ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் (மார்ச் 31) வெளியான திரைப்படம் ‘விடுதலை’. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.
படமும் பல தரப்பினரிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வெற்றிமாறனையும், 'விடுதலை' படக்குழுவினரையும் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தலைவர் ரஜினிகாந்த் ‘விடுதலை' படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனையடுத்து ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி ட்விட்டரிலும் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம் சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
|