Related Articles
ரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல.
ரஜினி ரசிகர்களின் வேகமும் வீரியமும் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கு அமைவது மிகக் கடினமே!
ரஜினியை அவரின் ஆதரவாளருக்கு பிடிக்காம போக என்ன செய்ய வேண்டும்?
நான் ரஜினி மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டதும் அவருக்கு தெரியாது ..
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 5 - உழைப்பாளி
பாடகர் மலேசியா வாசுதேவன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - 75 இயர்ஸ் ஆஃப் மலேசியா வாசுதேவன் !!
தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த சிவாஜி !!!
ஃப்ளாஷ்பேக் : பெத்தராயுடு படத்தின் 200 வது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி (1995)
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 4 - அருணாச்சலம்
அரசியலுக்காக ரஜினியை எதிர்ப்பது எந்த பயனும் இல்லை!! இறங்கி வந்த திருமாவளவன் !!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 6 - பணக்காரன்
(Sunday, 28th June 2020)

90களின் முதல் ரஜினி படம் என்ற பெருமை பணக்காரனை சாரும். 

 

இந்தியில் இருந்து  நிறைய அமிதாப்பச்சனின் படங்களை தமிழில் மறு ஆக்கம் செய்து ரஜினி நடித்திருப்பார். அவ்வாறு அவர் நடித்த கடைசிப் படம் பணக்காரன் தான்.  இந்தியில் பணக்காரன் laawaris என்ற பெயரில் 1981இல் திரைக்கு வந்து இருந்தது. 

 

இயக்குனர் பி. வாசு ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த முதல் படமும் பணக்காரன் தான். 

 

80களின் பிற்பகுதி ரஜினி படப் பார்மூலாவைக் கொண்டே பணக்காரன் பெரும்பாலும் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் சூப்பர் ஸ்டார்க்கான நேரங்களும் படத்தில் காணக் கிடைத்தன என்றே சொல்லலாம். 

 

அன்றைய நிலையில் ரஜினி தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தப் பெரும் தங்கச் சுரங்கம் என்று தான் சொல்ல வேண்டும்.  குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் தயாரிப்பு முடிந்து திரைக்கு வந்து வசூலை அள்ளிய ரஜினிகாந்த் படங்களில் ஒன்று தான் பணக்காரன். 

 

பொங்கல் வெளியீடாக வந்து சக்க போடு போட்டது. 

 

கதை சுருக்குமாய் ஒரு சில வரிகளில்  சொல்லி விட முடியும், பெற்றோர் இருந்தும் அனாதையாய் வளர்ந்து நிற்கும் ஒரு இளைஞனின் கதை தான் பணக்காரன். 

 

ஒரு சாதாரணக் கதைக்கு வாசு தமிழ் சினிமா ரசனைக்கு ஏற்ப காரம் குணம் மணம் சேர்த்து திரைக்கதை எழுதி இருக்கிறார். ரஜினிக்காக இன்னும் கொஞ்சம் மசாலா கொஞ்சம் ஆங்காங்கே கூடுதலாக தூவி இருக்கிறார். 

 

ஒரு பணக்கார இளைஞன் பணத்திமிரிலும் வாலிப முறுக்கிலும் ஒரு பெண்ணை ஏமாற்றி விடுகிறான். அந்தப் பெண் ஒரு பாடகி. அந்த பாத்திரத்துக்கு ஒரு பாட்டும் வைக்கப் பட்டிருக்கிறது.  அந்தப் பாட்டு திரைக்கதையில் ஒரு மெல்லிய நூலாக சம்பவங்களைக் கோர்க்க பயன்பட்டிருக்கிறது 

அதையும் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.அவளுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறக்கிறது. 

 

அவள் அண்ணன் குழந்தையைக் கொல்லச் சொல்லி ஒரு குடிகாரனிடம் கொடுத்து விடுகிறான். 

 

அந்த குடிகாரன் குழந்தையைக் கொல்லாமல் தன் சுய நலனுக்காக வளர்க்கிறான்.  

 

குழந்தை சுயம்புவாக வளர்கிறது.

 

இப்படி ஒரு முன் கதையோடு படம் துவங்குகிறது. 

 

அந்தக் குழந்தை யார் என்று சொல்ல வேண்டியது இல்லை, அது தான் படத்தின் நாயகன், ரஜினி. 

