V.K.
Ramasamy - Report 1

V.K.
Ramasamy - Report 2
மறைந்த
கலைஞர்களில் பலருக்கும் பிடித்த நடிகர் வி.கே.ராமசாமி
அவர்கள். பிறவிக் கலைஞர் என்பார்களே... அந்த வார்த்தைக்குப்
பொருத்தமானவர் வி.கே.ஆர். அவரது ரசிப்புக்குரிய
பாத்திரங்கள் ஒன்றா இரண்டா... பல நூறு.
ஆனாலும் கடைசிவரை அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தவர்.
நமது சூப்பர் ஸ்டாரின் பெரும்பாலான படங்களில் வி.கே.ஆரைக்
கட்டாயம் பார்க்கலாம்.
எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்து தன்
மனதில் மிக உ.யர்ந்த இடத்தை ரஜினிக்கு மட்டுமே அவர்
கொடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் இந்த இரு பெரும்
மேதைகளையும் தாண்டி மேலான இடத்தை ரஜினிக்குத் தந்திருந்தார்.
அதை நான் உணர்ந்த அந்த நிமிடத்தை இப்போது நினைத்தாலும்
கண்கள் பனிக்கின்றன.
அவரைச் சந்தித்து, ஒரு பத்திரிகையாளனாக இல்லாமல், கொஞ்ச
நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை. அருணாச்சலம்
படப்பிடிப்பிலிருந்த வி.கே.ஆரிடம் என் விருப்பத்தை ஒரு
பி.ஆர்.ஓ. மூலம் சொன்னேன்.
அதுக்கென்ன இருக்கு... கழுத காசா பணமா... வாங்க.. வாங்க!
என்றார் வாய் நிறைய!
ஆனால் உடனே என்னால் அவரைப் பார்க்க சந்தர்ப்பம்
வாய்க்கவில்லை. பாபா ரிலீசாகி இரண்டு வாரங்கள்
கழிந்திருந்தது. ஊரே அந்தப் படத்தைப் பற்றி தாறுமாறாக
விமர்சித்துக் கொண்டிருந்த தருணம். அப்போதுதான்
வி.கே.ஆருக்கு உடல் நிலை சரியில்லாத செய்தி அறிந்து இன்னும்
இரு பத்திரிகை நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.
வரவேற்பறையில் தளர்வாய் சாய்ந்திருந்தார்...
‘வாங்க... வாங்க...’ குரலில் தளர்வு இருந்தாலும், உற்சாகம்
தொக்கி நின்றது.
சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
‘எதும் பேட்டி கீட்டி எடுக்கணுமா...?’
‘அதெல்லாம் ஒணுமில்லண்ணே. சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு
வந்தோம்...’
‘பாபா பார்த்திட்டீங்களா... எப்படியிருக்கு... என்னென்னமோ
பேசிக்கிறாங்களே..’ என்றார்.
‘பார்த்தேன்ணே. எனக்குப் பிடிச்சிருந்தது படம்... ஆனா
என்னன்னே தெரியல, தாறுமாறா திட்றாங்களே...”
‘நல்ல படம்தான். இந்தக் காலத்துல நல்ல படமெல்லாம்
ஓடணுமின்னு கட்டாயமில்லையே... ஆனா பாருங்க... அந்த
தம்பியோட நல்ல மனசுக்கு பங்கம் வராது. இப்ப கஷ்டப்பட்டாலும்
ஓஹோன்னு வருவாரு பாருங்க. அவரு நிறத்துல கருப்புன்னாலும்,
மனசுல எம்ஜிஆர் மாதிரி சொக்கத் தங்கம்’ என்றார்.
எனக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.
‘கிட்டத்தட்ட ரஜினியோட எல்லாப் படங்கள்லயும்
நடிச்சிருக்கீங்க... உங்க அனுபவத்தைச் சொல்லுங்கண்ணே... இது
பேட்டிக்காக இல்ல.. சும்மா இன்ட்ரஸ்ட்ல கேக்கறேன்’, என்றேன்.
உடனே அவர் சற்றே தடுமாறிபடி எழுந்தார்.
