சென்னை; சித்தா டாக்டர் வீரபாபுவை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி, 'மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க...' என, பாராட்டி உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துவ சிகிச்சை அளிக்க, தமிழக அரசு பரிந்துரைத்தது.
நல்ல வரவேற்புஇதுதவிர, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கு, தனித்த சித்தா சிகிச்சை அளிக்க, மாநகராட்சி சிறப்பு மையத்தையும் அமைத்துள்ளது. இங்கு, டாக்டர் வீரபாபு குழுவினர், ஆவி பிடித்தல், சூரிய குளியல், மூலிகை தேநீர், சித்தா உணவுகளை வழங்கி, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முகாமில், சிகிச்சை முடிந்து, இதுவரை, 550 பேர், நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினி, நேற்று மாலை, சித்தா டாக்டர் வீரபாபுவை, மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, 'உங்களது சேவை சார்ந்த செய்திகளை தொடர்ந்து பார்த்து, படித்து வருகிறேன். கொரோனா பாதிப்பு நேரத்தில், மக்களுக்கு நல்லது செய்து வருகிறீர்கள். உங்களோட செயல்பாடுகள் ரொம்ப மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்; ஊரடங்கு முடிந்ததும், நாம் சந்திப்போம்' என்று பேசி, பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து, டாக்டர் வீரபாபு கூறுகையில், ''நடிகர் ரஜினியின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன், தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணி தொடரும்,'' என்றார்.
|