 

டைட்டில் ஓடும் போதே கதையும் நகர்கிறது. 

 

கதையில் ஒரு முடிச்சு விழுந்து விடுகிறது, ரஜினிகாந்த் வளர்ந்து எப்படி தன் தாய்க்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்க போகிறார் என்னும் ஒரு ஆர்வம் பார்வையாளர்களுக்கு  ஏற்பட்டு விடுகிறது. 

 

கதை அப்படியே வளர்ந்த ரஜினிகாந்த்க்கு வருகிறது,  ரஜினிக்கு இந்தப் படத்தில் பெயர் முத்து. 90களில் முத்து என்ற பாத்திரப் பெயர்களில் தான் ரஜினி அதிகம் நடித்து இருப்பார் என்பது ஒரு கூடுதல் தகவல். ( முத்து வீரப்பன் - வீரா,  முத்து - முத்து ) வழக்கம் போல் துடிப்பும் துள்ளலும் சேர்ந்து ரஜினி திரையில் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிகிறார். 

 

ரஜினி அறிமுகம் ஆகும் போது பின்னால் ஒலிப்பது, அவர் தாய் பாடிய அதே பாட்டு தான்.  அந்த பாட்டைக் கேட்ட நிலையில் ரஜினி தன் மெய் மறந்து ஆடுகிறார்.  அதனால் அவர் வேலை போகிறது.  மேலாளரிடம் தன்னை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார் ரஜினி,  அந்த இடம் மெல்லிய ரஜினியிசம் தவழும் இடம், பார்க்கும் நமக்கு புன்னகை பூக்க வைக்கும் இடம், கெஞ்ச கெஞ்ச மிஞ்சும் மேலாளரைக் கடைசியில் ரஜினி போடா என்று உதறி செல்லும் போது அது தான் ரஜினி என்று சொல்ல வைக்கிறது. 

 

வேலை இழந்து வீட்டுக்கு வரும் ரஜினி தன் கொடுமைக்கார தந்தை என்ன சொல்லுவாரோ என்று பயப்படுகிறார். 

 

தந்தையோ காரணம் என்ன என்று விசாரிக்கிறார். பாடலைக் காரணமாய் சொல்லும் மகனிடம் எந்த கோபத்தைக் காட்டாமல், இதற்கு நீ ஆடத் தான் செய்வ என்று சொல்லி நகர்ந்து விடுகிறார். 

 

ரஜினி ஒரு சேரியில் வாழ்கிறார். அங்கு அவருக்கு இருக்கும் நண்பன் சபாபதி ( ஜனகராஜ் ).

சபா ரஜினியை பக்கத்து ஊரில் இருக்கும் புது பேக்டரிக்கு வேலைக்குப் போக ஆலோசனை சொல்லுகிறான். 

 

படத்தில் நாயகன், காமெடியன், மற்றும் சில முக்கியப் பாத்திரங்கள் அறிமுகம் ஆகி விட்ட நிலையில் இப்போது நாயகியை ரசிகனுக்கு காட்ட வேண்டிய நேரமல்லவா,  வருகிறார் நாயகி. 

 

ரஜினி படத்தில் அறிமுகம் ஆன கவுதமி தான் நாயகி, ரஜினியோடு அவருக்கு இது மூன்றாவது படம்.  இதில்  திமிர் பிடித்த பணக்காரப் பெண்ணாக  நாயகனுக்கு அறிமுகம் ஆகிறார். 

 

கார் ஓட்டி தன் பணியாளரை சேற்றில் தள்ளி விளையாடும் விநோதமான அறிமுகம். 80களின் ரஜினி பட நாயகிகள் பெரும்பாலும் இப்படித் தான் இருப்பார்கள்,  அவர்களைக் காதலித்து அடக்கி ரசிகனை மகிழ்விப்பார் ரஜினி. 

 

இதிலும் அதைத் தான் செய்கிறார். 

 

மோதலில் ஆரம்பிக்கும் ரஜினி -கவுதமி உறவு பின்னர் காதலில் முடிகிறது. மோதல் காதலுக்கு செல்லும் பயணம் சுவாரஸ்யமான காமெடி, சண்டைக் காட்சி, பாடல் காட்சி என்று இயக்குநர் நிறைத்து இருக்கிறார்.  ரசிகர்களுக்கும் அலுப்புத் தட்டாமல் ஓடுகிறது. 

