Peter Selvakumar (Writer & Producer)

அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பொன்மனச் செல்வன் ஆகிய படங்களைத் தயாரித்த, 'தாயம் ஒண்ணு' படத்தைத் தயாரித்து இயக்கிய பீட்டர் செல்வகுமார் ஆரம்பத்தில் கதாசிரியராக இருந்தவர். 'மூன்று முகம்' படத்தின் கதாசிரியர் அவரே.

பீட்டர் செல்வகுமார் ரஜினியைச் சற்று வித்தியாசமாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.

ரஜினியை விட நான் வயதில் மூத்தவன் என்றாலும் 'ரஜினி சார்' என்பேன். அதற்கு அவர், "ரஜினி என்று சொல்லுங்கள் போதும். ஏன் 'சார்' போடுகிறீர்கள்?" என்று தன் சங்கடத்தைத் தெரிவித்தார். "சார் போட்டு அழைக்குமளவிற்கு தகுதியுடையவர் நீங்கள்" என்றேன். இப்போதும் நான் அவரை அப்படித்தான் அழைக்கிறேன்.

''ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் 'பைரவி'. அதில் நான் வசன உதவியாளராக இருந்தேன். வேகமாக வசனம் பேசும் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. 'Time is Money' என்பதைப் போல் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் ரஜினி. அந்த உணர்வு ரஜினியிடம் இன்றைக்கும் உண்டு.

அப்போதே ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம் கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர். ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவே பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'பைரவி'யில் ரஜினிக்கு எதிரான வில்லன் வேடம் அவருக்கு. ரஜினிக்கு அது சங்கடம்தான். தன்னைவிட சீனியரான ஸ்ரீகாந்துக்கு மதிப்பளிக்க வேண்டி, படப்பிடிப்புக்கு வந்து அவர் முதலில் வேண்டிக் கொண்டது, "டைட்டிலில் ஸ்ரீகாந்த் சார் பெயர் முதலில் வரட்டும். என் பெயர் அடுத்து வந்தால் போதும்" என்பதைத்தான். ரஜினியின் இந்த சினிமா தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீது அதிக மதிப்பும், அன்பும் கொள்ளச் செய்தது.

'பைரவி' முதல் கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸில் ஆரம்பமானது. கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு ரஜினி ஸ்ரீகாந்தை விரட்டுவது மாதிரி காட்சி. அதற்காக கண்ணாடி முன் நின்று சவுக்கை கழுத்தில், இடுப்பில்..... இப்படிப் பலவிதமாக சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதையெல்லாம் பார்த்து 'ரஜினி என்ன இப்படிக் கிறுக்குத்தனமாக செய்கிறார்' என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் அவர் ரசிக்கும்படியாகச் செய்தபோதுதான் என் தவறை உணர்ந்தேன்.

முதலாளி ஸ்ரீகாந்திடம் விசுவாசமாக இருக்கிறார் ரஜினி. ஆனால் அதே முதலாளி தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவன் என்று அறியும் போது ஆவேசத்துடன், "நீ சுட்டு விரலைக் காட்டினப்ப நான் வேட்டை நாய் மாதிரி பாய்ஞ்சேன்" என்று சொல்வார். நான் ரஜினியிடம் அந்த வசனங்களைச் சொல்லி, சொடக்கு போட்டுக் காண்பித்த போது, "இப்படிச் செய்தால் சிவாஜி சார் மாதிரி இருக்குமே" என்றார். நான் அதற்கு "உங்களது வசனம் பேசும் வேகத்தில் சிவாஜி சார் சாயல் வராது" என்றேன். அதை ரஜினி ஒத்துக் கொண்டார்.

படத்தில் ரஜினிக்கு ஒரு கால் இருக்காது. அதற்காக கட்டையைக் கட்டிக் கொள்வார். அப்படிக் காலில் ஒன்றைக் கட்டிக் கொண்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடை (கோவை அருகிலுள்ளது) அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் சிரமம் பாராமல் நடித்தார்.

