பழம்பெரும் தயாரிப்பாளரும் நடிகருமான திரு.பாலாஜி சென்னையில் நேற்று காலமானார். கடந்த சில நாட்களாகவே அவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுமார் 5 மணியளவில் காலமானார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக எழும்பூரில் உள்ள அவர் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு திரையுலக பிரமுகர்களும், நடிக நடிகையரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது.
திரு.ரஜினிகாந்த் இன்று காலை அவரது வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, நடிகர் மோகன்லால் உள்ளிட்ட அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
“பாலாஜி அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாதது என்றும் அவர் தம் சகோதரர் போன்றவர்” என்றும் செய்தியாளர்களிடம் ரஜினி கூறினார்.
சூப்பர் ஸ்டாரை வைத்து பில்லா, விடுதலை உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் திரு.பாலாஜி. திரையுலகில் உள்ள சூப்பர் ஸ்டாரின் நலம் விரும்பிகள் மற்றும் நெருங்கியவர்களுள் திரு.பாலாஜியும் ஒருவர்.
சமீபத்தில் கூட ஜெயா டீவியில் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.பாலாஜி சூப்பர் ஸ்டார் பற்றி கூறியதை நமது தளத்தில் இரண்டு வாரத்துக்கு முன்பு கூறியிருந்தோம்.
திரு.பாலாஜி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
|