காது. வில்லன் கைகளுக்குப் போய் யாராவது மீட்டெடுக்க வேண்டியிருக்கும். எண்பதுகளில் வந்த படங்களில் கொள்ளைக்கூட்ட பாஸ், காவல்துறை டிஐஜி, உயர்நீதிமன்ற நீதிபதி (செம காம்பினேஷன்?!) ரோலுக்கு மேஜர் சுந்தரராஜனை விட பொருத்தமாக இருந்தவர் பாலாஜிதான். தன்னுடைய படத்தில் ஏதாவது ஒரு கேரக்டரில் வந்தாலும் வலிந்து திணிக்கப்பட்டதில்லை.
பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு திரைக்கதையை இறக்குமதி செய்து பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததுதான் தயாரிப்பாளர் பாலாஜியின் சக்ஸஸ் பார்முலா. தமிழ் டான். தீவாரில் சிவாஜி நடித்திருந்தால் நிச்சயம் காணாமல் போயிருக்கும். வாழ்வே மாயம் ரஜினிக்கு மட்டுமல்ல சிவாஜிக்குக் கூட பொருத்தமாக இருந்திருக்காது. நல்லதொரு குடும்பம், தீபம் சிவாஜியால் மட்டுமே முடியும். பாலாஜியின் படங்களில் கிரியேட்டிவிட்டி குறைவுதான். ஆனால் சம்பளம் அதிகம். சிந்து நதிக்கரையோரம் என்று மெலடி கொடுத்தவர்தான் என்றாலும் இளையராஜாவை விட்டு பாலாஜி தள்ளியே இருந்தார். எண்பதுகளிலும் எம்.எஸ்.வியின் பெயரைச் சொல்ல பில்லா வந்தது. ஒசை, பந்தம், விடுதலை என் சந்திரபோசுக்கும் நல்ல வாய்ப்பு. வாழ்வே மாயத்திற்கு கங்கை அமரன்தான் இசையமைப்பாளர் என்பதை இன்றும் நம்பமுடியவில்லை.
எண்பதுகளில் பெரிய பட்ஜெட் படமாக ஒரு கோடி ரூபாயில் விடுதலை தயாரானபோது பாலாஜியை விட அதிகமாக பதட்டப்பட்டது ரஜினிதான். விதியின் அதிரடியான வெற்றிக்குப் பின்னர் பாலாஜி படங்களின் வியாபாரமும் எல்லை கடந்து போயிருந்தது. குர்பானியின் வெற்றியும், விஷ்ணுவர்த்தன் மூலம் கன்னடத்திலும் வியாபாரம் செய்ய முடியும் என்ற பாலாஜியின் கணக்கும் சரியாகத்தான் இருந்தது. ரஜினி ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்ளுக்கும் மோதல் என்றெல்லாம் வந்த செய்தியையெல்லாம் மீறி பாலாஜியால் லாபம் பார்க்க முடிந்தது. வீடியோ பைரஸியை தவிர்க்க விடுதலையின் ஒவ்வொரு பிரிண்டிலும் ஸ்பெஷல் மார்க் செய்து என்னவெல்லாமோ செய்திருந்தார்.
சிவாஜியும் ரஜினியும் கால்ஷீட்டை சொதப்பாமல் தயாரிப்பாளரை மதித்து நடித்துக்கொடுத்ததுதான் வெற்றிக்கு காரணம் என்று பாலாஜி பேசியதுதான் அவர் மீடியாவுக்கு கொடுத்த கடைசி இன்டர்வீயூ. மிஸ்டர் இந்தியாவை பாக்யராஜை வைத்து தமிழாக்க வேண்டும் என்கிற எண்ணம் பாலாஜிக்கு வராமலே போயிருக்கலாம். பாலாஜி என்னும் சமரசத்துக்கு தயாராகாத தயாரிப்பாளருக்கும் திரைக்கதையில் ஜித்தரான பாக்யராஜீக்கும் இடையேயான மோதலில் ரத்தத்தின் ரத்தமே காணாமல் போனது. அதோடு பாலாஜியின் சாம்ராஜ்யம் சரிந்து போனது என்று குமுதத்தில் வந்த செய்தியை சென்னைக்கு வரும்வரை நானும் நம்பியிருந்தேன்.
