என்டிஆர் (NTR) நூற்றாண்டு விழாவில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த்!
(Tuesday, 2nd May 2023)
புகழ்பெற்ற நடிகர் என்.டி.ராமா ராவின் 100-வது பிறந்தநாள் வரும் மே மாதம் 28-ம் தேதி வர உள்ளது. இதையொட்டி, அவரது நூற்றாண்டு விழாவை ஏப்ரல் 28-ம் தேதி முதல் உலகம் முழுவதும் 100 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இதன் தொடக்க விழா நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்தும், முக்கிய விருந்தினராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான பால கிருஷ்ணா உட்பட என்.டி.ஆரின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், திரை, அரசியல், தொழில்துறை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் விஜயவாடா கன்னாவரம் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவரை நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் விழா குழு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பாலகிருஷ்ணாவும் ரஜினிகாந்தும் ஒரே காரில் நட்சத்திர விடுதிக்கு சென்றனர். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர், ரஜினிகாந்த் மாலை உண்டவல்லி பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் அழைப்பின் பேரில் தேநீர் விருந்துக்கு சென்றார். நடிகர் பாலகிருஷ்ணாவும், என்.டி.ஆரின் குடும்ப உறுப்பினர்களும் அந்த விருந்தில் பங்கேற்றனர்.
ரஜினிகாந்தை சந்திரபாபு நாயுடு மிகுந்த உற்சாகத்துடன் பூச்செண்டு கொடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தேநீர் விருந்துக்கு பின்னர், அங்கிருந்து அனைவரும் விழா அரங்கிற்கு சென்றனர். என்.டி.ஆர் குறித்த 2 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
என்.டி.ஆரின் தாக்கம் என் மீது நிறைய உள்ளது. என் முதல் சினிமா பெயர் பைரவி. பாதாள பைரவி சினிமாவில் என்.டி.ஆர். நினைவுக்கு வந்து ஹீரோ கதாபாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டேன்.1977ல் என்.டி.ஆருடன் டைகர் படத்தில் நடித்தேன். என்.டி.ஆர். துரியோதனன் கதாபாத்திரத்தை பார்த்து அதிசயித்து விட்டேன். அவரைப் போலவே நடித்து பார்ப்பேன். சக்தி வாய்ந்த பிரதமரான இந்திரா காந்தியை எதிர்த்தவர் என்.டி. ராமராவ். அவர் ஒரு யுக புருஷன்.
என்.டி.ராமராவினால் நான் இன்ஸ்பிரேஷன் பெற்றேன். அவரது பக்தி படங்கள் பலவற்றைப் பார்த்தேன். குருச்சேத்திரா நாடகத்தில் துரியோதனாக என்.டி.ஆர் மாதிரியே காப்பி அடித்து நடித்தேன். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். நண்பர்கள் நீயும் சினிமா நடிகன் ஆகிவிடு. தெலுங்கில் ராஜினாலா, முக்காமலா மாதிரி பெரிய வில்லனாக வருவாய் என்று கூறினார்கள். அதுதான் நடிகனாக வேண்டும் என்னும் ஆர்வத்தை எனக்குள் உருவாக்கியது.
சினிமாவுக்கு வந்த புதிதில் நான் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன். ஏனென்றால் பத்து பதினைந்து நாட்களில் படத்தில் நடித்து முடித்து விடலாம். பணமும் கிடைத்துவிடும். ஹீரோ என்றால் அதிகமாக பொறுப்பு வரும் என்பதால் எனக்கு அதில் இஷ்டமில்லை. பைரவி பட இயக்குனர் எனக்கு ஹீரோ வேடம் கொடுப்பதாக கதை சொன்னபோது எனக்கு விருப்பமில்லை. ஆனால் படத்தின் பெயர் பைரவி என்று சொன்னவுடனே ஏற்றுக்கொண்டேன்.
பாலகிருஷ்ணா கண்பார்வையாலேயே எதிரியை கொன்று விடுவார். அவர் தூக்கி எறிந்தால் ஜீப் கூட 30 அடி தூரத்தில் எகிறி விழும். சல்மான் கான், ஷாருக்கான், ரஜினிகாந்த் அதுபோன்ற சண்டைக் காட்சிகளை செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை பாலகிருஷ்ணா செய்தால்தான் ஒத்துக்கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் பாலகிருஷ்ணாவை பாலகிருஷ்ணாவாக பார்க்கவில்லை. அவருக்குள் என்.டி.ஆர்ஐ பார்க்கிறார்கள். அதனால் தான் அது போன்ற காட்சிகளை அவர் செய்தால் மட்டும் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
சிவாஜி, ராஜ்குமார், என்டி ராமராவ் போன்ற பெரும் நடிகர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்.