திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை," என்று கூறியுள்ளார்.
"நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்."
"கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை காலையில் பேசிய ரஜினிகாந்த், உடல் நல பிரச்னைகள் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியதாகவும், கொரோனா கால சூழல்கள் காரணமாக பொதுவெளியில் அனைவரையும் சந்திப்பதை தவிர்த்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் நிர்வாகிகளுடன் பேசிய ரஜினிகாந்த், தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் மன்றம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உடல் நல பிரச்னைகள் காரணமாக அவர் அந்த படிப்பிப்பின் இறுதிக் காட்சிகள் மற்றும் டப்பிங்கில் பங்கேற்க இயலாமல் போனது. தற்போது உடல் நலம் தேறிய அவர் அதில் கவனம் செலுத்துவார் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் அரசியல் தவிர்ப்பு அறிவிப்பை வரவேற்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசியலுக்கு முற்றுப்புள்ளி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு கூறியிருந்த ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ளதாக அறிவித்தார்.
கொரோனா காலகட்டத்தில் அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்று அப்போது அவர் கூறியதால், தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கடந்த ஜனவரி மாதம் சூடுபிடித்தபோது, அந்த களத்தில் தமது மக்கள் மன்றம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
இருந்தபோதும், "ரஜினிகாந்த் கொரோனா கால சூழ்நிலை மற்றும் உடல் நல பிரச்னைகளால், அப்போதுதான் அரசியலுக்கு வரமாட்டார். இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அவர் அரசியலுக்கு வருவார். அதன் அடையாளமாகவே மக்கள் மன்றம் கலைக்கப்படவில்லை," என்று ரஜினியின் அரசியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்தவர்கள் கூறி வந்தனர்.
ஆனால், அந்த கருத்துகளுக்கும் தமது இன்றைய அறிவிப்பு மூலம் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.
"ரஜினியை இயல்பாக இருக்க விடுங்கள்"
ரஜினியின் சமீபத்திய நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறுகையில், "ரஜினி எடுத்த முடிவு நல்லதுதான். தமிழ்நாட்டுக்கு தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். சாதாரண நடத்துநராக இருந்த தமிழ் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் கொடுத்தனர். அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று ரஜினி கூறி வந்தார். அவர் அரசியலுக்கு வந்து செய்ய முடியாத நல்ல பணிகளை வெறும் நற்பணி மூலம் செய்யலாம். இப்படிப்பட்ட ஒருவரை அரசியலில் இழந்து விட்டோமே என்று மக்கள் எண்ணம் அளவுக்கு அவரால் நற்பணி மன்றத்தை பயன்படுத்தி சமூக சேவை செய்ய முடியும்," என்றார்.
"ரஜினி நினைத்தால் பல முனைகளில் இருந்தும் கோடி கோடியாக நன்கொடையாக குவியும். அந்த நிதியைக் கொண்டு தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள் மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளுக்கு உதவுவது போன்ற சமூக பணிகளில் அவர் தமது நற்பணி மன்றம் மூலம் செய்தாலே போதும், அதுவே தமிழக மக்களுக்கு செய்யும் பெருந்தொண்டாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"தமது அறிக்கையின் கடைசி வரிசையில், வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் நாடு, ஜெய்ஹிந்த் என்று கூறி முடித்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை பாரதிய ஜனதா கட்சியினர் தங்களுக்கு சாதகமாக அரசியல் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி மீண்டும் அவரை உசுப்பி விடாமல் ரஜினியை அவரது போக்கில் இயல்பாக இருக்க விட்டாலே போதும்," என்கிறார் குபேந்திரன்.
|