முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கடைசிச் சில நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த போது சில மூடர்கள், அவர் குறித்து அருவெறுக்கத்தகக்க பதிவுகளைச் சமூகத்தளங்களில் பதிவிட்டதைப் பார்த்தோம்.
ஒருவரின் உடல் குறையையோ / ஊனத்தையோ / உடல் நிலையையோ கிண்டலடித்துச் சிலாகிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சைக்கோத்தனமான, குரூரமான செயல் என்பதால் பல அதிமுக வினர் கூட அரசியல் பகையை மறந்து கலைஞர் அவர்களின் உடல் நிலையைக் கேலி செய்வது தவறு என்று பதிவிட்டனர்.
சமீபத்திய குமுதம் பத்திரிக்கையின் ஃபேஸ்புக் பக்கத்தில், தலைவர் அவர்கள் உடல் நிலை குன்றி இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், "பேட்ட" படத்தில் அவர் துடிப்புடன் வசீகரமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு Original India vs Digital India என்று தலைப்பு வைத்து இருந்தனர்.
அதாவது உண்மையான இந்தியாவிற்கு மேக்கப் போட்டு அழகாக்கி டிஜிட்டல் இந்தியா என்று ஒப்பேற்றுகிறார்கள் என்று விமர்சனம் செய்வதற்கு இந்த அருவருக்கத்தக்க ஒப்பீட்டை செய்துள்ளனர்.
பலர் இதைப் பார்த்து விட்டு நான் மேல கூறியதை போல, ‘இது ஒரு சைக்கோத்தனமான பதிவு' என்றும், 'அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து எள்ளி நகையாடும் குரூர புத்தி' என்றும் என் காது படவே திட்டி தீர்த்தனர்.
சில மூடர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான்.
தலைவரின் சினிமா மாயையைக் கண்டு நாங்கள் ரசிகன் ஆனோம், அவர் சினிமாவில் உதவி செய்வது பார்த்து, அவர் அரசியலில் நல்லது செய்வார் என்று நம்பி ஆதரவு கொடுக்கிறோம் என்று நீங்கள் நம்பிக்கொண்டு இருந்தால், நீங்கள் தான் தமிழகத்தின் சிறந்த முட்டாள்.
ஒரு சின்ன லாஜிக் கூடவா உங்களுக்கு யோசிக்கத் தெரியவில்லை !!!
தலைவர் அவர்கள் மகா உத்தமனாக ஊருக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனாக நடித்த லிங்கா படம் தோல்வி, ரௌடியாக நடித்த கபாலி வியாபாரம் 500 கோடி.
இது ஏதோ ரசிகர்கள் கொடுத்த தீர்ப்பு அல்ல. மக்கள் கொடுத்தது. குழந்தை தண்மையுள்ள மாணிக்கத்தை விடக் கொடூர மனம் கொண்ட சிட்டியை தான் மக்கள் விரும்புவர்.
தலைவரை ரசிக்கப் பல காரணங்கள் உள்ளது. ஆனால் அதெல்லாம் அவர் கர்நாடகாவில் தொழிற்சாலை வைத்து இருக்கிறார் என்ற வாட்ஸாப் வதந்தியை நம்புகிறவர்களுக்குக் கண்டிப்பாகப் புரியாது.
எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தமிழகத்தின் அடையாளமாக உள்ள தலைவரை அவரது உடல் நிலையை வைத்து கிண்டல் செய்தது அடக்க முடியாத கோவத்தைத் தான் வரவழைக்கிறது.
"குமுதம்" நிர்வாகத்தைத் திட்டி தீர்க்கவேண்டும் என்று தோன்றுகிறது ஆனால், நான் அதை ஏதும் செய்யப் போவதில்லை.
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடை ஆபாசமாக உள்ளது என்று கவர் ஸ்டோரி எழுத, அவர்களுக்கே தெரியாமல் ஆபாசமாகப் போட்டோ எடுத்து அதை அட்டை படத்தில் போட்ட போது ஊரே கண்டனம் தெரிவித்ததைப் பற்றியோ,
நடிகை தமன்னா கொடுக்காத பேட்டியை, உங்கள் இஷ்டத்துக்குப் பதிவிட்டு, பின்பு அவரே ட்விட்டரில் மறுப்புத் தெரிவித்த சம்பவத்தைப் பற்றியோ,
ஒரு நடிகையின் கதை என்ற ஒரு தலைப்பில் நீங்கள் எழுதிவிட்டு, எதிர்ப்பு வந்த பின்பு அதை வாபஸ் பெற்றது பற்றியோ,
சூப்பர் ஸ்டார் உச்சத்தில் இருக்கும் போதே அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கருத்து கணிப்பு எடுத்து, அதில் நடந்த தில்லு முல்லு பற்றிப் பல கவர் ஸ்டோரிகள் வந்தும் அதைப் பற்றி வாயே திறக்காத உங்கள் நேர்மை பற்றியோ நான் பேச போவதில்லை.
காரணம் உங்களுக்குப் பத்திரிக்கை சுதந்திரம் உண்டு என்பதற்காக அல்ல...
விற்பனை குறைவாகும் போது தலைவரின் படத்தை அட்டை படமாகப் போட்டு வியாபாரத்தைப் பெருக்கி விட்டு, பின்பு மனசாட்சியே இல்லாமல் அவர் உடல் நிலையைக் கிண்டல் செய்த போதே நீங்க தலைவர் ரசிகர்களின் எதிர்ப்பிற்குத் தகுதியை இழந்து விட்டீர்கள்.
சிங்கத்திடம் போட்டி போட்டு பழகிய தலைவர் ரசிகர்களுக்குச் செத்த பாம்பை அடிக்கும் சுபாவம் இல்லை.
கவலைப்படாதீர்கள், சில கசப்பான முன்னுதாரணத்தைப் போலப் பத்திரிகை அலுவலகத்தை எரிப்பவர்கள் நாங்கள் அல்ல.
உங்கள் பத்திரிகை சுதந்திரத்தை!! நாங்கள் மதிப்போம். அதைத் தான் தலைவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்து உள்ளார்.
மேலே சொன்ன எந்தக் காரணத்திற்காகவும் உங்களைத் திட்ட விரும்பாத நான், ஒரு விஷயத்திற்கு நன்றி கூற விரும்புகிறேன்.
தலைவரின் ரசிகர்கள் இன்று வரை பல கட்சிகளில் உள்ளனர். கேவலம் அரசியலுக்காக அவரை எதிர்க்க தொடங்கியவர்கள் கூட நீங்கள் வெளியிட்ட அந்தப் போட்டோவைக் கண்டு ஆத்திரம் அடைந்தனர்.
அவர்களுக்குள் மறையவிருந்த அந்தத் தலைவர் ரசிகனை உயிர்ப்பிக்கச் செய்ததற்கு நன்றி.
அதைப் பிச்சையாகப் பார்ப்பதும், வியாபாரமாகப் பார்ப்பதும் உங்களுடைய தன்மானம் சார்ந்த விஷயம் என்பதால் நான் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை.
நான் ஆன்மீகவாதி தான், ஆனால் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் அளவிற்குப் பக்குவப்படவில்லை என்று தலைவர் ஒரு முறை கூறினார்.
இது மிரட்டல் இல்லை. நல்லவர்களைப் பழித்தால் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை !!! ஆண்டவன் இருக்கிறார், அவர் பார்த்துக்கொள்வார் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|