லிங்கா படத்தால் நஷ்டம் என்றும், அதற்கு நஷ்ட ஈடு வேண்டும், ரஜினி தலையிட வேண்டும் என்றும் கோரி நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது, கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினர் விநியோகஸ்தர்கள்.
லிங்கா நஷ்ட ஈடு கோரியும், லிங்கா தொடர்பான உண்மைகளைச் சொல்லவும் இந்த பிரஸ் மீட் என்று நேற்று அறிவித்திருந்தனர். இதில் லிங்காவின் அனைத்து விநியோகஸ்தர்கள், வெளியிட்ட தியேட்டர்காரர்கள் பங்கேற்பார்கள் என்று கூறியிருந்தனர்.
ஆனால் வழக்கம் போல, லிங்கா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து அந்தப் படத்துக்கும் ரஜினிக்கும் எதிராகப் பேசியவர்கள் மட்டுமே பங்கேற்றனர். தியேட்டர்காரர்கள் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, அவர்கள் வரமாட்டார்கள்.. நாங்கள்தான் பேசுவோம் என்றனர்.
உங்கள் போராட்டம் நஷ்ட ஈடு கேட்டு நடத்தப்படும் போராட்டமாகத் தெரியவில்லையே... ரஜினியின் இமேஜை அவமதிக்கும் போராட்டமாகத்தானே தெரிகிறது.. ஏன் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்கள் சங்கங்கள் உங்களுக்கு உதவ முன்வரவில்லை? என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் மழுப்பினர்.
படம் வெளியான முதல் வாரத்திலிருந்து இப்படி பிரச்சாரம் செய்ததன் நோக்கம் என்ன? உண்மையான விநியோகஸ்தர்கள் இப்படிச் செய்வார்களா? என்று இன்னொரு நிருபர் கேட்டார். அதற்கும் பதில் இல்லை.
திரும்பத் திரும்ப, நாங்கள் சொல்வதைக் கேட்டு எழுதுங்கள். அதற்காகத்தான் உங்களை அழைத்தோம் என்றனர். நீங்கள் சொல்வதை மட்டும் எழுத நாங்கள் வரவில்லை. கேள்விக்கு சரியான பதில் சொல்ல வேண்டும் என்றனர் பத்திரிகையாளர்கள்.
லிங்கா பிரச்சினையில் அரசியல்வாதிகள் எதற்காக வருகிறார்கள்...? நீங்கள் முறையாக வேந்தர் மூவீசைத்தானே அணுகியிருக்க வேண்டும்... எடுத்தவுடன் ரஜினியை இழுப்பதில் என்ன நியாயம்? என்றபோது, மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தனர்.
லிங்காவை மொத்தமே 40 லட்சம் பேர்தான் பார்த்திருப்பதாக ஒரு அறிக்கை தந்தனர். சென்னையில் மட்டுமே 40 லட்சம் பேர் பார்த்த படமாச்சே... தமிழகத்தின் பிற பகுதிகளில் பார்த்தவர்களையும் சேர்த்தால் கோடியைத் தாண்டுமே என்றபோது, சென்னை நகரில் பார்த்தவர்களை இதில் சேர்க்கவில்லை என்றனர்.
தமிழக வசூலில் சென்னை மட்டும் சேராதா.. சென்னையில் வசூலானது என்ன கணக்கு?
எந்த அடிப்படையில் வசூல் தொகை கணக்கிடப்பட்டுள்ளது? முதல் வாரம் முழுவதும் சராசரியாக தியேட்டர்களில் ரூ 250 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களும் சில அரங்குகளில் ரூ 300 வரை விலை வைத்து விற்றனர். ஆனால் நீங்கள் எந்த அடிப்படையில் கணக்கு காட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த விவரங்களை மெயிலில் அனுப்புகிறோம் என்றனர்.
செய்தியாளர் சந்திப்பில் ஒரு கட்டத்தில், கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயரையும் ஊடகத்தின் பெயரையும் சொல்லிவிட்டுத்தான் கேள்வி கேட்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது, விநியோகஸ்தர்களுக்கும் செய்தியாளர்கள் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
பின்னர், தங்களின் மெகா பிச்சைப் போராட்ட அறிவிப்போடு பிரஸ் மீட்டை முடித்தனர்.
http://tamil.filmibeat.com/news/lingaa-distributors-have-no-answers-media-men-questions-033220.html
Video Clips of Distributor Meeting
|