Azhagan Thamizhmani (Producer)
"அன்புள்ள எம்.ஜி.ஆர்''
என்ற பெயரில் தயாராக இருந்த படம், பிறகு "அன்புள்ள
ரஜினிகாந்த்'' என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது.
இந்தப் படத்தை கதை-வசன ஆசிரியர் தூயவனும், "அழகன்''
தமிழ்மணியும் சேர்ந்து தயாரித்தனர்.
தூயவன், புகழின் உச்சியில் இருந்தபோதே எதிர்பாராதவிதமாக
காலமானார்.
தமிழ்மணி, பின்னர் "தர்மபத்தினி'', "சோலைக்குயில்'', "சித்திரைப்பூக்கள்'',
"அன்பே உன் வாசம்'' ஆகிய படங்களைத் தயாரித்தார். இப்போது,
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளராக
இருக்கிறார்.
படம் உருவான கதை
"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானபோது நடந்த ருசிகர
நிகழ்ச்சிகளை அழகன் தமிழ்மணி வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:-
"25 ஆண்டுகளுக்கு முன், நான் பத்திரிகையாளராக இருந்தேன்.
நிருபராக பணிபுரிந்ததால், திரை உலகத்தினருடன் பழகும்
வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து, "மலைïர் மம்பட்டியான்''
படத்தைத் தயாரித்தேன். இதில் தியாகராஜன் (பிரசாந்த்தின்
தந்தை), சரிதா ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் டைரக்ட்
செய்தார். இளையராஜா இசை அமைத்தார்.
இது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம்.
இந்தப்படம் வெளியான பிறகு, பங்குதாரர்கள் தனித்தனியே
பிரிந்தோம்.
பட விழா
இந்தக் காலக்கட்டத்தில், நானும், பிரபல கதை - வசன
கர்த்தாவாக விளங்கிய தூயவனும் நெருங்கிய நண்பர்களானோம்.
டெல்லியில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நாங்கள் சென்றோம்.
அங்கு ஒரு திரை அரங்கில் "டச் ஆப் லவ்'' (அன்பின் ஸ்பரிசம்)
என்ற படத்தை திரையிட்டார்கள். எங்கள் இரண்டு பேரைத் தவிர,
மேலும் 3 பேர்தான் அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தார்கள்!
ஊனமுற்ற குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது.
எங்களைத் தவிர, மற்ற மூன்று பேரும் நடுவிலேயே தூங்கி
விட்டார்கள்! நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் படத்தைப்
பார்த்தோம்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக எல்விஸ் பிரஸ்லி என்ற பாப்
பாடகர் நடித்திருந்தார். படத்தின் தொடக்கத்தில், அவர்
தோன்றமாட்டார். டெலிபோனில் பேசுவது, கடிதங்கள் எழுதுவது
போன்ற காட்சிகளில்தான் (முகத்தை காட்டாமல்) வருவார்.
உச்சகட்ட காட்சியில்தான் நேரடியாகத் தோன்றுவார்.
படத்தைப் பார்த்தபோது சில காட்சிகளில் கண்ணீர் விட்டு
அழுதுவிட்டோம். அந்த அளவுக்கு படம் உருக்கமாக இருந்தது.
"இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, தமிழில் ஒரு படம்
தயாரிக்க வேண்டும். அது நமது லட்சியப்படமாக அமையவேண்டும்''
என்று நானும், தூயவனும் முடிவு செய்தோம்.
சென்னை திரும்பியவுடன், ஒரு மாத காலத்தில் கதை, திரைக்கதை,
வசனத்தை எழுதி முடித்தோம். ஒரு பிரபல நடிகரை கவுரவ
வேடத்தில் நடிக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.
எம்.ஜி.ஆர்.
அப்போது,
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். அவரை சந்தித்து,
கதை முழுவதையும் சொன்னோம். உருக்கமான கட்டங்களை சொன்னபோது,
அவர் கண் கலங்கினார். "இந்தப் படத்தில் தாங்கள் கவுரவ
வேடத்தில் தோன்றவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டோம்.
"அரசாங்க அலுவல்கள் பல இருந்தாலும், கவுரவ வேடத்தில்
தோன்றுகிறேன். இதுபற்றி, மேற்கொண்டு அமைச்சர்
அரங்கநாயகத்திடம் சென்று பேசுங்கள்'' என்று எம்.ஜி.ஆர்.
கூறினார்.
அதன்படி, அரங்கநாயகத்தை
சந்தித்தோம். "படத்தின் பெயர் என்ன?'' என்று அவர் கேட்டார்.
நான் சட்டென்று "அன்புள்ள எம்.ஜி.ஆர்'' என்று கூறினேன்.
உண்மையில், படத்தின் பெயர் அதுவரை முடிவாகவில்லை. ஏதோ என்
மனதில் தோன்றியது; சொன்னேன்.
கதை முழுவதையும் கூறும்படி அரங்கநாயகம் கேட்டார். தூயவன்
முழுக்கதையையும் சொன்னார். அரங்கநாயகத்துக்கு மிகவும்
பிடித்துவிட்டது. "கதை, திரைக்கதை, வசனத்துக்காக ஒரு நல்ல
தொகை கொடுக்கிறேன். படமாக்கும் உரிமையை எனக்குக்
கொடுத்துவிடுங்கள்'' என்றார்.
யோசித்துச் சொல்வதாக கூறிவிட்டுத் திரும்பினோம்.
இதை எங்கள் லட்சியப் படமாகத் தயாரிக்க நாங்கள் முடிவு
செய்திருந்ததால், உரிமையை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை.
