Related Articles
சாத்தன்குளம் அநீதி - சத்தியமா விடவே கூடாது!!
ஒரே ஒரு போன் கால் மூலம் ... சாத்தன்குளம் அநீதியை உலகத்தின் பார்வைக்கு எடுத்த சென்ற ரஜினிகாந்த்!!!
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 6 - பணக்காரன்
ரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல.
ரஜினி ரசிகர்களின் வேகமும் வீரியமும் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கு அமைவது மிகக் கடினமே!
ரஜினியை அவரின் ஆதரவாளருக்கு பிடிக்காம போக என்ன செய்ய வேண்டும்?
நான் ரஜினி மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டதும் அவருக்கு தெரியாது ..
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 5 - உழைப்பாளி
பாடகர் மலேசியா வாசுதேவன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - 75 இயர்ஸ் ஆஃப் மலேசியா வாசுதேவன் !!
தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த சிவாஜி !!!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 7 - பாண்டியன்
(Sunday, 5th July 2020)

1977 இல் தமிழ் சினிமாவில் ஒரு புதுக்கூட்டணி உருவானது. ஒரு நடிகருக்கும் இயக்குனர்க்கும் இடையிலான ஒரு தொழில் பந்தம் அது. நடிகருக்கு அப்போது வயது 27, இயக்குனருக்கு வயது 42. 

 

அந்த இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவின் வியாபாரத்தை வேறு வேறு தளங்களுக்கு கொண்டு சென்றனர்.  வணிக சினிமாவின் சூத்திரங்களை மாற்றி எழுதினர். 

 

நடிகரின் திரையுலகப் பயணத்தில் இயக்குனரின் பங்களிப்பு மறுக்க முடியாத வரலாறு. 

 

1992, இயக்குனர் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலைக்கு வருகிறார், அப்போது நடிகர் இயக்குநர்க்கும் அவர் உடன் தன்னுடைய இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் ஒரு ஓய்வு கால ஏற்பாடு செய்ய விரும்பி ஒரு படம் நடிக்கிறார். 

 

அந்த படம் தான் 1992 தீபாவளிக்கு திரைக்கு வந்த "பாண்டியன்" படம். 

 

நாம் இதுவரை பேசிக்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் எஸ் பி முத்துராமன் பற்றி தான் என உங்களுக்கு நன்றாகவே விளங்கி இருக்கும். 

 

பதினைந்து வருடங்களில் மொத்தம் 24 படங்கள்,  புவனா ஒரு கேள்விக்குறி யில் ஆரம்பித்தப் பயணத்தின் கடைசி மைல்கல் தான் பாண்டியன். 

 

ரஜினிகாந்த் என்ற மாபெரும் திரைப் பிம்பத்திற்கு என்று கட்டமைக்கப் பட்ட வழக்கமான கதைக் களம் தான் பாண்டியன்.

 

பாண்டியன் படத்தில் எடுத்தவுடன் முதலில் வில்லன் தான் அறிமுகம் ஆகிறான்.  ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரி வில்லனால் கொல்லப் படுகிறான். வில்லனின் அதிகாரமும் ஆணவமும் விளக்க இந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

 

தன்னை எதிர்க்க இந்த உலகத்தில் எவன் இருக்கிறான்?  என்று கொக்கரிக்கும் வில்லன் காட்சி கட் செய்யப்படும் இடத்தில் சரியாக ரஜினியின் அறிமுகப் பாடல் ஆரம்பம் ஆகிறது. 

 

மலையின் பசும் வெளிகளில் இளைஞர் கூட்டத்தோடு சூப்பர் ஸ்டார் ஆர்ப்பாட்டமாய் திரையில் தோன்றுகிறார். 

 

பாடல் முடிந்ததும் ஒரு பரபரப்பான சண்டைக்காட்சி தொடர்கிறது.  

