இரண்டு பேர், ரஜினி மக்கள் மன்ற காவலர்களோ, ரஜினி ரசிகர்களோ சந்தித்துக் கொண்டால் தலைவரின் படங்கள் பற்றிய பேச்சுக்குப் பின் சட்டென எழும் கேள்வி "என்னடா தலைவர் இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்காரே!" என்பதாகத் தான் இருக்கிறது.
ரஜினி ஏன் இன்னும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று அரசியல் கட்சிகளையே ஆர்வமாக்கி வைத்திருப்பது தான் ரஜினியின் ராஜதந்திரம்.
ரஜினியின் புதுப்பட அறிவிப்புகள் ஒரு பக்கம் மக்கள் மன்ற நியமன நீக்கங்கள் ஒரு பக்கம் என லெப்ட் இண்டிகேட்டரையும் ரைட் இண்டிகேட்டரையும் மாற்றி மாற்றிப் போட்டு, அரசியல் கட்சிகள் தலையைச் சொறியும் கேப்பில் நேர் ரூட்டில் அரசியல் வண்டியை விடப்போகிறார் என்று தான் தெரிகிறது.
சத்தமின்றிப் பல வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதும் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பூத் கமிட்டி வேலைகள் எல்லாமே நிறைவடையும் தருவாயில் இருப்பதும் அதைத்தான் காட்டுகிறது..
ஆனாலும் கூடத் தலைவர் இன்னும் பேசமாட்டேன்றாரே என ரசிகர்களிடம் ஒரு ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது.
ரஜினியை பொறுத்த வரை எப்போதும் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்பட விரும்பாதவர். ஒரு காரியத்தைத் தொட்டுவிட்டால் அது நிறைவடையும் வரை அது மட்டுமே அவர் மனதில் இருக்கும்.
அதனால் இப்போது முழுக்க முழுக்க "பேட்ட" படம் தான் அவரின் கவனத்தில் இருக்கும்..அது முடிந்த அடுத்தக் கணம் அரசியல் பக்கம் பார்வை திரும்பும்.
படங்கள் ஒப்புக்கொண்டுவிட்ட பின்பு அதில் தம்மை முழுமையாகப் பங்கையளிக்க வேண்டும் என விரும்புபவர் ரஜினி..ஆனாலும் கூடத் தன் மக்கள் மன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து உத்தரவுகள் வழங்கிக்கொண்டு தான் இருக்கிறார்.
"பேட்ட" படப்பிடிப்பு முடிந்த பின் சோர்விலிருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அரசியல் ஆட்டங்கள் தொடங்கும் என்று தான் நினைக்கிறேன்.
ஊடகங்கள் மற்றும் ரஜினி எதிர்ப்பாளர்கள் சொல்வதைப் போல ரஜினி முடிவெடுக்காமல் இருக்கிறார் என்பதெல்லாம் அபத்தமான வாதங்கள்.
எம்.ஜி.ஆரை தவிரத் திரையிலிருந்து அரசியலுக்கு வந்த எல்லோரும் 6-8 மாத கால இடை வெளியில் தான் வேகம் பெற்றிருக்கின்றனர்.
என்.டி.ஆர்,சிரஞ்சிவி,விஜயகாந்த், கெஜ்ரிவால், ரெங்கசாமி எனப் பல உதாரணங்களைக் கூறலாம், அதன்படியே தான் ரஜினியும் முடிவெடுப்பார்.
இன்றைய நவீன உலகில் முழுமையான 5 மாதம் ஒரு தேர்தலில் வெற்றி பெற தாராளமாய்ப் போதுமானது.. அதிலும் தமிழகம் போன்ற ப்ரூவன் லீடர்கள் இல்லாத மாநிலத்தில், ரஜினி வந்த பின் ஒட்டுமொத்த களமும் அவர் focused ஆகத்தான் இருக்கப்போகிறது.
எனவே ஒரு சில மாதங்கள் தாமதித்து வந்தாலும் தேர்தலில் வீசவிருக்கும் ரஜினி அலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடப்போவதில்லை.