என்கூட கொஞ்சம் வாங்க என எங்கள் தோளைப் பிடித்தபடி தனது
வீட்டுப் பூஜை அறைக்குக் கூட்டிச் சென்றார்.
நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்தப் பூஜை
அறையில் ஏகப்பட்ட கடவுள் படங்கள், சின்னச் சின்னதாய்
விக்ரகங்கள்.
அவற்றின் நடுவே... இந்த
நூற்றாண்டின் அரிய மனிதர்களில் ஒருவர், நமது தலைவர்
சூப்பர்ஸ்டாரின் படம்!
ஒருநிமிடம் ஆடிப்போய் விட்டேன். கண்களில் என்னையும்
அறியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டது. வி.கே.ஆருக்கும்தான்.
என்னண்ணே இது ரஜினி படத்தை இங்க வச்சிருக்கீங்க...?,
என்றோம் நாங்கள் மூவரும்.
‘அதுக்குத் தகுதியானவர்தான்...
வயசுல அவரு சின்னவரா இருந்தாலும் குணத்துல மகான். அவருக்கு
என்னோட மரியாதையை வேற எப்படிக் காட்டுவேன்... இன்னிக்கு
நான் உடலால நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மனசால கொஞ்சமாவது
தெம்பா இருக்கேன்னா அதுக்கு ரஜினி தம்பிதான் காரணம்.
எப்பவோ ஒருமுறை... ஒரு பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு
முன்ன, அவர்கூட பிளைட்ல போறப்ப, எனக்கும் ஒரு படம் பண்ணித்
தரணும்னு கேட்டுக்கிட்டேன் அவர்கிட்ட.
கேட்டவுடனே கடவுள் வரம் கிடைக்காதில்ல... அந்த மாதிரிதான்
கொஞ்ச நாள் நான் காத்திருந்தேன். அப்புறம் நானும்
மறந்திட்டேன். ஆனா அவரோட எல்லாப் படத்திலயும் எனக்கு தவறாம
வாய்ப்புக் கொடுத்திட்டிருந்தார். நான் எதிர்பார்க்காத
பெரிய தொகை சம்பளமாக் கொடுக்க வைப்பார்.
சரி... நமக்கு படம் பண்றதுக்குப் பதில் இப்படி உதவி பண்றார்
போலன்னு நினைச்சு சமாதானமாயிட்டேன்.
ஒருநாள் பேப்பர்லதான் செய்தி படிச்சேன்... அருணாச்சலம்னு
ஒரு படத்தை அவர் தயாரிக்கிறதாவும், அந்தப் படம் தயாரிக்கும்
8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ்
போட்டிருந்தாங்க. எனக்கு ஒண்ணும் தெரியல... அப்புறம்
ரஜினியே போன்ல விஷயத்தைச் சொன்னாரு..
அந்தப் படத்துக்கு ஒரு தயாரிப்பாளரா நான் நயா பைசா
கொடுக்கல... அவரும் என்கிட்ட இதப்பத்தி ஒண்ணும் கேக்கல.
படத்துல நானும் நடிச்சேன், வில்லனா. அப்பவே சொல்லிட்டேன்,
ரஜினிய திட்டற மாதிரி வசனம் ஏதும் வச்சிடாதீங்கன்னு.
படம் முடிஞ்சு பெரிய அளவில் ஓடுச்சி.. ஒருநாள் என்னைக்
கூப்பிட்டிருந்தார் ரஜினி... ஒரு பெட்டில வச்சி ரூ.25
லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல
நடிச்சதுக்காக ஒரு பெரிய தொகையை தனியா கொடுத்தார்... இந்தக்
காலத்துல இப்படியெல்லாம் உதவற குணம் யாருக்கு வரும்...
சும்மா கொடுத்தா என் கவுரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு
தயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி.
அப்போ எனக்கு எம்ஜிஆர் ஞாபகம் வந்திடுச்சி... அவரும்
இப்படித்தான். அவரை நம்பினவங்கள திடீர்னு ஒருநாள்
தயாரிப்பாளர்னு அறிவிச்சு பெரிய ஆளாக்கிடுவார்.
எனக்கு இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்தது ரஜினியாலதான்.
