Related Articles
நல்லது பண்றீங்க...: சித்தா டாக்டருக்கு நடிகர் ரஜினி பாராட்டு
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 7 - பாண்டியன்
சாத்தன்குளம் அநீதி - சத்தியமா விடவே கூடாது!!
ஒரே ஒரு போன் கால் மூலம் ... சாத்தன்குளம் அநீதியை உலகத்தின் பார்வைக்கு எடுத்த சென்ற ரஜினிகாந்த்!!!
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 6 - பணக்காரன்
ரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல.
ரஜினி ரசிகர்களின் வேகமும் வீரியமும் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கு அமைவது மிகக் கடினமே!
ரஜினியை அவரின் ஆதரவாளருக்கு பிடிக்காம போக என்ன செய்ய வேண்டும்?
நான் ரஜினி மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டதும் அவருக்கு தெரியாது ..
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 5 - உழைப்பாளி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
அவரது கண்களில் இருக்கும் ஈர்ப்பு சக்தி எவரையும் கவர்ந்துவிடும் - நடிகை ராதிகா ஃப்ளாஷ்பேக்
(Thursday, 9th July 2020)

போக்கிரி ராஜா, ரங்கா, நல்லவனுக்கு நல்லவன், ஊர்க்காவலன் ஆகிய படங்களில் ரஜினியோடு நடித்திருக்கும் ராதிகா தனது சுவாரஸ்யமான அனுபவத்தைப் 30 ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்து கொண்டார். இதோ உங்களுக்காக . . .

"பத்திரிகையொன்றிற்காக ரஜினியைப் பேட்டி காணச் சென்றேன். அதுதான் அவருடன் எனக்குள்ள முதல் சந்திப்பு. அதிகம் பேசமாட்டார்.

அப்போது என்னிடம், "என்னோடு போக்கிரி ராஜா படத்தில் நடிக்கிறீர்கள் வாழ்த்துகள்" என்றார். அவரோடு அந்தப் படத்தில் நடிக்கப் போவதே அவர் மூலமாகத் தான் தெரியும். அது மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம்.

'போக்கிரி ராஜா' படத்தில் 'போக்கிரிக்கு போக்கிரி ராஜா' என்ற பாடல் காட்சி வருகிறது. திருப்பதிக்கருகில் படமாக்கப்பட்ட அந்தக் காட்சியில், ரஜினியின் தோள் மீது குதித்து ஏறுவது போல் ஒரு ஷாட். இந்த ஷாட் சரியாக வராமல் சுமார் பத்து பனிரெண்டு முறையாவது அவரது தோளில் குதித்திருப்பேன். ஒரு முறையாவது அவர் முகம் சுளிக்க வேண்டுமே. அது மட்டுமல்ல. அந்தப் படத்தில் அவரை நான் எப்போதுமே கன்னத்தில் இடித்து இடித்துப் பேசுவது போல் என் வேடம் அமைந்திருந்தது. நடிக்கின்றபோது பொய்யாக இடிப்பதுபோல வரவில்லை. அந்த சமயத்தில் நிஜமாகவே அவரது கன்னத்தில் இடித்து.... அதற்கும் அவரிடம் ரியாக்ஷன் வரவில்லை. 'என்னடா மனுஷன்?' என்று எனக்கே போராகிவிட்டது.

'அசலி நகலி' என்றொரு இந்திப் படத்தில் (இது தமிழில் 'நானே வல்லவன்' என்று டப் செய்யப்பட்டு வந்தது) ரஜினிக்கு ஜோடியான நான், அவரைக் கன்னத்தில் இடித்து கேலி செய்வது போல் நடித்தேன். அப்போது ரஜினி, 'போக்கிரி ராஜாவில் இடிக்க ஆரம்பித்ததை இன்னும் நிறுத்தவில்லை போலிருக்கிறதே...?" என்று கன்னத்தைத் தடவியபடியே கேட்டார்.

'அசலி நகலி' படத்தில் மற்றொரு ஹீரோ சத்ருகன் சின்ஹா. காலை 9.00 மணிக்கு படப்பிடிப்பு என்றால் மாலை 4.00 அல்லது 5.00 மணிக்கு சாவகாசமாக வருவார். நானும் ரஜினியும் யார் முதலில் வருவது என்று போட்டிப் போட்டுக் கொண்டு சில சமயம் காலை 8.00 மணிக்கே வந்து விடுவோம். அந்த நேரம் யூனிட்டில் யாருமே வந்திருக்க மாட்டார்கள். எங்களுக்குக் காப்பி கொடுக்கக் கூட ஆள் இருக்காது. சத்ருகன் சின்ஹா வரும்வரை ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்தபடி இருப்போம்.

'ரங்கா' படத்தில் நடித்தபோது ரஜினி 'அந்தாகானூன்' இந்திப் படத்தில் நடிக்க ஆரம்பித்திருந்தார்.