 

பொது மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி ரவுடிகளை அடித்து துவைத்து விட்டு  "சொந்த பிரச்சனையைப் பொது பிரச்சனையாக்கி தொண்டன்ங்கற பேரில் கலாட்டா செஞ்சா உனக்கு விழுந்த அடி உன் தலைவனுக்கும் விழும்" என்று லேசான அரசியல் பேசி விட்டு சூப்பர் ஸ்டார் கதைக்குள் நுழைகிறார். 

 

பாண்டியன் அதாவது ரஜினி நீண்ட நாட்களுக்குப் பின் ஊர் திரும்பி இருக்கிறார். வந்த இடத்தில் கலவரம் செய்யும் ரவுடிகளோடு மோதுகிறார். அந்த நிலையில் சம்பவம் நடந்த  இடத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பாண்டியனைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து போகிறார். 

 

விஜயலட்சுமி வேறு யாரும் அல்ல, பாண்டியனின் சொந்த அக்கா, அக்காவுக்கும் தம்பிக்கும் வெகு நாட்களாவே பனிப்போர் நடந்து வருகிறது. 

 

பாண்டியனுக்காக ஊரே திரண்டு வந்து காவல் நிலையத்தில் நியாயம் கேட்டு அவரை விடுதலை செய்து கூட்டிப் போகிறார்கள். பாண்டியனின் நண்பன் விநாயகம் பாண்டியனின் விடுதலைக்குப் பெரிதும் உதவுகிறான். 

 

காவல் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரஜினியை விநாயகம் மாலையிட்டு மக்கள் தலைவன் பாண்டியன் என்று அழைப்பது சூப்பர் ஸ்டார் பிம்பம் மீதும் பாய்ச்சப்பெறும் கவனிக்கத் தக்க  அரசியல் ஒளி. 

 

இதற்கு பிறகு தன் குடும்பத்தைப் பாண்டியன் சந்திக்கிறான். நீண்ட நாட்களாக பாண்டியன் குடும்பம் விட்டு  பிரிந்து இருந்ததன் காரணத்தை ரசிகர்களுக்கு ஒரு மர்மமாகவே வைத்து இருக்கிறார் இயக்குனர். 

 

பாண்டியன் அக்கா வாழ்க்கையிலும் ஒரு மர்மம் இருபதையும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகனுக்கு சொல்லுகிறார். 

 

அக்கா தம்பி இருவரது ரகசியங்களும் எதோ ஒரு புள்ளியில் சந்திக்கப் போகிறது என்ற அனுமானம் ரசிகனுக்கு ஏற்படுத்த இயக்குனர் தவறவில்லை. 

 

சூப்பர் ஸ்டார் படத்தில் காதல் இல்லாமல் எப்படி?  படத்தில் அடுத்து வரும் பாட்டில் நாயகி அறிமுகம் நடக்கிறது.  

 

நடனப் போட்டியில் பாண்டியனோடு மோதலில் அமைகிறது ரேகாவின் அறிமுகம். 

 

போட்டியில் நாயகி தோற்கிறாள். பாண்டியன் சொல்லும் அறிவுரையில் தன் மனத்தை அவனுக்கே கொடுக்கவும் செய்கிறாள். 

 

படம் காமெடி காதல் குடும்பம் என்று வழக்கமான சூப்பர் ஸ்டார் படமாக வேகம் எடுத்து  செல்கிறது.  சிறப்பாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பி  வழிய வழிய படம் நகர்கிறது. 

 

பாண்டியனுக்கு அக்காவின் ரகசியம் ஒன்று தெரிய வருகிறது, அதன் மூலம் கதையில் இன்னொரு முடிச்சு விழுகிறது. 

 

நண்பன் விநாயகம் மூலம் ஒரு சீட்டாட்ட விடுதியில் பாண்டியன் வேலைக்கு சேர்கிறான்.  அந்த விடுதியின் முதலாளி நாயகியின் தந்தை. 

