கட்சி துவங்கப்போவதாக அறிவிக்க இருந்த நிலையில், தன் உடல்நிலை மற்றும் மற்ற காரணங்களைக் கூறி அரசியலுக்கு வரவில்லையென ரஜினி அறிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் முடிவு பற்றிப் பார்ப்போம்.
ரஜினியின் அரசியல் முடிவு
ரஜினியின் விளக்கத்தை அனைவராலும் ஏற்றுக்கொள்வது எளிதல்ல. மற்றவர்கள் உணர வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயமில்லை.
கேலி செய்வார்களே என்று சிலரும், தமிழகத்துக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
சிலர் மக்கள் பணியில் கடுமையாக உழைத்துள்ளார்கள், நேரத்தைச் செலவழித்துள்ளார்கள். அவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்வது கடினமே!
தமிழகத்துக்கு ரஜினி மூலம் மாற்றம் கிடைக்கும், ஊழல் லஞ்சம் ஒழியும், தமிழ்நாடு முன்னேற்றம் அடையும் என்று மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
ரசிகர்கள் மட்டுமல்ல, ஏராளமான பொதுமக்களும் எதிர்பார்த்தார்கள்.
தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக, ஊழல் இல்லாத மாநிலமாக வரவேண்டும் என்பதே என் விருப்பம்.
ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் பலமும், மக்கள் ஆதரவும் இருந்தும் அதை உலகுக்கு வெளிக்காட்ட வாய்ப்புக் கிடைக்காமலே போனது நிகழ மறுத்த அற்புதம் தான்.
தமிழகம்
தற்போதும் மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் முன்னனியில் உள்ள நிலையில், திறமை வாய்ந்த தமிழக மக்களுக்குச் நேர்மையான ஆட்சியாளர் அமைந்தால் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையலாம் என்பதில் சந்தேகமில்லை.
நான் விரும்பும் ரஜினியால் நடக்க வாய்ப்பு இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தது.
நிச்சயம் ரசிக மனநிலையில் அவரின் வெற்றியை எதிர்பார்க்கவில்லை, தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே!
ரஜினியை கடவுள் பிழைக்க வைத்ததற்கு அரசியல் தான் காரணமாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன் ஆனால், வேறு காரணங்கள் உள்ளதோ என்னவோ!
ரஜினியின் சில முடிவுகளைத் தவறு என்று நினைத்து இருந்தாலும், இறுதியில் நான் நினைத்ததே தவறு என்றாகியுள்ளது.
இம்முடிவு எப்படியாகும் என்று காலம் தான் கூற வேண்டும்.
விமர்சனங்களும் எதார்த்தமும்
ரஜினியை வெறுப்பவர்களும், கிண்டலடிப்பவர்களும் ‘இது தான் எனக்கு முன்பே தெரியுமே! அப்பவே சொன்னோமே!‘ என்று எளிதாகக் கூறி விடுவார்கள்.
ரஜினியின் முடிவு அவரை எதிர்ப்பவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பவர்களுக்கு வேதனையையும் அளித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய ஏமாற்றம் என்பதில் சந்தேகமில்லை. எந்த அளவுக்கு என்றால், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது கூடக் கலங்கவில்லை ஆனால், இந்த அறிவிப்பு உலுக்கி விட்டது.
ரஜினி யார் சொத்தையும் அபகரிக்கவில்லை, யாரையும் மோசமாக விமர்சிக்கவில்லை, குடும்பத்தைக் கவனியுங்கள் என்று தான் கூறினார்.
இவை அனைத்தையும் செய்து கொண்டு இருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல், அரசியலுக்கு வரவில்லை என்று கூறியதற்கு விமர்சிப்பது தான் வியப்பளிக்கிறது.
அரசியலுக்கு வந்து கொள்ளை அடிப்பவரை வேடிக்கை பார்த்து, ‘வந்தால் சம்பாதிக்க விட மாட்டேன்‘ என கூறி தனிப்பட்ட காரணத்தால் விலகியவரை விமர்சிக்கிறார்கள்.
ரஜினியை விமர்சிக்கும் ஒருவரை அழைத்து ‘ரஜினியால் உனக்கு என்ன கெடுதல் நடந்தது?‘ என்றால் நேரடி பதில் இருக்காது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவார்.
ரஜினி முடிவைச் சிலருக்கு ஒரு நாளில் கடந்து செல்ல முடியும், சிலருக்கு வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம், சிலரால் எப்போதுமே முடியாது.
இதுவும் கடந்து போகும்
ரஜினியின் முடிவு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தாலும், நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளது.
ரஜினியின் முடிவால், தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு மட்டுமே பொய்த்துப் போனது. தனிப்பட்ட இழப்பு என்று எனக்கு இல்லை.
உண்மையில் உலகம் முழுக்க நண்பர்கள், ரஜினியிடம் இருந்து மிகச்சிறந்த அனுபவங்கள் என்று பெற்றதே அதிகம்.
ரஜினி மீது கோபம் இல்லை, ஏமாற்றமுள்ளது ஆனால், எனக்குப் புரியாத ஒன்று இவ்வளவு பேருடைய நம்பிக்கை எப்படிப் பொய்த்தது என்பது மட்டுமே!
ஆனால், ‘நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!‘ மற்றும் நேர்மறை எண்ணங்களை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
‘இதுவும் கடந்து போகும்‘ என்பதின் பின்னே பலரின் ஓராயிரம் கனவுகளும், வேதனைகளும் அடங்கியுள்ளது.
தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக வரப் பிரார்த்திப்போம்.
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
- கிரி
https://www.giriblog.com/rajini-quits-politics/
|