AVM
Saravanan
ரஜினி பற்றியும், "முரட்டுக்காளை''
படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றியும் பட அதிபர்
ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-
"சுமார் 25 வருடங்களுக்கு மேலாக எனக்கு ரஜினி பழக்கம். அவர்
எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுபவர். "நான் உண்மையே பேசி
பழகிவிட்டேன். இந்தப் பணம், புகழ், பெயர் வந்திட்டா, பொய்
பேச வேண்டிய நிலைமையும் வந்திடும். சாப்பாட்டுக்கே
வழியில்லாது கஷ்டப்பட்ட காலத்திலேயே உண்மை பேசிவிட்டு,
வசதியான வாழ்க்கை அமைந்தபின் இப்போது பொய் பேச மனதுக்குப்
பிடிக்கவில்லை. இனிமே வாழப்போறதுகொஞ்ச நாள், அதுவரைக்கும்
பொய் பேசாமலேயே இருந்து விடலாமேன்னு தோன்றுகிறது'' என்று
என்னிடம் அவர் கூறியதுண்டு.
அதுமட்டுமல்ல. வழக்கமாக சினிமா உலகில் எல்லாருமே கால்ஷீட்
விஷயங்களைக் கவனித்துக்கொள்ள ஓர் உதவியாளரை வைத்துக்
கொண்டிருப்பார்கள். விருப்பம் இல்லாத விஷயங்களைத்
தட்டிக்கழிக்கவும், , தவறு நேர்ந்து விட்டால் பழியைப்
போட்டுவிட்டு நழுவவும், அந்த உதவியாளரைப் பயன்படுத்திக்
கொள்வார்கள்.

ஆனால், ரஜினி இந்த விஷயத்தில் நேர் எதிர். மற்ற விஷயங்களைக்
கவனித்துக்கொள்ள உதவியாளர்கள் இருந்தாலும், கால்ஷீட்
விஷயத்தைத் தானே நேரடியாக கவனித்துக்கொள்வார். ஒரு
தயாரிப்பாளருக்குத் தேதிகளை முடிவு செய்துவிட்டால், தானே
அதைக் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்டவரிடம்
கொடுத்து விடுவார். எக்காரணம் கொண்டும் கொடுத்த தேதியை
மாற்றமாட்டார். வேறு யாராவது அந்த தேதிகளில் அட்ஜெஸ்ட்
செய்து ஓரிரு நாட்கள் கால்ஷீட் கேட்டால் கூட `சம்பந்தப்பட்ட
தயாரிப்பாளர், டைரக்டரிடம் நீங்களே நேரடியாக
பேசிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிடுவாரே தவிர, அவர்
தலையிட்டு தர்மசங்கடம் ஏற்படுத்த மாட்டார்.
ஜெய்சங்கருக்கு மரியாதை
அடுத்தவர் மனம் நோகும்படி எதுவும் செய்து விடக்கூடாது
என்பது ரஜினியின் பாலிசி. எங்களது `முரட்டுக்காளை' படத்தில்
ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப்
படத்தின் ஹீரோவான ரஜினி, `நூற்றைம்பது படங்களில் ஹீரோவாக
நடித்த ஜெய்சங்கர் இதில் வில்லன். அவர் வில்லன் என்பதால்,
படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை
கொஞ்சமும் குறைத்துவிடாதீர்கள்' என்று கண்டிப்பாய்ச்
சொல்லிவிட்டார்.''
"இப்போதெல்லாம் மேடைகளில்
ரஜினி பிரமாதமாகப் பேசுகிறார். ஆரம்பத்தில் பொது
நிகழ்ச்சிகளில் பேசவே கூச்சப்பட்டு, மறுத்து விடுவார்.
எங்கள் தயாரிப்பான "போக்கிரிராஜா'' படத்தின் வெற்றி
விழாவில் பேசவேண்டும் என்று ரஜினியிடம் முன்கூட்டியே
சொன்னபோது அவர் தயங்கி மறுத்துவிட்டார். இயக்குனர்
எஸ்.பி.முத்துராமன்தான் அவரிடம், "பயப்படாதீங்க. நீங்கள்
என்ன பேசவேண்டும் என்று நான் காகிதத்தில் எழுதிக் கொடுத்து
விடுகிறேன். அதை அப்படியே படித்துவிடுங்கள்'' என்று
தைரியமூட்ட, ரஜினி பேச ஒப்புக்கொண்டார்.
பேச்சுத்திறன்
எழுதிக்கொடுத்த பேச்சை, நிகழ்ச்சியின்போது ஓர் ஐந்து
நிமிடத்துக்குத்தான் படித்திருப்பார். அவ்வளவுதான். அதன்
பிறகு, பேச்சு எழுதப்பட்ட பேப்பரை மடித்து பாக்கெட்டில்
வைத்துக்கொண்டு, தானே தன்னிச்சையாகப் பேச
ஆரம்பித்துவிட்டார்.