 

சீட்டாட்ட விடுதியில் போலி போலீசுடன் ரஜினி மோதும் சண்டைக்காட்சி சிரிப்பு கூட்டல் சிலிர்ப்பு.  ரசிகர்களைக் குதூகலம் செய்யும் ஒரு சண்டைக்காட்சியாக அமைக்கப் பட்டிருக்கும். 

 

அக்காவின் ரகசியங்களை அறிய பாண்டியன் செய்யும் முயற்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியும் அடைகிறான்.

 

இந்த நிலையில் பாண்டியனை அவன் முதலாளி ஒரு வேலை விஷயமாக வேதாரண்யம் அனுப்புகிறார். பாண்டியன் கொண்டு செல்லும் சரக்கைத் தட்டிப் பறிக்க முயலும் கூட்டத்திடம் பாண்டியன் தன் அதிரடி காட்டி சாதுர்யமாக சரக்கைக் காப்பாற்றுகிறான்.  இதன் மூலம் தன் வேலை செல்வாக்கை உயர்த்திக் கொள்கிறான். 

 

கதையின் ஆரம்பத்தில் வந்த வில்லன் பரமேஸ்வரன் மீண்டும் கதையில் வருகிறான்.  வேதாரண்யம் வரும் பாண்டியன் அவனிடம் வேலைக்கு சேர்கிறான். 

 

அதே நேரத்தில் பாண்டியனின் அக்கா விஜயலட்சுமியும் வேதாரண்யத்திற்கு பணி மாற்றல் வாங்கி வருகிறாள். 

 

பாண்டியனும் விஜயலட்சுமியும் ஒரே நோக்கம் கொண்டு தான் வேதாரண்யம் வந்திருக்கிறார்கள் என்பது கதையின் போக்கில் பார்வையாளர்களுக்குப் புரிகிறது. 

 

படத்தின் துவக்கத்தில் கொல்லப்படும் போலீஸ் அதிகாரி தான் பாண்டியன் அக்கா விஜயலட்சுமியின் காதலன் என்பதைப் பாண்டியன் தெரிந்து கொள்கிறான். தன் காதலுனுக்கு என்ன நடந்தது என்பதை விசாரிக்கவே அவள் வேதாரண்யம் வந்திருக்கிறாள் என்பதையும் பாண்டியன் தெரிந்து கொள்கிறான். 

 

பரமேஸ்வரன் விஜயலட்சுமியையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறான், ஆனால் அதற்கு மாறாக ஒரு கொலைப் பழியை அவள் மீது சுமத்தி சிறைக்கு அனுப்ப ஆலோசனை சொல்லுகிறார்  பரமேஸ்வரன் உடன் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. 

 

பரமேஸ்வரன் அதன் படியே செய்கிறார்.  விஜயலட்சுமி சிறையில் அடைக்கப்படுகிறாள். 

 

இந்த நிலையில் தான் பாண்டியன் தான் யார் என்று எல்லோருக்கும் காட்டுகிறான், தில்லியில் படித்து பாண்டியன் ஐபிஎஸ் ஆக ஊர் திரும்பி இருப்பது ரசிகர்களுக்கும் சொல்லப்படிக்கிறது.

 

தன் அக்காவுக்கு சட்டப்படி நியாயம் வழங்க வழக்கைக் கையில் எடுக்கிறான். தன் புலனாய்வு மூலம் குற்றவாளி பரமேஸ்வரனை சரியான ஆதாரங்களோடு சட்டத்தின் முன் நிறுத்துகிறான். 

 

ஆனால் பரமேஸ்வரன் தன் பணப் பலம் கொண்டு சாட்சியைக் கலைத்து விட்டு சுலபமாக வெளியே வந்து விடுகிறார். 

இதில் அவருக்கு ஒரு போலீஸ் அதிகாரி,  மருத்துவர் மற்றும் ஒரு வக்கீல் துணை இருக்கிறார்கள். 