 

அடுத்து படத்தின் இன்னொரு  வில்லன் பாத்திரமும்  நமக்கு அறிமுகம் ஆகிறது.  பழைய வில்லனும் சேர்ந்தே மீண்டும் வருகிறார். 

 

பழைய வில்லன் என்று இங்கு குறிப்பிடுவது ரஜினியின் மாமா பாத்திரம். சிறு வயதில் ரஜினியைக் கொல்லக் கொடுத்த அதே மாமா தான்.

ராவ் பகதூர் என்ற அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ராதாரவி.  

 

" இந்த ராஆவ் பகதூர்" என்று அவர் தன் பெயரை நீட்டி சொல்லும் அழகு வெகுவாக ரசிக்கப் பட்டது.

 

அவர் தான் ரஜினியின் தாய் மாமன் என்பதும், அவர் ரஜினியைக் கொலை செய்ய முயன்றவர்  என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரிந்து விடுகிறது. 

 

திரையில் ரஜினிக்கோ ராதாரவிக்கோ  அது இன்னும் தெரியாது,  கவுதமி ராதாரவியின் மகள், அதனால் அவர் ரஜினிக்கு மாமன் மகள் என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு நிறுவப்படுகிறது. 

 

சரி இன்னொரு வில்லன் என்று சொன்னோம் இல்லையா அவரைp பார்ப்போம்,  அந்த இன்னொரு வில்லன் நடிகர் சரண்ராஜ், ராதாரவி குடும்பத்திற்கு பண உதவி செய்கிறான். அதற்கு காரணம் அவனுக்கு ராதாரவி மகள் கவுதமி மீது ஒரு கண். 

 

ராதாரவிக்கு இது தெரியும் அவருக்கும் இது சம்மதம் தான்,  

 

கவுதமிக்கு சரண்ராஜ் பேரில் பிடித்தம் இல்லை. சரண்ராஜ் ஒரு பெண் பித்தனாக காட்டப் படுகிறார். 

 

இந்த நிலையில் தான் ரஜினி கவுதமி காதல் மலர்கிறது.  சரண்ராஜ் ரஜினியை ஒழிக்க ஒரு வஞ்சக திட்டம் போடுகிறார். 

 

தன்னுடைய எஸ்டேட்க்கு வேலை உயர்வு கொடுத்து அனுப்புகிறார்.  ரஜினியும் சந்தோசமாக கிளம்புகிறார்.  

 

சரண்ராஜ் தன் எஸ்டேட்டில் வேலைப் பார்க்கும் ரவுடிகளை வைத்து ரஜினியைத் தீர்த்து கட்ட திட்டமிட்டு ரஜினியை அங்கு  அனுப்பி வைக்கிறார். 

 

ரஜினியாச்சே சொல்லவா வேண்டும், அங்கு எல்லாமே தலை கீழாக நடக்கிறது. ரவுடிகளை ரஜினி புரட்டி எடுக்கிறார். 

 

எஸ்டேட்ஐ தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். 

 

அங்கு ரஜினி சரண்ராஜ் தந்தையை சந்திக்கிறார்.  படம் பார்க்கும் நமக்கு தெரிந்து விடுகிறது,  மகனும் அப்பாவும் சந்திக்கிறார்கள் என்று.  ரஜினியின் தாயை தன் இளம் வயதில் ஏமாற்றி விட்டு வந்தவர் தான் இப்போது ரஜினி சந்திக்கும் சரண்ராஜ் தந்தை.  நடிகர் விஜயகுமார் அந்த வேடத்தை ஏற்றிருந்தார்.  

 

கதையில் எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உறவு என்று ஆகி விடுகிறது. 

 

இந்த நிலையில் கவுதமியும் ஜனகராஜும் ரஜினியைத் தேடி எஸ்டேட்க்கே வருகிறார்கள்.  ரஜினி கவுதமி காதல் மேலும் வளர்கிறது. 

 

சரண்ராஜ்க்கு ரஜினியின் ஆளுமை மீது பொறாமை பொங்குகிறது.  ரஜினியை எப்படியாவது வீழ்த்தியே தீர்வது என்று வெறி கொண்டு அலைகிறார். 

