சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. தீபவாளி வெளியீடு என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. திருவிழா பின்னணியில் கோயில் மணிகள், அரிவாள்கள் நிறைந்து இருக்க, பட்டு வேஷ்டி, சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் ரஜினி. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவும் வெளியானது.
கவரப்பட்ட டயலாக்
அந்த மோஷன் போஸ்டரில் ரஜினி பேசும் டயலாக் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. "நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க.. அரங்கம் முழுவக்க தெறிக்க தெறிக்க.. தொடங்குது ஓங்கார கூத்து என வசனத்துடன் ரஜினி இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது போல் அரிவாளை தேய்த்து கொண்டே செல்வதால் அதன் முனைகள் நெருப்பில் காய்ச்சி எடுத்தது போல் செக்க செவேல் என உள்ளது.
ரஜினியின் குரல்
இந்த மோஷன் போஸ்டரில் ரஜினியின் குரல் ஒலிக்கிறது. தலையில் ஹெல்மெட், காதில் ஹெட் போனுடன் முகத்தில் கடுங்கோபத்தில் புல்லட்டில் பயணிக்கிறார். அவர் பயன்படுத்தும் புல்லட் வண்டியின் நம்பர் குறித்த விளக்கத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதில் WB 03 SS 1212 என இருந்தது. இதில் WB என்றால் World Box Office King என்றும் 03 என்றால் 3 தலைமுறையினரையும் கவர்ந்தவர் என்றும் SS என்றால் சூப்பர் ஸ்டார் என்றும் 1212 ரஜினியின் பிறந்தநாளை குறிப்பதாகவும் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் WB என்றால் மேற்கு வங்கத்தின் குறியீடு என்பதையும் மறந்து ரசிகர்கள் இதை வேர்ல்டு பாக் ஆபிஸ் கிங் என எடுத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி நடித்த படங்களில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தவை என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அது போல் அன்று 1980களில் அப்பாவோ அல்லது அம்மாவோ ரஜினி ரசிகராக இருந்திருப்பர். அவரது மகனோ, மகளோ சூப்பர் ஸ்டாரின் ரசிகராக இருந்திருக்கிறார்கள். இன்று அவர்களுடைய குழந்தைகளும் ரஜினி ரசிகர்களாக உள்ளனர். இதைத்தான் 3 தலைமுறையினரை கவர்ந்த தலைவர் என்கிறார்கள்.
ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். வெளியான 15 நிமிடங்களிலேயே யு-டியூப்பில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது. ஜனரஞ்சகமான குடும்ப படமாகவும், ஆக் ஷன் படமாகவும் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது.
அண்ணாத்தேயின் மோஷன் போஸ்டரை இங்கே பாருங்கள்:
|