 

பாண்டியன் இதற்கு பின்னர் எப்படி தன் பாணியில், அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்முலாவின் மூலம் நீதியை நிலைநாட்டி தன் அக்கா குற்றமற்றவர் என்பதை நிறுவுகிறார் என்பது படத்தின் முடிவுரை. 

 

படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர்  பிரபல கன்னட நடிகர் பிரபாகர், இவர் நடித்த கன்னட படமான பம்பாய் தாதா என்ற கன்னடப் படத்தின் மறு ஆக்கம் தான் பாண்டியன் என்பது ஒரு கூடுதல் தகவல். 

 

படத்தின் நாயகி ரேகா வேடத்தில் குஷ்பூ வருகிறார்,  கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல் என சூப்பர் ஸ்டார் காதலியாக அழகாக வந்து போகிறார். 

 

பாண்டியனின் அக்காவாக நடிகை ஜெயசுதா, இவருக்கு கனமான போலீஸ் வேடம், நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் இவர் நடித்தப் படம் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

ஜனகராஜ், 80களின் பிற்பகுதி மற்றும் 90களின் மத்தி வரை ரஜினி படங்களின் ஆஸ்தான காமெடியன் இவர் தான், இந்தப் படத்திலும் கலகலப்பு ஊட்டுகிறார்.  விநாயகம் வேடத்தில் வரும் இவர் சோகம் வந்தால் சிரிப்பதும் சந்தோசம் வந்தால் அழுவதும் என சிரிப்பலைகளை பரவ விடுகிறார். 

 

குஷ்பூவை ஒரு தலையாக காதலித்து பின் ரஜினியை தான் குஷ்பூ விரும்புகிறார் என அறிந்து சிரிக்கும் இடத்தில் நம்மையும் சிரிக்க வைக்கிறார். 

 

ரஜினிக்கும் இவருக்கும் ஆன காமெடி டைமிங் இந்தப் படத்திலும் பொருந்திப் போகிறது. மற்ற படங்களை விட இதில் ஜனகராஜ்க்கு இதில் கனமான வேடம் இல்லை என்பது என்னைப் பொறுத்த வரை ஒரு குறை தான். 

 

வினுச்சக்கரவர்தி ரஜினியின் முதலாளியாக ஒரு சிலக் காட்சிகளில் வந்து போகிறார். 

 

சரண்ராஜ் அசோக்குமார் ஐபிஎஸ் என்ற வேடத்தில் படத் துவக்கத்தில் வருகிறார். 

 

டெல்லி கணேஷ், ராதாரவி, உதயப்ரகாஷ், பிரதாப் சந்திரன், எல்லாரும் ஓரிரு காட்சிகளில் வந்து தலைக்காட்டினாலும் தங்கள் முத்திரை நடிப்பை வழங்குகிறார்கள். 

 

ராக்கி என்ற சண்டை நடிகரின் வேடம் இந்தப் படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. 

படத்தில் இவர் விரல்களும் நாக்கும் எடுக்கப்படுவதாய் காட்சிகள் இருந்தது தான் இவர் சம்பந்தப் பட்ட பரபரப்புக்கு காரணம்.

 

இசை - இளையராஜா, படத்தில் மொத்தம்  ஐந்து பாடல்கள், அதில்  நான்கு கவிஞர் வாலியும், ஒன்றை பஞ்சு அருணாச்சலமும் எழுதி இருக்கிறாரகள். 

 

பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. 

 

அறிமுக பாடல் "உலகத்துக்காக பிறந்தவன் நானே " ரஜினி ஸ்டைலுக்காகவும் இயற்கை சூழ் படப்பிடிப்பு காட்சிக்காகவும் பெரிதும் பேசப்பட்டது. 

 

"அடி ஜூம்ப்பா"  ஒரு விறுவிறுப்பான போட்டி நடனப் பாடலாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. 