அவருக்கு இதைவிட சிறப்பான பதில் மரியாதையை தர எனக்குத்
தெரியல... அவர் ரொம்ப நாள் நல்லாயிருக்கணும். நிறைய பேர்
அவரால நல்லா வாழணும்...” என்றார்.
இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களில் வி.கே.ஆர்.
நம்மைவிட்டு மறைந்தார்.
அரைவேக்காடுகளும், அஞ்ஞானிகளும் எவ்வளவுதான் புழுதிவாரித்
தூற்றினாலும் அவற்றையெல்லாம் தனது நல்ல குணத்தால்
பொசுக்கிவிட்டு ரஜினி என்ற மனிதர் சூரியனாய் ஜொலிப்பது
எப்படி எனப் புரிகிறதா...!
-சங்கநாதன்
for
www.rajinifans.com
V.K.
Ramasamy - Report 3
நான் மறைந்த நடிகர்
திரு.வி.கே.ராமசாமி அவர்கள் எழுதிய "எனது கலைப் பயணம்"
என்ற நூலை சில நாட்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. அதில்
பல சுவாரஸ்யமான விஷயங்கள் அருமையாக எழுதப்பட்டு உள்ளன.
அவற்றில் அவர் நடிகர் சங்க வரலாறு, கடன் மற்றும் அதன்
தலைவராக இருந்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர் க்கும் வந்த
கருத்து வேறுபாடு, ஈகோ போன்றவற்றை மிக நேர்த்தியாக
எழுதியுள்ளார்.
பல முக்கியமான பிரபலங்களைப் பற்றி அவர் எழுதியுள்ளவற்றில்,
நமது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி கூறியுள்ளது
குறிப்பிடத்தக்கது. அவரது வரிகளின் சாரத்தை இங்கு
சமர்ப்பிக்கிறேன்.
"நான் எம்.ஜி.ஆர். , நம்பியார் ஆகிய இருவருக்கும் அவர்கள்
எனக்கு ஆரம்ப நாட்களில் செய்த உதவிக்கு நன்றிக்கடன் பட்டு
இருக்கிறேன். இன்னும் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எப்படி
நன்றி சொல்ல முடியும் என்றே தோன்றாத அளவுக்கு என்னை அன்புக்
கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.
இந்த திரையுலகில் அடக்கம் நிறைந்த சூது வாது பொய் கபடம்
தெரியாத நேர்மை ஒன்றை மட்டுமே கொண்ட எளிமை விரும்பி மனிதர்
வாழ முடியுமா என்று என்னை வியக்க வைத்த மனிதர் ஒருவர் உண்டு.
அவர் விரலசைவுக்கு தமிழ் நாடே காத்திருக்கிறது . அது யார்
என்று உங்களுக்கே தெரியும். ஆம். அவர்தான் ரஜினி".
அவரோடு நான் நடித்த முதல் படம் ஆறு புஷ்பங்கள். அதில்
நடித்த போது ஒரு காட்சியில் அவர் ஒரு நூறு ரூபாய் கட்டை
எடுத்து என் மீது அடிப்பது போல் வரும். நான் அவரிடம் நோட்டை
கட்டாக அடிக்காதீர்கள், பின்னைப் பிரித்து விட்டு
அடியுங்கள், காட்சியும் நன்றாக இருக்கும், எனக்கும்
வலிக்காது என்று கூறினேன். அவரும் சரி என்றார். ஆனால்
காட்சி எடுக்கப்படும் போது இதை மறந்து விட்ட ரஜினி அப்படியே
கட்டாக அடிக்க என் முகத்தில் காயம் பட்டு விட்டது. உடனே "
நான்தான் அப்பவே சொன்னேனே" என்று சத்தமாக கூறியபடி செல்ல,
விஜய குமார் வந்து நான் உண்மையிலேயே சண்டை போடுவதாக
நினைத்து என்னை தடுத்தார். ரஜினியும் என்னிடம் வந்து பல
முறை மன்னிப்பு கோரினார். நானும் இது போல தவறுவது சகஜம்
என்று கூறி விட்டேன்.
