ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தமது ராகவேந்திர மண்டபத்தில் மோர் பந்தல் அமைப்பது உண்டு. கோடையில் அல்லல் படும் பொது மக்கள் பலர் இதன் மூலம் தங்கள் தாகம் தனித்துன் வந்தனர். (சென்ற ஆண்டு அமைக்கப்பட்ட மோர் பந்தல் குறித்து கூட நமது தளத்தில் நாம் படத்துடன் செய்தி அளித்திருந்தோம்).
வெயிலின் உக்கிரம் சற்று முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டதால் இந்த ஆண்டு, தற்போதே ராகவேந்திர மண்டபத்துக்கு வெளியே மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஜில்லென்ற ஐஸ் மோர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகின்றது. இதற்காக சுமார் 200 லிட்டர் தயிர் தினசரி உறையூட்டப்பெற்று மோர் தயாரிக்கப்படுகிறது. அதில் ஐஸ் போட்டு சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்று வழங்கப்படுகின்றது. காலை 9.30 முதல் மதியம் 3.30 வரை இது கிடைக்கும்.
அங்கேயே எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். எடுத்து செல்லவோ பாட்டிலில் நிரப்பிக்கொள்ளவோ அனுமதி இல்லை. அந்த மோரை நாம் கூட வாங்கி குடித்தோம். நல்லா ஜில்லென்று பிரமாதமாக இருந்தது.
நாம் பார்த்த வரை ஆட்டோ ஓட்டுனர்கள், லோடு வண்டி ஓட்டுபவர்கள், தொலைபேசி மற்றும் மின்சார ஊழியர்கள், தினக் கூலிகள் ஆகியோர் இதன் மூல பயன்பெறுகின்றனர். அந்த வழியே செல்லும் தாய்க்குலங்களும் மோரை ஆவலுடன் வாங்கி குடிக்கின்றனர். ஆக பாட்டாளிகள் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை அனைவரும் பயன் பெறுகின்றனர்.
இது தவிர 24 மணிநேரமும் குளிர்ந்த் நீர் கிடைக்கும். இதற்காக தனியே Freezer அமைக்கப்பட்டு குழாய் மூலம் தாகம் தணிக்க தண்ணீர் வழங்கப்படுகின்றது.
தாகம் தீர்த்தோர் கூறுவது என்ன?
நாம் இன்று காலை இந்த புகைப்படங்களை எடுத்த போது தாகம் தனித்துகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் சலீம் கூறுகிறார்:
“நான் ரஜினியோட ரசிகர் இல்லீங்க. ஆனால் அவரை ரொம்ப பிடிக்கும். வெயில் நேரத்துல இந்த மாதிரி ஜில்லுன்னு மோர் கிடைச்சது ரொம்ப சந்தோஷம். எங்களை மாதிரி வெயில்ல அலையுற ஆளுங்களுக்கு பயங்கர தாகம் எடுக்கும். இந்த மோர் குடிச்சா கொஞ்ச நேரம் தாகத்தை போக்கிட்டு சவாரில கவனம் செலுத்தலாம்.”
மற்றொரு ஆட்டோ டிரைவர் சீனு கூறுகையில்:
“தலைவர் மனசு யாருக்கு வரும் சார்? வருஷா வருஷம் தலைவர் இந்த மாதிரி மோர் பந்தல் வைக்கிறாரு. எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு. மோர் நல்ல டேஸ்டா இருக்குது. நான் மூணு க்ளாஸ் குடிச்சேன்.”
நாம் இந்த செய்தியை வெளியிட்டதன் நோக்கம் என்ன?
ரஜினி தாம் இது போன்று செய்யும் அறப்பணிகள் செய்தியாவதையோ அல்லது அது பரப்படுவதையோ விரும்புவதில்லை. இந்த புகைப்படங்களில் கூட பாருங்கள் எங்காவது ரஜினியின் பெயரோ அல்லது அவரது படமோ இருக்கிறதா என்று? அந்தப் பகுதிக்கு புதிதாக செல்பவர்களுக்கோ அல்லது அரிதாக வருபவர்களுக்கோ தாங்கள் தாகம் தீர்த்த மோர் பந்தல் அமைத்திருப்பது ரஜினி என்ற விபரம் பெரும்பாலும் தெரியாது. அந்த பகுதியிலேயே இருப்பவர்கள் மற்றும் இது பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு தான் இது தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது. ரஜினி அதை தான் விரும்புகிறார். ஆனால் நம்மை போன்ற ரசிகர்களுக்கு தலைவரின் அறப்பணிகள் குறித்து பார்த்து, படித்து பரவசமடைவித விட ஒரு சந்தோஷம் இருக்க முடியுமா?
தங்கள் தலைவரால் தாகம் தீர்ந்தவர்கள் மனதார வாழ்த்திவிட்டு செல்வதை கேட்கும் ஒவ்வொரு ரசிகனின் மனமும் அல்லவா சேர்ந்து குளிர்கிறது? அதற்காகத்தான் இங்கு இதை அளித்தேன். மற்றபடி இது போன்ற அவர் ஆத்மார்த்தமாக செய்யும் சிறு சிறு நற்பணிகளை வெளிச்சம் போட்டு காட்டுவது நம் நோக்கமல்ல. அதை அவர் விரும்பவும் மாட்டார்.
ரஜினி தன் கையால் வழங்கிய மோர்
இந்த ஆண்டு ராக்வேந்திர மண்டபத்தில் மட்டுமல்லாமல் கேளம்பாக்கத்தில் உள்ள சூப்பர் ஸ்டாரின் பண்ணை வீட்டு வாயிலிலும் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினகரன் தெரிவிக்கிறது. சூப்பர் ஸ்டாரே தமது கையால் சிலருக்கு மோர் வழங்கியதாகவும் இதையொட்டி பரபரப்பு ஏற்பட்டு கடும் கூட்டம் கூடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. (தினகரன் இணைப்பை காண்க).
|