 

"அன்பே நீ என்ன " அருமையான ரஜினி பாணி காதல் பாடலாக அமைந்துப் போனது. 

 

"பாண்டியனின் ராஜ்யத்தில் " இளையராஜாவின் இளவல் முதல் முறையாக இசையமைத்த பாடல் என்ற பெருமை பெற்று கொண்ட பாடல்.  துறைமுகம், கடல் என்ற அருமையான பின்னணியில் படமாக்கப் பட்டிருக்கும். 

ரஜினியின் உடைகள் இந்தப் பாடலில் வெகு மிடுக்காக அமைந்து இருக்கும். 

 

"பாண்டியனா கொக்கா கொக்கா " அட்டகாசமான சூப்பர் ஸ்டார் பாடல்,  இன்றளவும் ரஜினி ரசிகர்கள் ரிங் டோன், வாட்ஸாப் நிலைத்தகவல் என்று இடம் பிடித்து கொண்டு இருக்கும் ஒரு பாடல் இது. அர்ச்சனா பூரன் சிங் என்னும் பாலிவுட் நடிகை ரஜினியோடு இந்தப் பாட்டில் கெட்ட ஆட்டம் போடுகிறார். 

 

ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார்க்கு அளவு எடுத்து செதுக்கப் பட்ட ஒரு வேடம். 

 

மிஸ்டர் ரைட்டு என்று தான் அணியும்  பனியன் சட்டையை  எல்லாம் கூட தனக்காக பஞ்ச் பேச வைக்க ரஜினியால் மட்டுமே முடியும். 92 தீவாளிக்கு மிஸ்டர் ரைட்டு சட்டைப் போடாத ரசிகர்கள் வெகு குறைவு என்று சொல்லலாம். 

 

பாண்டியன் ஐபிஸ் வேடத்தில் கண்ணாடியும் அந்த நீளக்  காக்கி கோட்டும் சூப்பர் ஸ்டார் பிராண்ட் முத்திரைகள். 

 

முதல் சண்டைக் காட்சியில் பொன்னம்பலத்திடம் மோதும் போது 

"நான் வாழுறதுக்காக சாப்பிடுறவன்" என்று சொல்லுவதாகட்டும்.

 

தன் அக்காவிடம் "வியாதி இல்லாத உடம்பும் வேதனை இல்லாத மனதும் தான் உண்மையான சொத்து." என்று பேசுவதாகட்டும்.

 

நாயகியிடம் " முத்தம் மனசு உடம்பு ஒருத்தர் கிட்ட தான் பரி மாறிக்கணும், ஆம்பள கட்டிக்கப் போறவ கிட்ட, பொம்பள தன்னைக் கட்டிக்க போறவன்கிட்ட " என்று அறிவுறுத்துவதாகட்டும் 

 

"ஜனங்க பார்த்துட்டு இருக்காங்க, உக்கார வச்சுடுவாங்க " என்று அரசியல்வாதியை எச்சரிக்கை செய்வதாகட்டும் 

 

பாண்டியன் அல்ல திரையில் மக்கள் பார்ப்பதும் கேட்பதும் ரஜினி என்ற மனிதனின் குரலைத் தான். 

 

ரஜினியின் காமெடிக்கு கேட்க வேண்டுமா,  அதுவும் குஷ்பூ உடன் ரஜினி செய்யும்  காமெடி ரொம்பவே நல்லா எடுபடும். மன்னன்,  அண்ணாமலை என்று அதை ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோமே.

 

பாண்டியனில் குஷ்பூவுடன் அவர் செய்யும் வானொலி காமெடி அபத்தம் தான் என்றாலும் ரஜினியின் நடிப்பால் தப்பி விடுகிறது. 