இப்போதுகூட, `சாதாரண ஆளான என்னை மேடைப்பேச்சாளராக்கியவர்கள்
எஸ்.பி.முத்துராமனும், ஏவி.எம்.சரவணனும்தான்' என்று தவறாமல்
தமாஷாகக் குறிப்பிடுவார், ரஜினி''
இவ்வாறு ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின்
சிறப்புகள் பற்றி, பட அதிபர் ஏவி.எம்.சரவணன் மனம் திறந்து
பாராட்டினார்.
ஏவி.எம். பேனரில் முரட்டுக்காளை, போக்கிரிராஜா, பாயும்புலி,
நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மனிதன், ராஜாசின்னரோஜா,
எஜமான் ஆகிய 8 படங்களில் ரஜினி நடித்துள்ளார். விரைவில் வர
இருக்கும் "சிவாஜி'', ஏவி.எம். பேனரில் அவருடைய 9-வது
படம்.ஏவி.எம்.சரவணனுக்கும், ரஜினிக்கும் நெருங்கிய பழக்கம்
உண்டு. கட்டுரை ஒன்றில், ரஜினி பற்றி அவர்
எழுதியிருப்பதாவது:-
தியானம்
"ரஜினி இப்போதெல்லாம் தனிமையிலிருக்கவும் தியானத்துக்கும்
அதிக நேரம் செலவிடுகிறார். ஆன்மீகப் புத்தகங்கள்
படிக்கிறார். சொற்பொழிவுகள் கேட்கிறார். அவரது சொல்லும்,
செயலும் நாளுக்கு நாள் மெருகேறி வருவதற்கு, அவரது இந்த
ஆன்மீக ஈடுபாடுதான் காரணமென நான் நினைக்கிறேன்.
ரோட்டரி கிளப்பில் ஒரு மாநாட்டுக்கு ரஜினியைப் பேச
அழைத்திருந்தார்கள். அங்கே வந்திருந்தவர்களுக்கு ரஜினி
என்ன பேசப்போகிறார் என்பதைவிட அவரைக் கிட்டே பார்க்கும்
ஆர்வம்தான் அதிகமாக இருந்தது. ரஜினி பேச ஆரம்பித்தார்.
`அமெரிக்காவுக்குப் போய் ஜாலியா - சந்தோஷமா இருக்கணும்னா
ரூபாயை `டாலராக' மாத்தி எடுத்துக்கிட்டுப் போகணும், ஜப்பான்
போகணும்னா `யென்னா' மாத்தி எடுத்துக்கிட்டுப் போகணும்.
ஆனால் ஓர் இடத்துக்குப்போய் நிம்மதியா சந்தோஷமா
இருக்கணும்னா உங்ககிட்ட இருக்கிற ரூபாய் பயன்படாது. அதற்கு
நீங்க நிறைய சேர்க்கணும். பணம், காசு இல்லை.. புண்ணியம்.
உங்களுடைய உழைப்பால், நினைப்பால், செயலால் புண்ணியம்
சேர்க்கணும். அந்த இடம்தான் நாம் எல்லோரும் கடைசியில் போய்
சேருகிற இடம்' என்று சொல்லி கையை மேலே காட்டினார். `அங்கே
போய் நாம் நிம்மதியா இருக்கணும்னா, நாம் இங்கே சேர்க்கிற
புண்ணியம்தான் பாஸ்போர்ட், விசா, எக்ஸ்சேஞ் எல்லாமே' என்று
ரஜினி பேசி முடித்தவுடன் ஒரே கிளாப்ஸ்.

சாதாரண கண்டக்டர் வாழ்க்கையை ஆரம்பித்து நடிகராக புகழ்
பெற்றிருக்கும் ரஜினிக்கு இத்தனை ஆழமான ஆன்மீக ஞானமா? என்று
அனைவருக்கும் ஆச்சரியம். ரஜினியிடமிருந்து இப்படி ஒரு
பேச்சை எதிர்பார்க்கவே இல்லை. "எவ்வளவு பெரிய விஷயத்தை
எத்தனை சிம்பிளாகச் சொல்லிவிட்டார்'' என்று பல சீனியர்
ரோடேரியன்களே வியந்தார்கள்.
சீனியர்களுக்கு மரியாதை
திரையுலகில் என்றைக்குமே சீனியர்களுக்கு மரியாதை கொடுப்பார்
ரஜினி. இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு ரஜினியுடன்
நெடுங்காலமாக நெருக்கம் உண்டு. அதனால் அவர் ரஜினியை
உரிமையுடன் `ரஜினி... நீ...' என்றே அழைப்பார். ஆனால்
ரஜினியோ, எஸ்.பி.எம்மை எப்போதுமே "முத்துராமன் சார்''
என்றுதான் அழைப்பார்.
