வி.காயத்ரி, திருபுவனம்.
ரஜினியிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம் என்றால்… என்ன கேள்வி கேட்பீர்கள்?
கடந்த ஆண்டு கமல் சாருடைய பிறந்த நாள் விழாவில் ரஜினி சாரை சந்தித்தேன். ‘உங்கள் சஷ்டியப்தபூர்த்திக்கு அடியேன் நான் வந்திருந்தேன். என்னுடைய மணிவிழாவுக்கு தாங்கள் ஏன் வரவில்லை?’ என்ற கேள்வியைக் கண்களாலேயே கேட்டேன்.
என்னுடைய கண் குறிப்பறிந்த ரஜினி, அன்பொழுக என் கைகளைப் பற்றிக் கொண்டு… ‘மோகன்... என் மேல ஏதாச்சும் கோவமா? உங்கள் மணி விழாவன்று மும்பையில் அமிதாப் பச்சன் ஒரு விழாவுக்குக் கூப்பிட்டிருந்தார். அதான் போயிட்டேன்’ என்ற சமாதான காரணத்தைச் சொன்னார். அத்தனை கும்பலுக்கு இடையே என்னைக் கண்டுபிடித்து… அவர் ‘வராத காரணம்’ சொல்ல வேண்டிய அவசியம் அவருக்குத் துளிக்கூட இல்லை. அப்படி அவர் சொன்னதுதான் எனக்கு மிகப் பெரிய சூப்பர் ஆன்மிகமாகப்பட்டது.
இரண்டு வருஷங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் சற்றே சரியில்லை என்று கேள்விப் பட்டபோது, நான் வழக்கமாகச் செல்லும் திருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோயிலில் ‘ரஜினி சார் முன்போல் உடல்நலத்தோடு சூப்பர் ஸ்டாராக இருக்க…’ வழக்கம்போல் எனது வேண்டுதல் வெண்பாவில்… கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பன் பார்த்தி என் தோளைத் தட்டி ‘சார்... கூப்பிடுறார்’என்றான். ‘யாரது..?’என்று கண்களைத் திறந்து பார்த்தபோது, அங்கு நான் ஆரோக்கியமான ரஜினியைப் பார்த்தேன்.
என் கையைப் பற்றி தரதரவென்று சந்நிதிக்குப் பின்புறம் இழுத்துச் சென்ற அவர் ‘செளக்கியமா… இருக்கீங்களா’ என்று என் உடல்நலம் விசாரித்தார். அந்த இடத்தில் கும்பல் கூட ஆரம்பித்ததால் என்னிடமிருந்து விடைபெற்று ‘சூப்பர் ஸ்டார்’ தனது ஸ்டைல் வேகத்தில் நடந்துச் சென்று காரில் ஏறிக்கொண்டார். ஸ்ரீ ராகவேந்திரர் பிராத்தனைக்கு கைமேல் பலன் கிட்டியது!
ரஜினிக்கான வேண்டுதல் வெண்பா:
‘புஜம்நீளப் பாம்பில் படுத்துறங்கும் மாலே
நிஜம்நீ நினைத்தால் நடக்கும் - ரஜினிக்(கு)
உடல்நலம் சேர்ப்பாய் படவுலகைக் காப்பாய்
கடல்நீல வண்ணா கனிந்து’
Source : http://tamil.thehindu.com
|