கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு கிராமம் சார்ந்து வரும் தலைவர் படம் அண்ணாத்தே. பல வருடங்களாக வழக்கமான தலைவர் படங்களிலிருந்து விலகி இருந்ததற்கு இதில் அனைத்தையும் திரும்பக் கொண்டு வந்துள்ளார்கள்.
அண்ணாத்தே
கதை என்று பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை. வழக்கமான ஒரு பொழுதுப் போக்குப் படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளார்கள்.
தங்கச்சி சென்டிமென்ட்டை முதன்மையாக வைத்து எடுத்துள்ளார்கள்.
ரஜினி
ரொம்ப வருடங்களுக்குப் பிறகு கிராமத்துக் கதையில் ரஜினியைப் பார்ப்பதே உற்சாகமான அனுபவம். கூடுதல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக அசத்தியுள்ளார்.
சென்டிமெண்ட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் ரஜினிக்கு எப்போதுமே கூடுதல் பலமளிப்பவை.
பல மாஸ் காட்சிகள் உள்ளன, குறிப்பாக இடைவேளை முதல்.
கீர்த்தி சுரேஷ் நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஒரே சேர காட்டும் காட்சியில் ரஜினி மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
நட்சத்திர பட்டாளம்
ஏராளமானோர் உள்ளனர் ஆனால், சிலருக்கு மட்டுமே குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரம். மற்றவர்கள் ரஜினி படம் என்பதால் விருப்பப்பட்டு நடித்து இருக்கலாம்.
குஷ்பூ, மீனா, சதீஷ், சத்யன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் என்று அனைவருமே சில காட்சிகளிலே வருகிறார்கள். சூரி ஓகே.
குஷ்பூ, மீனா காட்சிகள் சில தெலுங்கு படத்தை நினைவு படுத்தினாலும், அடுத்து வரும் காட்சியில் சென்டிமென்ட் வைத்துச் சரி செய்து விட்டார்கள்.
நயன்தாரா சந்தித்த சில நிமிடங்களிலேயே சாரல் பாடல் வந்தது பலருக்கு அதிர்ச்சியாக இருந்து இருக்கும்.
ரஜினி நயன்தாரா இருவரும் ஜோடி என்றாலும், நண்பர்கள் போலத்தான் கொண்டு சென்றுள்ளார்கள்.
பிரகாஷ்ராஜ் குறைந்த நேரமே வந்தாலும் நிறைவாகச் செய்துள்ளார்.
ரஜினிக்குப் பிறகு நடிக்கக் கீர்த்தி சுரேஷுக்கு அதிக வாய்ப்பு. தாய்க்குலங்களின் பேராதரவு கீர்த்தி சுரேஷுக்கு தான்.
வசனங்கள்
படத்தில் வசனங்கள் குறிப்பிடத்தக்கவை. ரொம்ப நீளமாக இல்லாமல் இரு வரிகளில் சுருக்கமாக, மனதில் பதியும் வசனங்கள் ஏராளம் உள்ளன.
சென்டிமென்டுக்கும் பொருந்தியுள்ளது, மாஸ் காட்சிகளுக்கும் பொருந்தியுள்ளது. சிவா இன்னும் எத்தனை வசனம் தான் கைவசம் வைத்துள்ளாரோ!.
இரண்டாம் பாதி முழுக்கவே கொல்கத்தாவில் முடித்துள்ளார்கள். சிறுத்தை படம் போல இதிலும் அங்குள்ளவர்கள் தமிழிலேயே பேசுகிறார்கள்.
இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகள் அதிகம் ஆனால், இடையிடையே கீர்த்திச் சுரேஷ் சென்டிமென்ட் காட்சிகள் வைத்துச் சமன் செய்துள்ளார்கள்.
சண்டைக்காட்சிகள் ரொம்ப மிகைப்படுத்தலாக இல்லாமல், ரசிக்கும்படி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சி வேதாளம் படத்தை நினைவுபடுத்தியது.
வில்லன்கள் அபிமன்யு & ஜெகபதி பாபு நடிப்பு நன்றாக இருந்தது. ஜெகபதி பாபுக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்து இருக்கலாம்.
இரண்டாம் பாதி முழுக்கவே கொல்கத்தா என்று இல்லாமல், கொஞ்சம் தமிழ்நாட்டிலும் கொண்டு வந்து இருக்கலாம் என்று தோன்றியது.
ஒளிப்பதிவு & இசை
படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் மிக முக்கியப்பங்காற்றி உள்ளன.
ராமோஜிராவ் திரைப்பட நகரில் படம் எடுக்கப்பட்டதாகக் கூறினார்கள் ஆனால், அது போல ஒரு பார்வையைக் கொடுக்காமல், வெளிப்புறப்படப்பிடிப்பு போலவே உள்ளது.
அதோட வீட்டு அமைப்பு, திருமண நிகழ்ச்சியில் அதன் அலங்காரம், விளக்குகள், தோரணம், வாழைமரம் என்று அசத்தலாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முற்போக்கு வாதிகள் அதிகமானதால் கடவுளைக் கிண்டல் செய்து திரைப்படங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் செவுள்ள விட்டது போலக் காட்சிகள்.
இதற்குச் சிவாவுக்கும் ரஜினிக்கும் சிறப்பு நன்றி.
பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. வா சாமி, பின்னணி இசை மாஸ் காட்சிகளுக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளது.
வழக்கமான ஒரு பொழுதுபோக்குப் படம் அண்ணாத்தே. இதில் உலகக் கதையை, லாஜிக்கை எல்லாம் தேடிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.
2.45 மணி நேரம் நகைச்சுவை, சென்டிமென்ட், மாஸ் / சண்டை காட்சிகள் என்று பொழுது போக்க உத்தரவாதமான படம், மற்றவர்கள் விலகி இருக்கலாம்.
அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம்.
- கிரி
|