இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த திரைக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் நினைவாக இந்த விருது 1969ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியத் திரையுலகில் பெரும் சாதனைகளைப் படைத்த பலருக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்திலிருந்து நடிகர் சிவாஜிகணேசன் இந்த விருதைப் பெற்றார். 2010ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டுக்கான விருது தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று(அக்., 25) டில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தாதா சாகேப் விருதை அவருக்கு வழங்கினார்.
சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பாக பங்காற்றியதற்காக ரஜினியை கவுரவித்து இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மாப்பிள்ளை தனுஷ், பேரக்குழந்தைகள் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
காணொளி வெளியீடு
முன்னதாக ரஜினிக்கு விருது வழங்கும் முன்பாக அவரைப்பற்றிய காணொளி ஒளிபரப்பட்டது. ரஜினி சினிமாவுக்கு என்ட்ரி ஆனது முதல் அவரது பல சாதனைகளை இந்த காணொளியில் வெளியிட்டனர்.
தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம்
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்டு ரஜினிகாந்த் விழாவில் பேசியதாவது:
"அனைவருக்கும் காலை வணக்கம், கவுரமிக்க இந்த விருதைப் பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த தாதா சாஹேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது வழிகாட்டி, எனது குரு கே பாலச்சந்தர் சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அதிக நன்றியுணர்வுடன் அவரை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்குப் போதித்தவர், அவரை நினைத்துப் பார்க்கிறேன். கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய பேருந்து ஓட்டுநர், என் நண்பர் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன். நான் நடத்துநராக இருந்தபோது ராஜ்பகதூர் தான் என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு கொண்டார். திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார்.
எனது படங்களைத் தயாரித்த, இயக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவுகூர்கிறேன். தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த்."
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விருது வழங்கும் விழா
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த விருது அறிவிக்கப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படாமல் இருந்த இந்த விருது வழங்கும் விழா இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அளவில் திரைத்துறையினர் திரளாக பங்கேற்றனர். இந்நிலையில் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் விருதினை பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த் டெல்லி பயணம்
இதையொட்டி நேற்றைய தினம் டெல்லி பயணத்தை மேற்கொண்ட ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இந்த விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் இந்த விருதினை தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் இந்த நேரத்தில் இயக்குநர் கே பாலசந்தர் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் இவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே தெரிவித்திருந்தனர்.
|