தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் காலை 7 மணி முதலே வரிசையில் நின்று வாக்களித்தனர். வெயில் மற்றும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கணக்கில் கொண்டு உச்ச நட்சத்திரங்கள் முதல் திரையுலகினர் பலரும் காலையில் வாக்களித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் கார்டன் வீடு ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருகிறது. எனவே ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு இன்று காலை 7 மணிக்கே வந்தார். சூப்பர் ஸ்டாரை பார்த்ததும் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டம் முண்டியடித்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
உடனடியாக அங்கு வந்த போலீசார் ரஜினிகாந்தை பாதுகாப்பாக வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருக்க வேண்டியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாகவும், தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டும் அரசியலில் இருந்து விலகுவதாக திட்டவட்டமாக அறிவித்தார். இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த கட்சிக்காவது தன்னுடைய ஆதரவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
இதனிடையே தான் ரஜினிகாந்தின் வாக்கு யாருக்கு என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த சமயத்தில் ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடிக்குள் ரஜினிகாந்த் நுழைந்ததும் பத்திரிகையாளர்கள் அவரை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்தனர். தேர்தல் விதிமுறைகளையும் மீறி டாப் ஆங்கிளில் கேமராவை வைத்து ரஜினி யாருக்கு வாக்களிக்க போகிறார் என்பதை அறிய முற்பட்டனர். பத்திரிகையாளர்களை விலகிச் செல்லும் கூறிய ரஜினிகாந்த், அதுவரை வாக்களிக்காமல் வாக்கு இயந்திரம் அருகிலேயே காத்திருந்தார். உடனடியாக உள்ளே வந்த போலீஸ் மற்றும் ரஜினியின் உதவியாளர் ரியாஸ் ஆகியோர் பத்திரிகையாளர்களை வாக்களிக்கும் இடத்தை விட்டு சற்றே தள்ளியிருக்க செய்த பின்னரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்களித்தார். இதோ அந்த வீடியோ...
|