அதுமட்டுமில்லை. ரஜினி தன் உதவியாளரான ஜெயராமனை
அழைக்கும்போதுகூட `நீங்க... வாங்க...' என்று மரியாதை தரத்
தவறமாட்டார்.எம்.ஜி.ஆர். போஸ்டர்
எங்கள் தயாரிப்பான `சகல கலா வல்லவன்' படத்தில் கமலுடைய
சண்டைக்காட்சி ஒன்றில் ஓர் இடத்தில் சுவரில் ஒட்டப்பட்ட
எம்.ஜி.ஆர். படப் போஸ்டர் வரும். அந்தக் குறிப்பிட்ட
காட்சியின்போது தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டலும்,
விசிலும் அதிகமாக இருக்கும்.
அந்தக் காட்சிக்கு கிடைத்த அதிகப்படியான வரவேற்பைப்
பார்த்து விட்டு, நாங்கள் ரஜினியை வைத்து `பாயும்புலி' படம்
எடுத்தபோதும் ஒரு சண்டைக் காட்சியின்போது சுவரில்
எம்.ஜி.ஆர். படப்போஸ்டர் வரும்படி செய்திருந்தோம். ஆனால்
அந்தக் காட்சியைப் படம் பிடித்தபோது ரஜினி சுவரில் இருந்த
எம்.ஜி.ஆர். படப்போஸ்டரை எடுக்கச் சொல்லிவிட்டார்.
நாங்கள் அந்த போஸ்டர் எதற்காக என்று விளக்கியபோது,
கண்டிப்பாக அதனை எடுக்கச் சொல்லிவிட்டார். அதற்கு அவர்
சொன்ன காரணம் `என்னைப் பார்க்க விரும்புகிறவர்கள் என்
படத்துக்கு வரவேண்டும். எம்.ஜி.ஆர். என்ற பெரிய மனிதரின்
புகழைப் பயன்படுத்தி எனக்கு பாராட்டு கிடைக்கும்படி செய்வது
நியாயமில்லை.' ரஜினியின் கருத்துப்படியே எம்.ஜி.ஆர்.
போஸ்டர் அகற்றப்பட்டது.

ஆட்சி மாற்றம்
1996-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு
ரஜினி எந்த அளவுக்குக் காரணம் என்பதை நாடே அறியும். ஆனாலும்
கூட கலைஞர் முதல்-அமைச்சர் ஆனவுடன் அவரைச் சந்தித்தபோது `என்
பெயரைப் பயன்படுத்திக்கொண்டு அதைச் செய்து கொடுங்கள். இதைச்
செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டு யாரும் வரக்கூடாது என்று
என் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் சொல்லி இருக்கிறேன்.
அப்படியே யாராவது வந்தாலும் நீங்கள் நம்பவேண்டாம்' என்று
தெளிவுபடுத்தியதாக ரஜினியே என்னிடம் சொன்னபோது இப்படியும்
ஒரு மனிதரா? என்று வியந்து போனேன்.
மனோரமா
`தேர்தல் நேரத்தில் ரஜினி பற்றி அரசியல் ரீதியாக அல்லாமல்
தனிப்பட்ட முறையில், சினிமா உலகில் நாங்கள் எல்லோருமே
மிகவும் மரியாதைக்குரியவராகக் கருதும் பெண்மணியான `ஆச்சி
மனோரமா' விமர்சித்தது பற்றி அறிந்தபோது நான் மிகவும்
அதிர்ச்சிக்குள்ளானேன். சாகும் வரை நடித்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆச்சியின் திரையுலக
வாழ்க்கைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ளும்படி
ஆகிவிட்டதே என்று நான் ரொம்ப வருந்தினேன். ஆச்சிக்கு புதிய
படங்கள் புக் ஆகவில்லை. ஒப்பந்தம் செய்யப்பட்ட
படங்களிலிருந்து அவரை நீக்கிவிட்டார்கள். அது மட்டுமா? அவர்
இடம் பெற்ற டி.வி. விளம்பரங்களைக் கூட நிறுத்திவிட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில் ரஜினியே ஆச்சியின் பேச்சை மனதில்
வைத்துக்கொள்ளாமல், தன் படத்தில் முக்கியமான ரோல் ஒன்றைக்
கொடுத்து ஆச்சிக்கு திரையுலகில் ஒரு மறுவாழ்வை அளித்தது,
ரஜினியின் மனித நேயத்தைக் காட்டுகிறது.''
இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.
>>> Part 2
|