 மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினி 'டுவிட்டரில்' இரங்கல் செய்தி வெளியிட்டார். அதனை தன் மகள் சவுந்தர்யா துவங்கியுள்ள, 'ஹூட்' செயலியில் பதிவேற்றம் செய்துள்ளதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 28ல் மாரடைப்பால் உயிர் இழந்தார். அந்த நேரத்தில் நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், அவருக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாமதமாக தெரிந்தாலும், தனக்கு போன் செய்து வேதனையை வெளிப்படுத்தியதாக புனித் அண்ணணும், நடிகருமான சிவராஜ்குமார் தெரிவித்திருந்தார்.புனித் இறந்த 13வது நாளான நவம்பர் 10ல் நடிகர் ரஜினி, டுவிட்டர் சமூகவலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: நான் மருத்துவமனையில் இருந்த போது புனித் அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்கு பின் தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன்.என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை, அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார்.
அவர் இழப்பை, கன்னட சினிமா துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு குறிப்பிட்டுஇருந்தார்.
|