அடுத்து 'தர்மயுத்தம்'. நான் கதை, வசனம் எழுதிய முதல் படம். ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரம் அது. ஆனால் அவரால் படப்பிடிப்பில் எந்தப் பிரச்னையுமில்லை. படத்தில் பௌர்ணமியன்று ரஜினியைக் கட்டிப் போடுவார்கள். அப்போது அவர் அலறுவார். அது போல் ஒரு காட்சி அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தயாராக இருந்தபோது ரஜினி வரவில்லை.

படப்பிடிப்பு தொடங்கிய வீடு திருமதி. ரெஜினா வின்சென்ட் என்பவருக்குச் சொந்தமானது. ரஜினி அவர்மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அவரைத் தன் தாயாகவே நேசித்தார். ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமானபின், முதலில் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'தர்மயுத்தம்'. அதற்கு முன் 'நமக்கு இது முதல் படம். அவர் குணமாகி வருவாரோ, மாட்டாரோ' என்று நான் மட்டுமின்றி, தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் சஞ்சலத்தில் இருந்தார்.

ரஜினி படப்பிடிப்புக்கு வந்தபின் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் உதறல் இருந்தது. ரஜினியிடம் 'ரீ டேக்'கிற்கு கூட தயங்கினார்கள். ஒரு சமயம் டைரக்டர் ஆர்.சி.சக்திக்கு இன்னொரு டேக் தேவைப்பட்டது. அவர் ரஜினியிடம் கேட்கத் தயங்கினார். என்னைத் தூண்டிவிட்டார். நான் ரஜினியிடம் மெதுவாகச் சென்று வேறு விஷயங்களைப் பற்றி பேச்சுக் கொடுத்து கடைசியில் "ஒண்ணுமில்ல. இன்னொரு டேக் எடுத்தா நல்லதுன்னு படுது" என்றேன். "அதனாலென்ன நடிக்கிறேனே" என்றார். படம் முடிந்தபின், "நான் நல்ல நிலையில் இருந்திருந்தால் இன்னும் சரியாகச் செய்திருப்பேனோ?" என்று வருந்தினார். இந்த வருத்தம் ரஜினிக்கு எப்போதும் உண்டு.

மகேந்திரன் இயக்கிய ஜானியில் ஒரு கதாசிரியர் என்ற முறையில் ஸ்டோரி டிஸ்கஷனில் மட்டுமின்றி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்வேன். 'ஜானி' படத்திற்காக ஊட்டியில் ரஜினி ஓடிய ஓட்டம் இருக்கிறதே, எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கு பார்க்காமல் ஓடியிருக்கிறார். அதற்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தாலும் ரஜினி முதல் பரிசு வாங்கியிருப்பார்.

ஜானி போலீஸுர்க்கு பயந்து ஓடிய பின், பார்பர் வித்யாசாகர் (இதுவும் ரஜினி) ஸ்ரீதேவியிடம் வருவார். ஜானியைப் போல் நடித்து கடைசியில் 'நான் வித்யாசாகர்' என்று அறிமுகம் செய்து கொள்வார். அந்தக் காட்சி முடிந்தபின் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி சுமார் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். வித்யாசாகர் வேடத்தைப் பார்த்துவிட்டு, "அட என்னம்மா நடிக்கிறார் பாருங்க' என்று தன் கேரக்டரையே அவர் ரசித்தபோது, அதைப் பார்த்து நான் ரசித்தேன்.

'ஜானி' படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சில தினங்கள் தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு நடக்கும். மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் வைத்துக் கொள்வார். நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத் திரும்பும் ரஜினி உடைகளை, ஷூவைக் கூடக் கழற்றாமல் அப்படியே காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. "ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத் தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்" என்பார். சொன்னது போலவே தயாராக நிற்பார்."

அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்திற்காக மேக்கப்பில் தானே சில வித்தியாசங்களைச் செய்து கொண்டார். முகத்தில் முரட்டுத்தனம் வேண்டுமென்பதற்காக பொய்யான தாடையொன்றைப் பொருத்திக் கொண்டு நடித்தார். தாடையில் அது உறுத்தலாக இருக்குமென்றாலும், கேரக்டரின் சிறப்புக்காக ரஜினி அதைப் பொறுத்துக் கொண்டார்.

படத்தில் அலெக்ஸ் பாண்டியனைச் சாராய முதலாளி ஆளவந்தார் (செந்தாமரை) காவல் நிலையத்தில் வந்து மிரட்டுவார். அந்தக் காட்சியில் ரஜினிக்குச் சற்று மாறுபட்ட கருத்து இருந்தது. "பீட்டர் சார்! போலீஸ்காரன் எதுக்கு சாராய முதலாளிகிட்ட விவாதம் பண்ணனும். பிடிச்சு உள்ளே தள்ள வேண்டியதுதானே?" என்று கேட்டார். நான் அதற்கு விளக்கம் சொன்னபோது ரஜினி ஏற்றுக் கொண்டார். ரஜினியின் விருப்பப்படி சில திருத்தங்களையும் செய்தேன். படமாக்கி முடித்தபின் ரஜினி என்னிடம் தனியாக "நான் உங்கள் வேலையில் குறுக்கிடுகிறேனா?" என்று கேட்டார். "உங்கள் யோசனைகள் நியாயமானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம்" என்றபோது ரஜினி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

'மூன்று முகம்' படத்தில் ரௌடியாக மற்றொரு கேரக்டரில் ரஜினி வருவார். அந்த ரஜினியை கராத்தே தெரிந்த ராதிகா அடித்து கீழே தள்ளுவதாக ஒரு காட்சி இருந்தது. அப்படி நடித்தால் இமேஜ் பாதிக்குமோ என்று ரஜினி யோசித்திருக்கிறார். நான் அவரிடம் காட்சியின் தன்மையை விளக்கியபோது, ரஜினி சரிதான் என்று ஒத்துக் கொண்டார். ரௌடி வேடத்தில் ரஜினி ஜாலியான வசனங்கள் சிலவற்றைப் பேசுவார். அதெல்லாம் படப்பிடிப்பின் போது ரஜினியே சேர்த்துக் கொண்டது.

'சிவப்பு சூரியன்' படத்திற்கு கதாசிரியராக இருந்தபோது ரஜினி சில சமயம் மதிய உணவிற்கு அழைப்பார். "இன்றைக்கு வீட்டிலிருந்து தலைக்கறி வந்திருக்கு. லதா அனுப்பியிருக்காங்க" என்று தன் மனைவியைப் பற்றி பெருமையோடு சொல்வார். பின்னர் ரஜினி வீட்டில் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார். "லதாவுக்கு அசைவம் சமைப்பதிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டேன்" என்றார். அந்தளவு மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் அவர். ரஜினி தன் மனைவியைப் பற்றிப் பிறரிடம் பேசும்போது மரியாதையாகத் தான் சொல்வார்.

மதுரையில் நடைபெற்ற 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவில் பேசியவர்களெல்லாம் ரஜினியைப் பாராட்டினார்கள். கடைசியாக பேசிய ரஜினி, "இங்கு எல்லோரும் என்னையே பாராட்டினார்கள். ஆனால் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான்" என்று மேடையில் பின் வரிசையில் இருந்த கதாசிரியர் பீட்டர் செல்வகுமாரை மேடையின் முன்புறம் வரச் செய்து, ரசிகர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதை செல்வகுமார் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கிவிட்டன. "நான் செய்தது நியாயம்தானே?" என்று ரஜினி அவரிடம் கேட்டார். செல்வகுமாருக்கு பேச நா எழவில்லை.