 

ரஜினியிடம் தங்கைப் போல் உரிமை கொண்டாடும் பெண் ஒருத்தியை  மானப்பங்கம் செய்து விட்டு, அந்த பழியை ரஜினி மீது போட முயல்கிறார். 

 

ரஜினி தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைத்து அந்த பெண்ணை சரண்ராஜ் மனைவியாக ஏற்று கொள்ள வைக்கிறார்.  இது அந்தக் காலத்து நீதி, தற்காலத்துக்கு பொருந்துமா என்பதை யோசிக்க வேண்டும். 

 

இதற்கு பின் ரஜினி தன் குடும்பக் குழப்பங்களை எவ்வாறு தீர்த்து எல்லாவற்றுக்கும் சுபம் சொல்லுகிறார் என்பது தான் படம். 

 

அதை இயக்குனர் தமிழ் சினிமா மற்றும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் கொடுத்து இருக்கிறார். 

 

படத்திற்கு இசை இளையராஜா, இதில் ராஜா ஒரு பாடல் எழுதியும் இருக்கிறார்.  இரண்டு பாடல்கள் பாடியும் இருக்கிறார்.

 

மற்ற பாடல்களை கவிஞர் பிறைசூடன் மற்றும் கவிஞர் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.  

 

ரஜினிக்கு ராஜா குரல் கொடுத்து இருக்கும் தருணங்கள் வெகு குறைவு.  அதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய  பாடல்  "நான் உள்ளுக்குள் சக்கரவர்த்தி" என்று தாராளாமாய் சொல்லலாம்.  

 

படத்தின் அறிமுக பாடலான "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" அந்த பாடலின் வரிகளுக்காக கொண்டாடப்பட்டது. இந்த பாடல் தான் இளையராஜா எழுதியது. 

 

"டிங் டாங் டிங் " பாடல், கச்சிதமாக செட் போட்டு எடுக்கப்பட்ட பாடல், அதில் நூற்றுக்கணக்கான சுவர் கடிகாரங்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருப்பது பார்க்க சிறப்பாக இருக்கும். 

 

"சைலென்ஸ்...காதல் செய்யும் நேரமிது " இது இன்னொரு காதல் பாடல், நூலகம் செட் அப் இல் ரசிக்கும் படி படமாக்கப் பட்டிருக்கும். 

 

பணக்காரன் படப் பாடல்களில் மிகவும் பேசப்பட்ட பாடல் "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் " ஆகும். இந்தப் பாடல் படத்தில் மூன்று இடங்களில் வரும். 

 

மூன்றாவது முறை வரும் இடத்தில் ரஜினியின் மீது படமாக்கப்பட்டிருக்கும். பாடல் வரிகளுக்கு ஏற்ப ரஜினி போட்ட  வேஷங்கள் ரசிகர்களிடம்  பெருத்த வரவேற்பைக் குவித்தன.பாடல் வரிகள் தனிப் பெரும் பாராட்டைப் பெற்றது என்றால் பாடலுக்காக ரஜினி போட்ட சேட்டை கெட்டப்கள்  பாட்டை வேறு தளத்திற்கு கொண்டு போய் நிறுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல. 

 

இரு தலைமுறை ரஜினி ரசிகர்களின் திருமண நிகழ்வு பாடலாக இன்றளவும் இந்த பாட்டு நிலைத்து நின்று விட்டது, ரஜினிக்கும் ராஜாவுக்குமானப் பெருமை. 

 

சண்டைக்காட்சிகள் 

 

பணக்காரன் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், படத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சிகள். 

 

மும்பை சண்டைக்காரர்கள் நிறைய பங்களிப்பு செய்து இருந்தனர். 

 

அப்போதெல்லாம் ரஜினி படத்தில் சண்டை என்றால், ரஜினி எல்லாரையும் அடித்து முடித்தப் பின், தனியே ஒரு 

ஃபைட்டர் ரஜினியோடு மோதுவார். அந்த ஃபைட்டர்கள் பெரும்பாலும் ரஜினியை விட உருவத்தில் பல மடங்கு பெருத்து இருப்பதாய் காட்டுவார்கள். 