'ரங்கா' படத்தின் பாடல் காட்சியொன்று அண்ணாசாலையில் படமாக்கப்பட்டது. நானும் ரஜினியும் பாடியபடியே ஓடி வருவோம். ரசிகர்கள் திரண்டு எங்களைத் துரத்துவார்கள். அவர்களைத் தவிர்ப்பதற்காக ஷாட் முடிந்ததும் காருக்குள் போய் அமர்ந்து கொள்வோம். அப்போது ரஜினி என்னிடம் இந்திப் பட வசனங்களைச் சொல்வார். வசனங்களைச் சொன்னாரா, அல்லது இந்தியில் பேசினாரா என்று எதுவும் புரியவில்லை. விழித்துக் கொண்டிருப்பேன்.

'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் போட்டி வந்துவிட்டது. ரஜினியுடன் நடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒத்திகையில் செய்வது வேறு. ஷாட்டில் சில விஷயங்களைச் சேர்த்துக் கொள்வார். அதையும் பிடித்துக் கொண்டு அவரோடு போட்டியிட வேண்டும்.

எனக்கு தனி ஷாட் இருந்தால் ரஜினி தனக்கு ஷாட் இல்லையென்று ஓய்வாக உட்கார்ந்து விட மாட்டார். நான் என்ன நடிக்கிறேன் என்ற கவனித்துக் கொண்டிருப்பார். சில சமயம் என் நடிப்பில் லயித்துப் போய் 'அடேங்கப்பா' என்று விமர்சிப்பார்.

இடைவேளை நேரத்தில் ரஜினி ஆன்மிகம், தத்துவம் என்று பேசிக் கொண்டிருப்பார். நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி, அவரை மடக்குவேன். பேசிக் கொண்டிருக்கும்போதே மௌனமாகி விடுவார். தீவிர யோசனையில் இருப்பார். அதனால் அவரை 'சிந்தனைச் சிற்பி' என்று கிண்டல் செய்வேன்.

இதே படத்தின் 'உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே" என்ற பாடல் காட்சி முட்டுக்காடு அருகில் படமாக்கப்பட்டது. படகில் நானும் ரஜினியும் பாடியபடி செல்வது போல் லாங் ஷாட்டில் வரும். அப்போது நானும், ரஜினியும் பேசிக் கொண்டிருந்தோம். ரஜினி, "வாழ்க்கையில் என்ன இருக்கிறது? சாமியாரா போயிடலாமா என்று நினைக்கிறேன்" என்றார்.

நான் அதற்கு, "சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கீங்க. இதைவிட நிச்சயமாக வேறு நிலைக்குப் போக மாட்டீங்க. நீங்க சாமியாரா மாறுவது பற்றி எனக்கு நம்பிக்கையில்லை" என்றேன். பாடல் வரிகளுக்கு வாயசைப்பதற்கு பதில் இதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

நகைச்சுவை வசனம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியதல்ல. இதில் ஆக்ஷன், ரியாக்ஷன் மிகச் சரியாக இருந்தால்தான் ரசிகர்கள் அனுபவித்துச் சிரிக்க முடியும். ரஜினி நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் போது நான் ஜாக்கிரதையாக இருப்பேன். நூலிழை கூடப் பிசகாமல் ரியாக்ட் செய்வார். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால் அது போல் காட்சிகளில் நடிக்கும்போது உற்சாகமாக இருக்கும். 'ஊர்க்காவலன்' படத்தில் எங்களது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

ரஜினியை சினிமாவில் உள்ள எல்லோருமே விரும்புவார்கள். அதற்குக் காரணம், மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்துவிட்டு அவர்களைப் பாரபட்சமின்றிப் பாராட்டுவார். பிறரைப் பாராட்டும் விஷயத்தில் ரஜினியை வள்ளல் என்றே சொல்லலாம்.

நான் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் சரியாகச் சாப்பிட மாட்டேன். எனக்குக் குறைந்த ரத்த அழுத்தம் உண்டு. அதனால் சாப்பிடாததன் பலகீனம் சில சமயம் மயக்கமாகிவிடும். ரஜினி என்னிடம் அடிக்கடி உபதேசிப்பது, "நன்றாகச் சாப்பிடுங்கள்" என்று. என்னை உற்சாகப்படுத்தி சாப்பிட வைப்பதற்காக, "மயங்கி விழுந்திடுங்க. இன்றைக்கு ஷ¨ட்டிங் ரத்தாயிடும்" என்று கிண்டல் செய்வார்.

ரஜினியின் ஸ்டைல் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கண்களில் இருக்கும் ஈர்ப்பு சக்தி எவரையும் கவர்ந்துவிடும்.

ரஜினியைப் போலவே அவரது மனைவி லதாவுக்கும் நல்ல சுபாவம். நாங்கள் இருவரும் நல்ல சிநேகிதிகள். அடிக்கடி சந்தித்துப் பேசுவோம்" என்றார் ராதிகா.


 
0 Comment(s)Views: 679

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information