அரசியலுக்கு வரும் அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை காலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். பிறகு தனது போயஸ் கார்டன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"சட்டமன்ற தேர்தல் வரும்போது, அதற்கு முன்னால் 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடும் முடிவை அறிவிப்பதாக முன்பே கூறியிருந்தேன். அதன் பிறகு லீலா பேலஸ் ஹோட்டல் கூட்டத்தில் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வரட்டும். அந்த எழுச்சி உண்டாகட்டும். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறேன் என கூறினேன்."
"ஆனால், கொரோனா வந்து விட்டதால் அப்படி செய்ய முடியவில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தாக்கும். அதனால், மருத்துவர்கள் என்னிடம், நீங்கள் பொதுமக்கள் மத்தியில் சென்று பிரசாரம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது என்று அறிவுறுத்தினார்கள்."
"அதன் பிறகு தமிழக மக்கள், ரசிகர்களின் பிரார்த்தனையால் உடல்நிலை மீண்டு வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சியே. கொடுத்த வாக்கை திரும்பப்பெறும் வழக்கம் எனக்கு இல்லை."
"தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் தேவை என்பது காலத்தின் கட்டாயம். அது வந்தே தீர வேண்டும். மாற்ற வேண்டும், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். நான் என்பது நீங்கள்தான், மக்கள்தான் எல்லாம். நான் வந்த பிறகு வெற்றி அடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. எனவே, இந்த நாட்டு மக்கள் எனக்கு துணையாக நிற்க வேண்டும்."
"எனக்கு அண்ணாத்த பட ஷூட்டிங் இன்னும் 40 சதவீதம் பாக்கி உள்ளது. அதை முடிக்க வேண்டியது எனது கடமை. அதை முடித்துக் கொண்டு கட்சி வேலைகளில் கவனம் செலுத்துவேன். ஏற்கெனவே கட்சி வேலைகளை தொடங்கிவிட்டோம். எனது கட்சி பணிகளின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருக்கிறேன். என்னுடன் பணியாற்ற அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியை நியமித்திருக்கிறேன்."
"இந்த பாதையில் நான் வெற்றி அடைவேன். அதில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும்," என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலகினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ...
|