இது ரஜினிக்கு நன்கு தெரிந்ததால் தான் இந்த நிதான ஆட்டம்..
ஊடகங்களின் பார்வையிலும் பொது மக்களின் பார்வையிலும் வேண்டுமானால் ரஜினி அமைதியாக இருப்பது போலத் தோன்றலாம்.
ஆனால் உண்மையில் அவர் அரசியல் அறிவித்த இந்த 8 மாதங்களில் திமுக, அதிமுகப் போல உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை..
அவை அனைத்தும் திரை மறைவில் நடந்து கொண்டிருப்பது தான் வியப்பு!
180 நாட்களில் கொள்கைகள் புத்தகங்களாகத் தரப்படும் என அறிவித்து 220 நாட்களைக் கடந்தும் செயல்படாமல் இருக்கும் புதுக் கட்சியை விட எவ்வித அறிவிப்புகளும் இன்றியே கட்சியின் விதிமுறைகளைப் புத்தகமாக வெளியிட்டிருக்கும் ரஜினி மன்றத்தின் வீச்சு அசாத்தியமானது.
8000 மாவட்ட நிர்வாகிகள், 65,000 பூத் கமிட்டிகள் எனப் படு பயங்கரமான பேஸ் மெண்டோடு தான் ரஜினி கட்சியை அறிவிப்பார், சிலர் இதைச் சாதாரணமாகப் பார்க்கின்றனர்.
35 ஆண்டுகாலம் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகருக்கு இது சாதாரணம் தானே என்று கேட்கின்றனர். இல்லை.. இல்லவே இல்லை..
ரஜினி தவிர்த்து இந்தியாவில் வேறு யாரும் இதைக் குறுகிய காலத்தில் செய்யவில்லை என்பது தான் நிதர்சனம்..
இத்தனைக்கும் ரஜினி தன் கட்சி பெயரையோ, கொடியையோ, கொள்கைகளையோ இல்லை தன் முகத்தை மட்டுமோ காட்டியிருந்தால் கூட இப்பணிகள் மிக எளிதாக முடிந்திருக்கும்.
ஆனால் இப்போது வெறும் ரஜினி என்ற பெயருக்காக மட்டுமே இத்தனையும் முடிந்து கொண்டிருக்கின்றன.
ரஜினி என்ற பெயருக்கே இவ்வளவு வேகம் என்றால் அவர் களத்தில் இறங்கும் போது இவ்வேகம் எவ்வளவு அதிகமாகும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றேன்.
இன்னொரு முக்கிய விசயம் ரஜினியின் சமகாலப் போட்டி நடிகரான கமல் கட்சி ஆரம்பித்த பின்பும் கொடி அறிவித்த பின்பும் எத்தனை கிளைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுக் கட்சி கொடி ஏற்றப் பட்டிருக்கிறது என்பதுடன் ரஜினி மக்கள் மன்ற செயல்பாடுகளை ஒப்பு நோக்கினாலே மிக எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
ரஜினி வெறும் லெட்டர் பேடுக்காக அரசியலுக்கு வரவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ரஜினி எடுத்த எடுப்பிலேயே திமுக, அதிமுக என்ற கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்டமைப்புடன் வரவிருக்கிறார்.
தேர்தல் களம் நேரடியாக ரஜினி vs மற்றவர்கள் என மாறிவிடும்..எனவே திட்டமிடல் மிக மிக அவசியம்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் ரஜினி ஒரு அணிக்குத் தலைமை தாங்கக் கூடும்..அவற்றை எல்லாம் கணித்துத் தான் தன் அடிகளை அளந்து வைத்துக் கொண்டிருக்கிறார்..
திமுக, அதிமுகத் தவிர்த்த எந்தக் கட்சியும் ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.. அதனால் தான் தமிழக அரசியல் களத்தில் இன்னும் கூட்டணிக்கணக்குகள் முடிவு பெறவில்லை..
ரஜினி வந்த பின்பு கணக்குகள் மாறும்.. களம் மாறும்.. காட்சியும் மாறும்... !
- ஜெயசீலன்
|