முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பட துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அப்போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு உள்ளிட்டோரும் சேர்ந்து கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த கருத்து தெரிவிக்கும் புத்தகத்தில் எழுதிய ரஜினிகாந்த், “அருமையான சேகரிப்பு, என்ன ஒரு நினைவுகள்” என்று எழுதினார்.
புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சி மிக அற்புதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரின் வாழ்க்கைப் பயணம், அரசியல் பயணம் இரண்டுமே ஒன்றுதான் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் 70 ஆண்டு வாழ்க்கை வரலாறு பயணத்தை இந்த கண்காட்சியின் மூலம் பார்க்க முடிந்ததாகவும், கடுமையான வாழ்க்கையை அவர் அனுபவித்திருப்பது இதன்மூலம் தெரியவருகிறது எனவும் பெருமைபட கூறினார்.
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் தனது கருத்தை எழுத்து மூலம் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்தார்.
|