பின்னர் அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் நாங்கள்
நடித்த போது ரஜினி ஒரு பூ ஜாடியை தூக்கி எறிவது போல் ஒரு
காட்சி. அப்போது ரஜினி "ஐயா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க
மேல விழுந்திடப் போகுது" என்றார். நான் பழைய விஷயத்தை
எப்பவோ மறந்துட்டேன். நான் சத்தமா பேசினதால நான்
கோபப்பட்டதாக நினைக்காதீங்க, என் குரலே அப்படித்தான்
என்றேன். ரஜினியும் சிரித்தார். என்னோடு எப்பவும் போல
பழகினார். இது எனக்கு ஒரு ஆச்சர்யம். ஏனென்றால் நான் பல
பேரை கடிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் இது போன்ற
ஓர் விஷயம் நடந்தால் அதையே சாக்காக வைத்து என்னோடு விரோதம்
காட்டுவார்கள். ஆனால் ரஜினி இதில் நேர் எதிர். எந்த ஈகோவும்
பார்க்க மாட்டார்.
பின்னர் வேலைக்காரன் படத்தில் நடித்த போது அவரிடம் எனக்கு
ஒரு படம் பண்ணி தருமாறு கேட்டேன். அவரும் கண்டிப்பாக
செய்கிறேன் ஆனால் இப்போ கமிட்மேன்ட் இருக்கு என்றார்.
நானும் வந்து விட்டேன். பிற்பாடு நான் லட்ச லட்சமாக
சம்பாதிச்ச பணத்தை சரியான வழி காட்டுதல் இல்லாததால் இழந்து
விட்டேன்.
ஒரு நாள் ரஜினியிடம் இருந்து போன் வந்தது. "ஐயா உங்களிடம்
நான் பேசணும் " நானும் அவரை சென்று பார்த்தேன். "ஐயா
நீங்கள் படம் பண்ணித் தர கேட்டிங்க. என் உடல் நிலை, மன நிலை
காரணமாக நான் பல நாட்கள் இமய மலை போயிடறேன். இப்ப உங்கள
மாதிரி இன்னும் சில பேருக்கும் சேர்த்து ஒரு படம் பண்ணி
தரலாம்னு இருக்கேன், உங்க அபிப்பிராயம் என்ன" என்று
கேட்டார். நான் "பாத்திரம் அறிஞ்சு போடும்பாங்க. நீங்க
செய்யறத உதவின்னு சொல்லறத விட தர்மம்னு தான் சொல்வேன்"
அப்படின்னு சொல்லிட்டு நன்றியுடன் திரும்பினேன். அந்த படம்
தான் அருணாசலம். அதில் எங்களிடம் ஒரு பைசா கூட அவர்
பெறவில்லை. மாறாக எங்களுக்கு தயாரிப்பாளர் என்ற பதவியையும்
லாபத்தில் ஒரு பங்கையும் பிரித்துக் கொடுத்தார். என்
எஞ்சிய காலத்தை நிம்மதியாய் கழிக்க அந்த பணம் பேருதவியாய்
இருந்தது. மேலும் நான் அவரிடம் அந்த படத்தில் நடிக்க
விருப்பம் தெரிவித்த போது, "அண்ணே, உங்களை எல்லாம் பார்த்து
பிரமித்துதான் நான் நடிக்க வந்தேன், எந்த வேஷம் வேணுமோ
எடுத்து நடியுங்க, இதெல்லாம் என்கிட்டே கேக்கணுமா? "என்றார்.
எனக்கு நல்ல சம்பளமும் தனியாக கொடுத்தார்.
எங்கோ பிறந்து, வளர்ந்து, தமிழ் நாட்டுக்கு கலைச் சேவை
செய்ய வந்த அவர் எனக்கு இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம்
என்ன? இதுதான் அன்பு. பல பேர் அவர் புகழுக்காக செய்கிறார்
என்று என்னிடமே சொன்ன போது நான் "இப்படி செய்து புகழ் பெற
வேண்டிய நிலையில் அவர் இல்லை. அப்படியே இருந்தாலும்,
யாருக்கு இப்படி மனம் வரும்? என்று காட்டமாக கூறினேன்.
அந்த நல்ல மனிதர் நல்ல ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழ
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
------- நன்றி திரு.வி.கே.இராமசாமி அவர்கள்.
http://eramanathan.blogspot.com/2007/11/blog-post.html
|