 டெல்லி சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் இந்த முறை தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல தமிழ்க் கலைஞர்கள் விருது பெற்றனர். தனுஷ், பார்த்திபன், வெற்றிமாறன் என தமிழ்க் கலைஞர்கள் விருது பெற்றனர்.
இந்த விழாவின் முத்தாய்ப்பாக ரஜினிகாந்த்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது அளித்து கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகின் உயரிய விருது இது. இந்த விருதைப் பெற்ற ரஜினிகாந்த்துக்கு பல்வேறு தலைவர்களும் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
விருது பெற்ற மகிழ்ச்சியை ரஜினியே டிவிட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த்தும் சென்றிருந்தார். பிரதமர் மோடியுடன் சிறிது நேரம் பேசி விட்டுத் திரும்பினார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
அதில், "மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி" என்று தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.




|