Madhan -
Writer
3 December 2008
குறுகிய
நேரம்தான் மதன் நம்மிடம் ரஜினி குறித்துப் பேசினார். ஆனாலும்
தனது சின்ன கார்ட்டூனில் அவ்வளவு விஷயத்தையும்
சொல்லிவிடுவதைப் போல, நான்கு பாரா என்றாலும் நச்சென்று
கூறினார் மதன்.
அவர் கூறியதிலிருந்து...
எப்பேர்ப்பட்ட இன்டெலக்சுவலாக இருந்தாலும் அவர்களுக்குள்
ஒளிந்திருக்கும் தனிப்பட்ட விருப்பங்களில் ஒரு ரசிகத் தன்மை
இருக்கும். யாராவது ஒரு நடிகரின் ரசிகர்களாக தங்களை அவர்கள்
வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள் அந்த
விருப்பம் அப்படியேதான் இருக்கும்.
நான் இன்டலெக்சுவலா... இல்லையா என்பது வேறு
விஷயம். ஆனால் எனக்குப் பிடித்த நடிகர்கள் வரிசையில்
ரஜினிக்கு முக்கிய இடம் உண்டு.
ரஜினி ரசிகர்களை விட கொஞ்சம் அதிகமாகவே அவரைப் பற்றி எனக்குத்
தெரியும். அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். நான்கு
எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ செய்திருக்கிறேன். அந்த வகையில்
அவரைப் பற்றி என்னால் ஒரு கணிப்புக்கு வரமுடியும்.
எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்கிற ரகமில்லை ரஜினி.
எல்லாரையும் விட நல்ல ரசிகர், நிறைய படிப்பவர். தமிழின்
சிறந்த நூல்களைப் படித்திருக்கிறார் ரஜினி. ஆன்மீகம் தொடங்கி
அரசியல் வரை எல்லாவற்றையுமே விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
அவர் பொழுதுபோக்குப் படங்களை மட்டுமே தருகிறார் என சிலர்
குறைபட்டுக் கொள்ளலாம். பொழுதுபோக்குப் படங்கள் தருவதில்தான்
நிஜமான சேலன்ஞ் இருக்கிறது. இன்றைக்கும் எம்ஜிஆர் படங்களையும்
பாடல்களையும் ரசிக்கிறோம் என்றால் என்ன காரணம்? அந்தப்
படங்களை சிறந்த பொழுதுபோக்குப் படங்களாகத் தர அவர்
எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவரது குழுவினரை அவரது
நினைப்புக்கேற்ப வேலை வாங்கும் திறன்.
ரஜினியும் அப்படித்தான். தன் படம் மிகச் சிறந்த பொழுது
போக்குப் படமாக அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும்
விதத்தில் வர வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர்.
அதற்கான வேலையை ரொம்ப அழகாக வாங்கிவிடுவார்.
அவரது அரசியல் பிரவேசம் பற்றி அடிக்கடி பேசப்படுவது ரெகுலரான
விஷயமாகிவிட்டது. ரஜினியே தெளிவாக சொல்லவிட்டார். அதற்கு
மற்றொருவர் விளக்கத்தை ஏன் எதிர்பார்க்கிறீர்கள். அவரே
சொல்லும்வரை பொறுமையாக இருங்கள்.
சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் உண்மையில் அந்தப் பட்டத்தை மக்களாகப் பார்த்துக்
கொடுத்தது ரஜினிக்கு மட்டும்தான். அவருக்குப் பிறகு
இன்னொருவருக்கு அந்தப் பட்டத்தை மக்கள் தருவார்களா என்பதும்
சந்தேகம்தான்!
-சங்கநாதன்
|