 

டேவிட் கோலியாத் சண்டை பார்முலா அது. சிறுவர்களும், சிறுவர்களாய் மாறிய ரசிகர்களும், அய்யயோ ரஜினி என்னப் பண்ணப் போறாரு என்று நகம் கடித்துக் காத்து இருப்பார்கள். 

 

ரஜினி தன் "ரஜினி மேஜிக்" பண்ணி பின் கடைசியாக அந்த அரக்கர் போல் இருக்கும் பைட்டரை வீழ்த்தி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளுவார்.  பணக்காரனில் அப்படி ஒரு சண்டைக் காட்சி ஒர்க் ஷாப் பின்னணியில் வரும். 

 

"டேய் புடிடா, இந்த பீடி முடியறதுக்குள்ள உன் தலைவனை முடிக்கிறேன்" என்று சண்டையை சொன்ன மாதிரியே முடிப்பார். 

 

ரஜினி படங்களில் 80களின் பிற்பகுதியில் இருந்து சண்டைக்காட்சிகளில் காமெடிக்கு பிரதான இடம் உண்டு.  சூப்பர் ஸ்டார் பார்முலா அது. குழந்தை ரசிகர்கள் உருவான நேரம் அது,  ரஜினி பட சண்டைகளில் ரத்தம் அதிகம் ஆனால் காமெடித் தெறிக்கும். ரஜினியின் உடல் மொழி வன்முறையின் தீவிரத்தைக் குறைத்து காட்டும். 

 

எஸ்டேட் ரவுடிகளோடு ரஜினி சண்டை போடும் காட்சி அப்படி ஒரு சண்டை தான். பல மொழி பேசும் ரவுடிகளிடம் ரஜினி முத்தலில் பம்முவது போல் பம்மி பின் 

 

தமிழ் நாடு கூப்பிடுதுன்னு அவங்களைக் கூப்பிட்டு தன் பன்மொழித் திறம் காட்டி அதிரடியில் இறங்கும் இடம் சரவெடி சண்டைக்காட்சி.

 

கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி சாகசம் நிறைந்து இருக்கும். ரோட்டில் நடக்கும் கார் சேஸ் மற்றும் குண்டு வெடிப்புக்கள் என பரபரப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். 

 

காமெடி காட்சிகள். 

 

ரஜினி தனித்து நின்றே காமெடியில் கொடியைப் பறக்க விட கூடிய திறமையாளர்,  இதில் அவருக்கு துணையாக ஜனகராஜ் வேறு. 

 

ஏரோபிளேனில் ஊருக்கு கிளம்பும் காட்சியில் ரஜினியின் ஸ்டைலும் காமெடியும் போட்டிப் போடும். கூட ஜனகராஜ் வேறு ரகளை செய்வார். 

 

கவுதமி அறிமுக காட்சியில் கார் டயர் கிழிக்கும் காட்சி இன்னொரு சிரிப்பு பட்டாசு. ஜனகராஜின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்றைய சில அரசியல் மேடைகளின் மொழிப்பெயர்ப்புகளுக்கு எல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். மனிதர் வெளுத்து வாங்கி இருப்பார். 

 

நடிகர்கள் 

 

நடிகை சுமித்ரா ரஜினியின் தாய் வேடத்தில் வந்து இருக்கிறார் , படத்தை ஆரம்பித்து வைத்து பின்னர் முடித்து வைக்க வருகிறார். 

 

செந்தாமரைக்கு குடிகார வளர்ப்பு தந்தை வேடம், அதிகம் இல்லை என்றாலும் வரும் கொஞ்ச நேரத்திலும் தன் தேர்ந்த நடிப்பால்  முத்திரை பதிக்கிறார். குடிகாரனாக விக்கல் காட்டும் அவர் நடிப்பு யதார்த்தம். 

 

விஜயகுமார் ரஜினி மற்றும் சரண்ராஜ்க்கு தந்தையாக வருகிறார்.  தான் இளமையில் செய்த தவறை நினைத்து மருகும் ஒரு பாத்திரம். சிறப்பாக செய்து இருக்கிறார். 

