அம்மாபேட்டை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரசிகர்கள்!
ரஜினி ரசிகர் மன்றங்கள் புதிய எழுச்சி பெற்று வருவதை அடிக்கடி செய்திகளாக நாம் கொடுத்து வந்துள்ளோம்.
சில தினங்களுக்கு முன், ‘புதிய மன்றங்களுக்கு அனுமதி தரத் தலைவர் முடிவெடுத்துவிட்டார்’ என்ற செய்தியை சிறப்புச் செய்தியாகப் பதிவு செய்திருந்தோம்.
இப்போது அதன் முதல் கட்டமாக, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு இடையில் செயல்படாமல் இருந்த சில மன்றங்களை முழுவீச்சில் இயங்க வைக்கும் வேலைகள் மாவட்டம்தோறும் வேகம் பெற்றுள்ளன.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் சமீபத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது.
முன்பே ஆரம்பிக்கப்பட்ட மன்றம்தான் என்றாலும், இடையில் சில காலம் செயல்படாமல் இருந்தது. இப்போது அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை உள்ளடக்கிய பெரிய மன்றமாக இது மாற்றம் பெற்றுள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம், உறுப்பினர்களாக உள்ள ரசிகர்களின் வயது.
சில அறிவு ஜீவிகள் பொதுவாக வைக்கும் கேள்வி… ரஜினிக்கு வயதாகிவிட்டது. இனி அவர் எப்போது அரசியல் இயக்கம் காண்பது? அவருக்கு இளைஞர்கள் மத்தியில் முன்பு போல செல்வாக்கு இருக்குமா? என்பது.
ஆனால் ரஜினி என்ற கலைஞருக்கு, ரசிகர்களின் தலைவருக்கு வயது வரம்பே கிடையாது. அவர் வயதை வென்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதுக்குட்டப்பட்ட இளைஞர்களே. அதேநேரம் ஆரம்ப கால உறுப்பினர்களும் உள்ளனர்.
மன்றத்தின் துவக்கவிழா நடந்த நாளன்று அம்மாபேட்டை பகுதியே அதிருமளவுக்கு நலத்திட்ட உதவிகள், கோலாகல கொண்டாட்டங்கள் என அசத்திவிட்டார்கள் ரசிகர்கள்.
கந்தசாமி முதலித் தெருவில் நடந்த இந்த விழாவுக்கு சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எம் பழனிவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மன்றத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்ற செயலாளர் வி சீனிவாசன் தலைமை தாங்கினார். பொருளாளர் வரதன் முன்னிலை வகிக்க, வி சுந்தரம் வரவேற்றார்.
பின்னர் ஏழைகளுக்கு இலவச வேட்டி - சேலைகள் வழங்கப்பட்டன. மாணவ - மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களையும் மன்றத்தினர் வழங்கினர்.
மாவட்ட துணைத் தலைவர் மோகன் வேட்டி சேலைகளை வழங்கினார்.
மன்றத்தின் சார்பில் ஊனமுற்றவர்களுக்கு உதவித் தொகையை சேலம் மாநகராட்சி கவுன்சிலர் வி தர்மலிங்கம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட மன்ற துணைத் தலைவர் செல்வம், துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் உதவிப் பொருள்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
அம்மாபேட்டை பகுதி திமுக துணைச் செயலாளர் அருள், நங்கவல்லி ஒன்றிய செயலாளர் ஜி வெங்கடேஷ், மண்டல பொறுப்பாளர்கள் கேவி துளசிராமன், ஏ அருள்மணி, டி ரமேஷ், ஆத்தூர் தலைமை மன்றத்தைச் சேர்ந்த சுரேஷ், மன்ற நிர்வாகிகள் ஜெய்சங்கர், பூபதி, சித்தேஸ்வரன், தளபதிராம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மக்களின் பாராட்டை பெற்ற நெல்லை ரசிகர்களின் ரத்த தான முகாம்
ரஜினி ரசிகர் மன்றங்களிடையே கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் ஆரோக்கியமான மாற்றங்கள் குறித்து நாம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளோம். மக்களுக்கு பயன் தரக் கூடிய பல சமூகப் பணிகளில் ரசிகர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் - குறிப்பாக தென்மாவட்ட ரசிகர்கள்.
நெல்லை மற்றும் சிவகாசி ரசிகர்கள் இணைந்து ரத்தம் தேவைப்படுவோர் மற்றும் தானம் செய்ய விரும்புவோர் ஆகியோரை இணைக்கும் விதமாக www.rajiniblood.com என்ற தன்னார்வ ரத்த தான இணைய தளத்தை துவக்கியதை நீங்கள் அறிவீர்கள்.
தற்போது உலக ரத்த தான தினத்தை முன்னிட்டும் (ஜூன் 14), சுதந்திர தினத்தை முன்னிட்டும் (ஆகஸ்ட் 15) நெல்லை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் இரு பெரும் ரத்த தான முகாமை சிறப்பான முறையில் நடத்தி அந்த பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.
இதுபற்றிய படங்களும், செய்தித் தாள் கட்டிங்குகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு கௌரவம் ஏற்படுத்தும் இத்தகைய முயற்சிகளுக்கு என்றும் துணையிருப்போம். இந்த அரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ள நம் சகோதர்களுக்கு நம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
|