இன்று அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்!
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் இன்று.
ஒருவர் எத்தனைக் காலம் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதைவிட, மறைந்த பிறகு எத்தனை பேர் இதயங்களில் குடியிருக்கிறார் என்பதை வைத்தே ஒருவரது சிறப்பை பற்றிய முடிவுக்கு வந்துவிடலாம். அந்தவகையில், சிவாஜி கணேசன் அவர்கள், இன்னும் பல கோடி இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவரை போன்ற தொழில் பக்தி மிக்க நடிகரையும், பல் துறை அறிவைப் பெற்ற நடிகரையும் பார்ப்பது அரிது.
சிவாஜி அவர்களை பற்றிய பல அரிய தகவல்கள் வெளியுலகிற்கு கொண்டு போய் சேர்க்கப்படவில்லே என்பதே என் கருத்து.
சிவாஜி அவர்கள் நடித்த திரைக்காவியங்கள் சாகாவரம் பெற்றவை, வினையற்ற செல்வத்தை தரக்கூடியவை என்பதை ‘கர்ணன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த உலகிற்கு உணர்த்தியது.
சிவாஜி அவர்களின் மேலும் பல தரமான படைப்புக்கள் இதே போன்று நவீன தொழில்நுட்பத்தில் வெளியாகி இன்றைய தலைமுறையினரை சென்று சேருமானால், அதை விட சிறப்பு எதுவும் இருக்க முடியாது.
ரஜினி அவர்கள் சிவாஜி அவர்கள் மீது பெரு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். திரையுலகில் ரஜினி அவர்களை ‘டா’ போட்டு அழைத்தது, அவரது குருநாதர் பாலச்சந்தருக்கு பிறகு சிவாஜி அவர்கள் தான். தன்னுடைய ஒரு மகன் போலவே ரஜினியை பாவித்து வந்த சிவாஜி அவர்கள், ரஜினி அவர்கள் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக ‘படையப்பா’ படத்தில் நடிக்க சம்மதித்தார்.
சூப்பர் ஸ்டாரும் திரு.சிவாஜி அவர்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அன்பு உலகமறிந்த ஒன்று.
சிறு வயதில் தாம் கல்வி கற்க இயலாமல் போனதை நினைவு கூறும் வகையில் இன்றைக்கு போக ரோட்டில் இருக்கும் வீட்டை கட்டும்போது சிறு குழந்தைகள் இருவர் படிப்பது போன்ற சிற்பத்தை வீட்டில் நிர்மாணித்தார் சிவாஜி. இன்றைக்கு கூட அன்னை இல்லத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் இதை கவனிக்கலாம்.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது சிவாஜி அவர்களுக்கு அறவே பிடிகாத ஒன்றாகும். ஒரு நடிகனுக்கு கரெக்ட் டயத்துக்கு ஷூட்டிங் வர முடியலேன்னு சொன்னா அவன் நடிக்கிரதையே விட்டுடனும் என்ற கொள்கை உடையவர் சிவாஜி. (ரஜினி நேரம் தவறாமை இவரிடம் கற்றுக்கொண்ட ஒன்றாகும்).
ரஜினியின் இக்கட்டான காலகட்டங்களில் உடனிருந்து பல ஆலோசனைகளை கூறியிருக்கிறார் திரு.சிவாஜி.
தமக்கும் திரு.சிவாஜி அவர்களுக்கும் இடையே இருந்த பந்தத்தை சூப்பர் ஸ்டார் பல தருணங்களில் கூறியிருக்கிறார். குறிப்பாக சிவாஜி சிலை திறப்பு விழாவிலும், சந்திரமுகி 200 வது நாள் விழாவிலும்.
மேற்படி இரு விழாக்களிலும் ரஜினி சிவாஜி அவர்களைப் பற்றி ஆற்றிய உரை, உள்ளத்தை உருக்குவதாகும்.
தமது சொந்த படமான படையப்பாவில் சிவாஜி அவர்களை தனக்கு தந்தையாக நடிக்க வைக்க ரஜினி முடிவு செய்த பிறகு, அவரை நேரில் சென்று சந்தித்து, அவர் காலில் விழுந்து வணங்கி, “நான் படையப்பா. இந்த படையப்பாவுக்கு நீங்க தான் அப்பா…” என்று ஒரே வரியில் கூறி சிவாஜி அவர்களின் கால்ஷீட்டை பெற்றார் ரஜினி. தவிர, “யாரோ யாரோ இன்னிக்கி இண்டஸ்ட்ரியில கோடி ரூபாய் சம்பளம் வாங்குறாங்க…. ஆனா நடிப்புக்கே இலக்கணம் வகுத்த மேதை நீங்க. பிடிங்க சம்பளம் ஒரு கோடி” என்று படையப்பாவில் நடிக்க ஒப்புக்கொண்ட சிவாஜி அவர்களை கௌரவித்தார் ரஜினி அவர்கள். படையப்பா படத்தில் சிவாஜி அவர்கள் பெற்ற அந்த ஊதியம் தான் அவர் தம் திரையுலக வாழ்வில் பெற்ற அதிக பட்ச ஊதியமாகும்.
