கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியான புதுப் படங்கள் குறைவான வசூல் செய்துள்ள நிலையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாபா வசூலில் சூடு பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் படங்கள் இந்த மாதம் வெளியாகி வருகின்றன.
கடந்த வெள்ளியன்று வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம், விஜயானந்த், குருமூர்த்தி, ஈவில், எஸ்டேட், DR 56 உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதேபோன்று ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படம் மீண்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் பாபா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதே நேரம் வெள்ளியன்று மாண்டஸ் புயல் உருவானதால் சினிமா ரசிகர்கள் வரத்து தியேட்டர் பக்கம் குறைவாகவே காணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக புயலின் தாக்கம் இருந்த காரணத்தால், பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வருவதை தவிர்த்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்களில் மாண்டஸ் புயல் பாதிப்பு திரைப்படங்களையும் கடுமையாக தாக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தபோதிலும் தியேட்டர்களில் சினிமா ரசிகர்களின் வரத்து மிகக் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. போதாக்குறைக்கு குளிரும் வெளுத்து வாங்குவதால் பொது மக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான புதுப்பட்ங்களை விட ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் பாபா படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாபா திரைப்படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு புதிய கிளைமேக்ஸுடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. பழைய பாபா படத்தை விட புதிய வெர்ஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. புதிய கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸான பாபா உலகம் முழுவதும் முதல் நாள் மட்டும் ரூ.80 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதகாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாள் என்பதால் படத்திற்கு ரசிகர்களின் வரத்து அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படத்தில் வசூல் உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
|