அண்ணாத்த படத்தைப் பார்த்த ரஜினி தனக்கு முத்தம் கொடுத்துப் பாராட்டியதாக இயக்குநர் சிவா பேட்டியளித்துள்ளார்.
சன் பிக்சா்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி காந்த், நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோா் நடித்த அண்ணாத்த படம், தீபாவளி அன்று உலகெங்கிலும் வெளியானது.
இந்நிலையில் இயக்குநர் சிவா, சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஜினி சார் மிகவும் ரசித்து, சந்தோஷமாக நடித்த படம், அண்ணாத்த. படப்பிடிப்பின்போதும் அது முடிந்த பிறகும் என்னிடமும் படக்குழுவினரிடமும் நடிகர்களிடமும், நான் சந்தோஷமாக இருக்கேன் எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் அவர் மிகவும் சந்தோஷமாக நடித்தார். அந்த மகிழ்ச்சியைத் திரையில் அப்படியே கொண்டுவந்தார்.
ஜாலியா நடந்து போங்க சார் என ஒரு காட்சியில் சொன்னேன். அவர் துள்ளிக்குதித்து சென்றபடி நடித்தார். மதுரையிலிருந்து நடிக்க நிறைய பேர் வந்திருந்தார்கள். ரஜினியின் உற்சாகத்தைப் பார்த்து படப்பிடிப்புத் தளத்தில் விசில் பறந்தது. அவர் சந்தோஷமாக இருந்ததால் சந்தோஷமாக நடித்தார்.
இடைவேளைக் காட்சி எடுத்தபோது எனக்கும் ஒளிப்பதிவாளருக்கும் புல்லரிப்பு ஏற்பட்டது. அதேபோல கடைசிக்காட்சியில் ரஜினி சார் பேசக்கூடிய வசனத்தை எழுதிவிட்டு யோசித்தேன், இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என. பிறகு, ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கையுடன் இருந்தேன். அந்தக் காட்சியை எழுதும்போதே என் கண் கலங்கியது. ரஜினி சார் வசனத்தைப் பேசி முடித்துவிட்டு தோளில் தட்டிக்கொடுத்து என்னைக் கட்டிப்பிடித்தார். இதை என்னால் மறக்க முடியாது.
எனக்குத் திருப்தி அளித்த விஷயம், படம் முடிந்த பிறகு குடும்பத்தினருடன் வந்து ரஜினி சார் படம் பார்த்தார். படம் பார்த்து வெளியே வந்தார். அங்கே நான் நின்றுகொண்டிருந்தேன். நேராக என்னிடம் வந்து கட்டியணைத்து எனக்கு முத்தம் கொடுத்தார். என் தோளில் கைவைத்து, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சிவா சார். நன்றி சிவா சார் என்றார். வேறென்ன வேண்டும் என்று சிவா கூறியுள்ளார்.
அது மட்டும் அல்ல... சமீபத்தில் ’அண்ணாத்த’ வெளியாகி ஓடிக்கொண்டிருப்பது குறித்து ரஜினி என்ன சொன்னார் என்பதை இயக்குநர் சிறுத்தை சிவா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், “படம் வெளியானபிறகு ரஜினி என்ன சொன்னார்?” என்று கேட்டதற்கு ”அண்ணாத்த ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் என்பதால் அடிக்கடி ரஜினி சாரிடம் பேசுகிறேன். ஒவ்வொரு முறையும் ரஜினி சாரிடம் போனில் பேசும்போது சந்தோஷத்துடன் ”சிவா சார்… படம் பெரிய சக்சஸ்ங்கிறாங்க சிவா சார்…. நாம ஜெயிச்சிட்டோம் சிவா சார்” என்பார். அவர், அப்படி பேசுவதை கேட்பதற்கே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார் சிவா.
|