சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவரவிருக்கும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. எஸ்.பி.பி குரலில் வெளிவரும் கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்தான் எஸ்.பி.பி. கடைசி பாடல் என இதன் பாடலாசிரியர் விவேகாவும், டி.இமானும் அவர் மறைந்த சில நாள்களுக்கு பின் பாடல் பதிவின் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று படக்குழு சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. அதேபோல இன்றைய தினம் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி., ரஜினிக்கே உரித்தான கனீர் குரலில் ‘அண்ணாத்த வரேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீச’; ‘உலகினில் அழகு எது சொல்லவா... எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா! உயர்தர வீரம் எது சொல்லவா... சுயதவறுணரும் செயலல்லவா’ என பாடியுள்ளார். வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே என்னவோ பாடலிலேயே ‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’ என்றும் வரி வைத்துவிட்டார்கள்.
முன்னதாக, SPB இன் முதல் நினைவு நாளான செப்டம்பர் 25 அன்று எஸ்.பி.பி குரலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த பாடல் வெளியிடப்படும் என கூறப்பட்டது. எனினும், SPB இன் முதல் நினைவு நாளுக்குப் பிறகு பாடல் வெளியிடப்படும் என்று பின்னர் கூறப்பட்டது.
இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்கு பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலில் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.
|