"பிச்சை எடுத்தாவது, நாமே இந்த படத்தைத் தயாரிப்போம்''
என்றார், தூயவன். நாங்கள் ஸ்கூட்டரில் பயணம் செய்து
கொண்டிருந்த காலம் அது.
ரஜினியிடம் தூது
தேவர் பிலிம்சில் உதவி டைரக்டராகப் பணியாற்றிக்
கொண்டிருந்த ரஜினியின் நண்பர் கே.நட்ராஜை சந்தித்தோம். "எங்களிடம்
ஒரு நல்ல கதை இருக்கிறது. அதில் ரஜினி கவுரவ வேடத்தில்
நடிக்க வேண்டும். உங்களை டைரக்டராகப் போடுகிறோம். நீங்கள்
ரஜினியை சந்தித்து, அவரிடம் தூயவன் கதை சொல்ல, நேரம்
கேளுங்கள்'' என்று கூறினேன்.
அதேபோல் நட்ராஜ், ரஜினியிடம் சென்று நேரம் கேட்டு வந்தார்.
குறிப்பிட்ட நாளில், ரஜினியை தூயவன் சந்தித்து கதையை
விரிவாகச் சொன்னார். கதை ரஜினிக்குப் பிடித்து விட்டது.
கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆறு நாட்கள் கால்ஷீட்
தருவதாகக் கூறினார்.
படத்தின் பெயர் என்ன என்பதை நாங்கள் அவரிடம் கூறவில்லை.
பணம் திரட்டினோம்
அந்த நேரத்தில் என்னிடமும், தூயவனிடமும் பணமே கிடையாது.
தெரிந்தவர்களிடம் கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி, ரூ.15 ஆயிரம்
திரட்டினோம்.
ரஜினியுடன் நடிக்க அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜ்குமார்
ஆகியோரை ஒப்பந்தம் செய்தோம். பேபி மீனா, பேபி சோனியா,
மாஸ்டர் டிங்கு ஆகியோரை குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம்
செய்தோம்.
1983 மார்ச் 31-ந்தேதி
ஏவி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது. அன்றைய
தினம்தான், "தினத்தந்தி''யில் வெளியிட்ட முழுப்பக்க
விளம்பரத்தில் "அன்புள்ள ரஜினிகாந்த்'' என்ற பெயரைக்
குறிப்பிட்டோம். ரஜினிக்கும் அன்றுதான் படத்தின் பெயர்
தெரியும்!
படப்பிடிப்பு முழுவதும் சென்னை சாந்தோமில் உள்ள
உயர்நிலைப்பள்ளியில், 300 மாணவ-மாணவிகளை வைத்து நடந்தது.
ரஜினி உதவி
இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பை என்
வாழ்நாளில் மறக்க முடியாது. படம் முழுவதும், 15 "செட்''
உடைகளை மட்டும் பயன்படுத்தி நடித்தார். தனக்கென தனி
ஒப்பனையாளர், "டச்சப்'' உதவியாளர் என்று யாரையும் வைத்துக்
கொள்ளவில்லை. எங்களுக்கு செலவு வராமல் பார்த்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் 6 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருந்த
ரஜினி, படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மேற்கொண்டு 10
நாட்கள் ஒதுக்கி, பத்து பைசாகூட வாங்காமல் நடித்துக்
கொடுத்தார்.
ரஜினி வீட்டில் படப்பிடிப்பு
ரஜினிகாந்தை அவர் வீட்டில் மீனா சந்திப்பது போல் ஒரு காட்சி
வருகிறது. அதைச் சொன்னதும், "இந்தக் காட்சியை வேறு எங்கும்
போய் எடுக்க வேண்டாம். என் வீட்டிலேயே படமாக்கிக்
கொள்ளுங்கள்'' என்று கூறினார். அது மட்டுமல்ல; தன் மனைவி
லதாவையே டிபன் பரிமாறும்படி கூறி, எங்களை மகிழ்ச்சியில்
திக்குமுக்காடச் செய்தார்.
படத்தில் வரும் "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே'' என்ற
பாடலை லதா ரஜினிகாந்த் பாடினார். திரைப்படத்துக்காக அவர்
பாடியது இதுவே முதல் தடவை.
டைரக்டர் கே.பாக்யராஜ் மிகவும் `பிசி'யாக இருந்த நேரம் அது.
அவருடன் ரஜினியே பேசி, கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்தார்.
அந்த காமெடி ஓரங்க நாடகம் (கிருஷ்ண தேவராயர் - தெனாலிராமன்)
இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.
படம் நன்றாக அமைந்ததால், என்னையும், தூயவனையும் அழைத்து
ரஜினி பாராட்டிய சொற்கள், இன்னமும் என் செவிகளில்
ஒலிக்கின்றன.
லாபம்
அந்தக் காலக்கட்டத்தில், எங்களுக்கு வசதி அதிகம் கிடையாது.
24 பிரதிகள் எடுத்து, ரூ.24 லட்சத்துக்கு விற்றோம்.
எனக்கும், தூயவனுக்கும் ஆளுக்கு 1ஷி லட்சம் லாபமாகக்
கிடைத்தது.
எனினும், படம் பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டைப்
பெற்றதை பெரிய லாபமாகக் கருதினோம்.
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பினால்தான் இந்தப்
படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. இதற்காக வாழ்நாள்
முழுவதும், நானும், தூயவன் குடும்பத்தினரும் அவருக்குக்
கடமைப்பட்டுள்ளோம்.''
இவ்வாறு அழகன் தமிழ்மணி கூறினார்.
|