 

விஜயகுமார்க்கு ஜோடியாக, அக்கால லேடீஸ் கிளப் மோகம் கொண்ட நாகரீக  பணக்கார தாயாக, சத்யப் பிரியா, விஜயகுமார் ரஜினி சத்யப்பிரியா ஆகியோர் இதே உறவுமுறை பிரதிபலிக்கும் வகையில் சில வருடங்கள் கழித்து இதே சத்யா மூவிஸ் தயாரிப்பில் நடித்து வந்த படம் தான் "பாட்ஷா".

 

நடிகை பூரணி ரஜினியை அண்ணன் என்று அழைக்கும் ஒரு பாத்திரம். கொஞ்சமே வருகிறார், சரண்ராஜால் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகி அவரையே மணக்கிறார். 

 

தியாகு, பாண்டு எல்லாம் சிறு சிறு வேடங்களில் வருகிறார்கள். 

 

கவுதமிக்கு பெரிய வேலை இல்லை. ரஜினியை சுற்றி சுற்று வந்து மோதுகிறார் பின் காதலிக்கிறார். ஜனகராஜ் உடன்  சேர்ந்து சரண்ராஜ் ஐ சந்திக்கும் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க வாய்ப்பும் பெறுகிறார். 

 

ஜனகராஜ் ஆங்கிலம் பேசியே சிரிக்க வைக்கிறார், கவுதமியின் உதவியாளராக வரும் போது அவர் போட்டிருக்கும் உடைகளும் சிரிப்பை வரவழைத்து விடுகின்றன. 

 

சரண்ராஜ் வில்லனாக வருகிறார், கெட்டு சீரழிந்த பணக்கார வீட்டுப் பிள்ளை வேடம்,  தன் சொந்த தந்தையைக் கொல்ல துணியும் ஒரு வில்லத்தனமானக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

 

ராதாரவி, ராவ் பகதூராக நரித்தனம், வெறித்தனம் கூடவே கொஞ்சம் காமெடி கலந்து வில்லத்தனம் செய்திருக்கிறார்.  

 

ரஜினிக்கு இது இன்னொரு ரஜினி படம். 

 

வழக்கம் போல படத்தை தன் தோளில் சுமக்கிறார். தன் துறு துறு திரை ஆளுமையால் ரசிகர்களைக் கட்டி இழுக்கிறார்.  தன் நகைச்சுவை நடிப்பால் மக்களை சிரிக்க வைக்கிறார்.  தன் யதார்த்த பாவங்களால் குடும்பங்களை ஆள்கிறார்.  மெல்லிய நடனங்களால் பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறார் 

 

ரஜினி இந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் கோட்டு போட்டே வருவார், அவரது உடைகள் சிறப்பாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் 

 

"நான் நினைச்சா உங்க இடத்துக்கு, அதாவது தலைவன் இடத்துக்கு ரொம்பவே சுலபமா வந்துடுவேன்.. ஆனா எனக்கு அது வேண்டாம், அந்த ஆசை இல்லை, நான் ஒரு தொண்டன், என்னிக்குமே தொண்டனா இருக்கவே ஆசைப்படுறேன் "

 

என்று தன் அரசியல் பார்வையை திரையில் சொல்லுகிறார். 

 

பணம் காசு இருப்பவன் எல்லாம் பணக்காரன் அல்ல யாருக்கு எல்லாம் நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் அமைகிறார்களோ அவர்கள் தான் உண்மையான பணக்காரன் என்று ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி படத்தை முடித்து வைக்கிறார். 

 

பணக்காரன் தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

 

பணக்காரன் படம் வந்த ஆண்டு 1990

இயக்கம் - பி வாசு 

தயாரிப்பு  - இராம. வீரப்பன், சத்யா மூவிஸ் 

இசை - இளையராஜா 

ஒளிப்பதிவு  - எம். சி. சேகர் 

 

பணக்காரன் 90களின் முதல் ரஜினி படம் மட்டும் அல்ல சூப்பர் ஸ்டார் படமும் கூட. 

ரஜினி என்ற நடிகர் தன் ரசிகர்களுக்கு அன்பான அறிவுரைகள் கொடுக்க ஆரம்பித்து இருந்தார். அதை அவர் ரசிகர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். 

 

பணக்காரன் - ஒரு ஜாலியான சூப்பர் ஸ்டார் படம். 

 

- தேவ்

ஓவியம் : அறிவரசன்






 
0 Comment(s)Views: 704

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information