படையப்பா படத்தின் துவக்க நாள் விளம்பரத்தில் கூட, நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி அவர்களின் ஆசியுடன் இன்று முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்று விளம்பரம் அளிக்கப்பட்டது.
படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த சூழலில் கூட படையப்பாவில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டார் என்றால் அதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் மேல அவர் வைத்திருந்த அன்பு என்றால் மிகையகாகாது. “பிரபு, ராம்குமார் மாதிரி இவனும் என்னோட மகன்தாண்டா” என்று உரிமையோடு அடிக்கடி சொல்வார் செவாலியே.
“ரஜினி ஒரு வெகுளி!” - அமரர் சிவாஜி கூறியது
1999 ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு தினத்தன்று உற்சாகத்தோடு இருந்தது அன்னை இல்லம். சிம்மக்குரலோனிடம் ஆசி பெற எண்ணற்றோர் வந்த வண்ணமிருந்தனர். தன்னிடம் ஆசி பெற வந்த அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவரான பூமிநாதனிடம், சிவாஜி, “ரஜினி ரொம்ப நல்லவன். சினிமா உலகில் அவனை மாதிரி நல்லவனை நான் பார்த்ததில்லை. குழந்தை மாதிரி… மனசுக்குள் எதையும் ஒளிச்சு வெச்சுக்கமாட்டான். ‘தப்பு’ன்னு தோணினா மனசுல பட்டதை டப்புன்னு சொல்லிடுவான். அவன் ஒரு வெகுளிடா!’” என் மனம் திறந்து தாய்மை தெறிக்க பேசியுள்ளார் சிவாஜி.
2001 ஆம் ஆண்டு சிவாஜி அவர்கள் காலமான போது, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார் ரஜினி. ரஜினி அன்றைக்கு யார் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (என் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட நான் கலந்துக்கலை. ஆனால் சிவாஜி சாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கிட்டேன் என்று சந்திரமுகி 200 வது நாள் விழாவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சூப்பர் ஸ்டார்.)
சிவாஜி அவர்கள் காலமான பிறகு, தமது திரையுலக பயணத்தின் இரண்டாம் இன்னிங்க்ஸ் என்று ரஜினி வர்ணித்த சந்திரமுகி படத்தை தயாரிக்கும் வாய்ப்பை சிவாஜி அவர்களின் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு அளித்தார் சூப்பர் ஸ்டார். சந்திரமுகி திரைப்படம் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் வரலாற்றிலும் சரி சூப்பர் ஸ்டாரின் வசூல் வரலாற்றிலும் சரி, நிகழ்த்திய சாதனை உலகமறிந்தது.
அதற்க்கு பிறகு கூட சிவாஜி அவர்களுடனான சூப்பர் ஸ்டாரின் பந்தம் விட்டுவிடவில்லை. அதற்க்கு அடுத்து ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த படத்திற்கும் ‘சிவாஜி’ என்ற பெயரை தேர்வு செய்து மகிழ்ந்தார் சூப்பர் ஸ்டார். சிவாஜி ராவ என்பது தனது இயற்பெயாரக இருந்தாலும், மேற்படி பெயரை தமது படத்திற்கு சூட்ட சிவாஜி குடும்பத்தினரை அணுகி அவர்களது ஒப்புதலையும் சூப்பர் ஸ்டார் பெற தவறவில்லை. “நீங்கள் அந்த படத்தில் நடிப்பது, நாங்கள் செய்த பாக்கியம்” என்று ராம்குமாரும், பிரபுவும் அன்புடன் ஒப்புதல் தந்தனர்.
சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் அசல் படத் துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார் சூப்பர் ஸ்டார்.
இப்படி அடுக்கிகொண்டே போகலாம்….
அன்னாரின் நினைவு நாளான இன்று, நடிப்புக்கு இலக்கணம் வகுத்த அந்த மாமேதைக்கு அஞ்சலி செலுத்துவோம்.
சென்னை கடற்கரை அருகே, கடற்கரை சாலையில், 2006 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் சிவாஜி அவர்களுக்கு சிலை நிறுவப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சூப்பர் ஸ்டார் ஆற்றிய உரையின் வீடியோ.
வாழக சிவாஜி அவர்களின் புகழ்!
- அமர்
|