கெட்டப் பழக்கங்களில் இருந்து என்னை அன்பால் மாற்றியவர் மனைவி லதா : ஒய்.ஜி மகேந்திரனின் விழாவில்
(Wednesday, 1st February 2023)
சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில், ஒய்.ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தின் 50வது அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரனின் புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிவைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் ஒரே ஒரு மக்கள் திலகம் தான் இருக்க முடியும். ஒரே ஒரு நடிகர் திலகம் தான் இருக்க முடியும். ஒரே ஒரு மெல்லிசை மன்னர்தான் இருக்க முடியும், ஒரே ஒரு கவி கண்ணதாசன் தான் இருக்க முடியும் அது போல ரஜினிதான் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு பட்டம் ஒன்று ரஜினிக்கு உள்ளது. அதை நான் தான் அளித்தேன்.. இவர் ஏன் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவரது படங்கள் ஓடினதால் மட்டும் அல்ல, அவருக்குள்ளே ஒரு அற்புதமான மனிதர் இருப்பதால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு ரஜினியை நான் நேரில் கூட போய் அழைக்கவில்லை. நேரில் வந்து அழைக்கிறேன் என்று கூறியபோது அவர் அதனை வேண்டாம் என்று கூறிவிட்டார். என்ன நமக்குள்ள எதுக்கு ஃபார்மலிட்டி நான் வந்துடுவேன் என்று ரஜினி கூறியதாக தெரிவித்தார்.
ரஜினிகாந்த் பேசியதாவது
இந்த விழாவில் கலந்துகொண்டு சாருகேசி நாடகத்தைப் பார்த்தார் ரஜினிகாந்த். பிறகு அவர் பேசியதாவது:-
ஒய்.ஜி. மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவர் தான் அப்போது என் மனைவியை அறிமுகம் செய்து எங்கள் திருமணத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தார். எனக்கு 73 வயது நடந்தாலும் நான் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம், என் மனைவி தான். நடத்துநராக இருந்தபோது கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பலதரப்பட்ட கெட்ட பழக்கங்களை வைத்துக்கொண்டிருந்தேன்.
நடத்துநராக இருந்தபோது இருவேளை அசைவ உணவு வேண்டும் என்பேன். தினமும் மது அருந்துவேன். சிகரெட் எத்தனை பாக்கெட் என்று தெரியாது. நடத்துநராக இருந்தபோதே இப்படி என்றால் பணம், பேர், புகழ் வந்தபோது எப்படி இருந்திருப்பேன் என்று எண்ணிப் பாருங்கள். காலையிலேயே பாயா ஆப்பம், சிக்கன் 65. சைவ உணவு உண்பவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். இதை எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்று எண்ணத் தோன்றும்.
மது, சிகரெட், அசைவ உணவு இந்த மூன்றும் பயங்கரமான கூட்டணி. இந்த மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருடங்கள் கடைப்பிடித்தவர்கள் யாரும் எனக்குத் தெரிந்து 60 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தது கிடையாது. அதற்குள்ளேயே போய்விட்டார்கள். 60 வயதுக்கு மேல் வாழ்கிறவர்கள், படுக்கையில் கிடந்து தான் வாழ்கிறார்கள். நடமாட முடியாது. இதற்கு நிறைய பேரை உதாரணம் சொல்லலாம். அந்த மாதிரி இருந்த என்னை அன்பாலேயே மாற்றியவர் லதா.
இதுபோன்ற பழக்கங்களை எப்படிச் சொன்னாலும் விடமுடியாது. அதை அன்பால் மாற்றினார். சரியான மருத்துவர்களை அறிமுகப்படுத்தினார். ஓர் ஒழுங்கைக் கொண்டு வந்து என்னை மாற்றியது லதா அவர்கள். என் படங்களைப் பார்த்தாலே தெரியும், திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தேன், திருமணத்துக்குப் பிறகு எப்படி இருந்தேன் என்று. அதற்காகவும் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.
நினைவு பரிசுகளை வழங்கினார்
முன்னதாக, பல ஆண்டுகளாக சாருகேசி நாடகத்தில் நடித்து வரும் கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நினைவு பரிசுகளை வழங்கினார். அப்போது அருணாசலம் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த சுப்பினிக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ரஜினியையே அருணாசலம் படத்தில் மிரட்டியவர் இவர் என்றும் ஒய்.ஜி கூறினார். ரஜினிகாந்தின் மனைவி லதாவும், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.