தமிழக அரசியல் களத்தில் எதிர்ப்பு அரசியலுக்கு எப்போதுமே பஞ்சம் இல்லை.
இவனுக்கெல்லாம் பதில் சொல்வதே அசிங்கம் என நினைத்துப் பெரும்பாலானோர் அமைதியாக இருந்தால், அது என்னவோ தங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகி விட்டதைப் போலச் சிலர் நினைத்துக்கொள்கின்றனர்.
அதனால் தான் தேசத்திற்கு எதிரான பேச்சுகளும், பிரிவினைவாத முழக்கங்களும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் உலா வருகின்றன.
ஆனால் அந்த நரிகளுக்குப் புரியாது, ஒரு நாள் சிங்கம் லேசான கர்ஜனை இட்டாலும் காட்டில் உள்ள அத்தனை மிருகங்களின் சப்த நாடியும் அடங்கிப் போகும் என்று !!!
திமுக மற்றும் திகவின் கடவுள் குறித்த நிலைப்பாடு ஊர் அறிந்ததே.
சமத்துவம் தான் முக்கியம் எனப் பெரியார் கூறியதை விடுத்து, நாத்திகம் மட்டுமே பெரியாரின் கொள்கையாகச் சித்தரிக்கும் திகவிற்கும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனத் திருமூலரின் சொல்லை வழிமொழிந்த அண்ணாவை மறந்து இந்து பண்டிகைகளையும், திருமண முறையையம் பழித்த திமுகவிற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆன்மீக அரசியல் என்று ரஜினி சொன்னவுடனே, எங்கே தங்களது நாற்றம் பிடித்த எதிர்ப்பு அரசியலுக்கு வேட்டு வந்து விடுமோ எனப் பயந்து, ஆன்மிகம் என்றால் இந்து மதம் மட்டுமே என்பது போலப் புருடா விட்டுத் திரிந்தது ஒரு கும்பல்.
ஒரு வேளை இவர்கள் கண்ணுக்கு அன்னைத் தெரசா ஒரு மதப் போதகராகவும், அப்துல் கலாம் ஒரு முஸ்லிமாகவோ தான் தெரிந்திருப்பார்கள் போல. (கலாம் என்றால் கழகம் எனச் சொல்லிய கட்சி ஆயிற்றே !!!)
தமிழகம் எப்போதுமே புரட்சிக்கான மண்.
12 ஆம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் இட்டுச் சென்ற ராமானுஜர் பிறந்த மண். அவர் காட்டிய சமூக நீதியை தான் பெரியாரும் அண்ணாவும் வளர்த்தார்கள். கலைஞரும் அதற்காகத் தான் தன் தொலைக்காட்சியில் ராமானுஜர் தொடருக்கான திரைக்கதை எழுதினார்.
ஆனால் இப்போது இருப்பவர்கள் சமத்துவம் பேசுகிறார்களா? தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கும் வரை தான் அவர்கள் வாக்கு வங்கி, பிற மதத்தினவர்களுக்குப் பெரும்பான்மை மதத்தின் மீது ஒரு பயம் இருந்தால் மட்டுமே அவர்களும் வாக்கு வங்கி என்பது போலச் செயல்படுகின்றன இந்தக் கட்சிகள்.
இங்கே தான் ஆன்மீக அரசியல் என்று கூறி அனைவருக்கும் பொதுவான அரசியலை, வெறுப்பில்லாத நல் அரசியலை ஒருவர் கொண்டு வருகிறார். உடனே அதையும் தங்கள் வாக்கு வங்கியை நோக்கித் திருப்பி விடப் பார்த்தனர்.
ஆனால் காலம் வேறு வழிகளை வைத்து இருந்தது. வெறும் ஓட்டு பிச்சைக்காக ஒரு குற்றமும் புரியாத மக்களை ஜாதி துவேஷம் மதத் துவேஷம் செய்து வந்த இவர்களின் முகத்திரை கிழிய துவங்கியது.
முதலில் ராமரை செருப்பால் அடித்தோம் எனப் பெருமை பேசிய வாய்கள், தானாக வந்த செருப்பு வீணாகப் போகக் கூடாது என அடுக்கு மொழியில் சமாளிக்கத் துவங்கினர்.
அமைதியாக இருக்கும் பிராமணத் தரப்பு, வட இந்திய கடவுள் என இவர்கள் ஒதுக்கி வைத்த ராமர் எனக் கவனமாக விளையாடிக்கொண்டு இருந்தவர்கள், இந்துக் கடவுளை எதிர்த்தால் பிற மத வாக்குகளை ஒன்றிணைத்து விடலாமெனத் தப்பு கணக்கு போட்டு விட்டார்கள்.
எப்போது தமிழ் கடவுளைத் தொட்டார்களோ, அப்போது இங்கு இருக்கும் அனைத்து மதத்தினரும் தமிழர்களாக ஒன்றிணைந்தனர்.
அவர்கள் ஒன்றிணைவோம் வாருங்கள் என அழைத்ததை நிராகரித்து நாங்கள் ஏற்கனவே ஒன்றிணைந்தது தான் உள்ளோம் எனக் காட்டி விட்டார்கள்.
இங்கே தான் ஆன்மீக அரசியலை வெளிப்படுத்திய ரஜினியின் ட்வீட் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறது.
அவரது டீவீட்டில் இந்து கடவுளைக் கொச்சைப்படுத்தி விட்டீர்களே என்ற ஆதங்கம் இல்லை. முருகனை திட்டிய நீ இயேசுவையும் அல்லாஹ்வையும் திட்டுவாயா என்ற வெறுப்பு இல்லை,.
இந்து சொந்தங்களே பொறுத்தது போதும் எனத் தூண்டும் வார்த்தை இல்லை... அவ்வளவு ஏன்! கடவுள் என்ற வார்த்தை கூட இல்லை.
மாறாக…. தமிழர்கள் மனது புண்பட்டது எனத் தமிழக மக்களின் ஒற்றுமை இருந்தது.
இச் செயல் ஈன செயல் என வெறுப்பு அரசியலுக்கான விளக்கம் இருந்தது.
அவர்களை முடக்கிய அரசுக்குப் பாராட்டு தெரிவித்து ஒரு புது அரசியலின் தொடக்கம் தெரிந்தது.
நிந்தனை பேச்சுக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதில் அந்தக் கட்டுப்பாடு தெரிந்தது.
முடிவாக எம்மதமும் சம்மதம் எனக் கூறியதில் ஆன்மிகம் தெரிந்தது.
மற்ற கட்சிகளே…. கொஞ்சம் பார்த்துக் கத்துக்கோங்க….
இல்லனா…… பார்க்கத் தானே போறீங்க… ஆன்மீக அரசியலை !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|