பாலாஜியின் இரண்டாவது இன்னிங்ஸ் என்றார்கள். ஆனால் நெருக்கமானவர்களே மட்டுமே தெரியும் அதுதான் நிஜமான இன்னிங்ஸ் என்பது. படத்தயாரிப்புக்கு பை பை சொன்ன பாலாஜி, புதிதாக காமிரா யூனிட் ஆரம்பித்தார். ஏவிஎம், சத்யா மூவிஸ போன்ற முன்னணி நிறுவனங்களே யோசித்த விஷயம் அது. விலையுயர்ந்த காமிராக்கள், லைட்டிங் சமாச்சாரங்கள் பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகின. இருபது வருஷங்களுக்கு முன்னர் தொழில்நுட்பத்தில் திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் படங்களில் பாலாஜி யூனிட்டின் பங்கு முக்கியமானது. ஜிம்மி ஜிப், அகிலா கிரேனில் ஆரம்பித்து லேட்டஸ்ட் ஹாரி லைட் வரை சகலமும் பாலாஜியிடம் கிடைத்தது. பட இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் யாரென்பதை முடிவு செய்தால் போதும். காமிராமேனில் ஆரம்பித்து லைட் பாய் வரை சகலரும் எந்நேரமும் ரெடி.
வெறும் ரீமேக் படங்களாக எடுததுத் தள்ளிய பாலாஜியிடம்தான் டெக்னிக்கல் சினிமா பற்றிய அபாரமான விஷயங்கள் புதைந்து கிடந்தன. படத்தயாரிப்பின் மூலம் சுரேஷ் ஆர்ட்ஸ்க்கு கிடைத்த வெற்றியை விட பாலாஜியின் பட யூனிட்டுக்கு கிடைத்த வெற்றி அபாரமானது. லேட்டஸ்ட் காமிராவை எப்படி இயக்குவது என்பதை பாலாஜிக்கு போன் செய்து கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவின் முக்கியமான காமிரா ஆபரேடிங் மேன், லைன் மேன் டெக்னிக்கல் ஆசாமிகளிடம் பேசினால் அவர்களுக்கான பிள்ளையார் சுழி பாலாஜி பட யூனிட்டிலிருந்து என்பது புரியும். பாலாஜியிடம் இல்லாத காமிரா தென்னிந்தியாவிலேயே இல்லை என்கிற நிலைமை இருந்தது. இனி நடிக்கக்கூடாது, இனி படமெடுக்கக்கூடாது என்று முடிவெடுத்ததுபோலவே இனி யூனிட்டும் வேண்டாம் என்பதையும் திடீரென்றுதான் முடிவு செய்தார்.
ஒரு வாரப்பத்திரிக்கைக்காக அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஏகப்பட்ட ரெக்கமண்டேஷனோடு அணுகியும் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். பேட்டிக்கு அவர் ஒப்புக்கொண்டால் கேட்கவேண்டும் என்று நினைத்து நான் தயார் செய்து வைத்திருந்தவை அறுபதாவது இருக்கும் நாட்டுக்குள்ளே உனக்கொரு பேர் உண்டு என்று ரஜினிக்கு கண்ணதாசன் பாட்டெழுத வைத்தது, விதி படத்திற்கு பக்கம் பக்கமாய் வசனமெழுதியவ்ரின் பெயர், தீ படத்திற்கு அற்புதமான லொக்குகேஷன் பார்த்த காமிராமேன் சுரேஷ் மேனன், பிரிந்து போன பில்லா கிருஷ்ணமூர்த்தி, ஓசையில் கேரளாவில் இருந்து ஷாலினியை அழைத்து வந்து நடிக்க வைத்தது, விடுதலையில் எதெல்லாம் லண்டனில் எடுத்தது என்று சராமரியாக எழுதிவைத்த கேள்விகளையெல்லாம் கிழித்துப்போட வேண்டியிருந்தது.
பாலாஜியைப் பொறுத்தவரை கடந்த காலத்தை பற்றி நினைப்பதெல்லாம் வெட்டி வேலை. இத்தனைக்கும் அவரது கடந்த காலம் ஒன்றும் கசப்பானதாக இருந்துவிடவில்லை. பெரிய நடிகர், படத்தயாரிப்பாளராக இருந்தும் பால்ய நண்பனிடம் ஒருநாள் கூட சினிமாவைப் பற்றி பேசியதில்லை. ஆனால் சினிமா லைட், காமிராக்களை பற்றி மணிக்கணக்கில் பேசியிருக்கிறார்கள். இவரா இத்தனை படத்தில் நடித்தார், இவரா இத்தனைப் படங்களை தயாரித்தார் என்று நண்பனைப் போலவே எனக்கும் ஆச்சர்யம்தான். எப்போதும் பழைய விஷயத்தையே அசை போடும் சினிமாக்காரர்கள் மத்தியில் பாலாஜி கடைசிவரை வித்தியாசமாகத்தான் இருந்தார். ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது தமிழ் சினிமாவுக்கு அல்ல; தமிழ் சினிமாவின் டெக்னிக்கல் ஆசாமிகளுக்குத்தான்.
- ஜெ. ராம்கி
|