 

அடுத்து குஷ்பூ வீட்டில் விணுசக்கரவர்த்தி  இருக்கும் போது ரஜினி குஷ்பூ இடையே நடக்கும் காதல் சரச காமெடியும் ரசிக்கும் படி இருக்கும் ரஜினியின் தட்டிடுச்சு...தடுக்கிடுச்சு.. தடுமாறிட்டேன் சார்  மறுபடியும் தடுமாறிட்டேன் சார் வசனங்கள் சிரிக்க வைக்கும் 

 

அர்ச்சனா பூரன் சிங் உடன் உடற்பயிற்சி செய்யும் அகைன் அகைன் காமெடியும் ரஜினியின் சில்மிஷ சிரிப்பு தான். 

 

ரஜினிக்கும் பாண்டிசேரி ரசிகர்களுக்கும் தனியொரு பாசக் கதை உண்டு, அவர்கள் மத்தியில் பொது இடத்தில் எடுக்கப் பட்ட பாண்டியன் ஐபிஸ் நடு ரோட்டில் வில்லனை கைது செய்து நடத்திக் கூட்டி வரும் காட்சி பாண்டியன் படத்தின் ஹைலைட் காட்சிகளில் ஒன்று. 

 

சிலுப்பும் துள்ளல் முடியுடன் ரஜினி நடித்த கடைசி சில படங்களில் பாண்டியனும் ஒன்று. 

 

எஸ். பி. முத்துராமன் இயக்கிய கடைசி ரஜினி படம் பாண்டியன், அதற்குப்பிறகு எஸ்பிஎம் ஒரே ஒரு படம் தான் இயக்கினார்,  திரையுலகில் இருந்து ஓய்வு பெற்று கொண்டார். 

 

பாண்டியன் சமயத்தில் தான் அவரது ஆருயிர் துணைவியாரை இழந்தார்,  இருப்பினும் படம் வெளிவர தாமதம் ஆகக் கூடாது என்று மூன்று நாட்களில் தன் துக்கம் மறைத்து விட்டு வந்து வேலை செய்து பாண்டியனை சொன்னபடி தீபாவளிக்கு வெளிக் கொண்டு வந்தார். 

 

பாண்டியனின் முதல் பாதி ரஜினி ரசிகனுக்கு கொண்டாட்டம் என்றால் இரண்டாம் பாதி திரைக்கதையில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் கொஞ்சம் திண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். 

 

இரண்டாம் பாதியில் கொஞ்சம் உரையாடல்களை சுருக்கி கதையின் வேகம் கூட்டி இருக்கலாம், கொஞ்சமே காமெடியையும் கூட்டி இருக்கலாம் என்பது பரவலானக் கருத்து. 

 

கிளைமேக்சில் ரஜினி போடும் கெட்டப் குழந்தைகளுக்கு பெரிதும் ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட வேண்டும்.  இன்றைய அவெஞ்சர்களை நினைவுப்படுத்தும் உடை அது.  கருப்பு நிறத்தில் இருக்கும் உடையிக் நெஞ்சு பகுதியில் வெள்ளி நிறத்தில்  டிக் மார்க் போட்டிருக்கும் எடுப்பான கெட்டப்பில் வருவார் ரஜினி. 

 

ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்த வெகு சிலப் படங்களில் பாண்டியனும் ஒன்று அந்த வகையில் பாண்டியன் ரஜினி ரசிகர்களுக்கு முக்கியமான ஒரு படம் தான். 

 

பாண்டியன் வந்தப் போது தினமலர் தீபாவளி மலரில் ஆளுயர போஸ்டர் வழங்கியது ஒரு கூடுதல் தகவல். 

 

பாண்டியன் வெளிவந்த ஆண்டு - 1992

 

இயக்கம் - எஸ் பி முத்துராமன் 

தயாரிப்பு - விசாலம் புரொடக்ஷன்ஸ் 

( ஏவி எம் சரவணன் தயாரிப்பு பணிகளில் பெரிதும் உதவியாக இருந்தார் என்று செய்தி )

இசை - இளையராஜா 

நடனம் - ராஜு சுந்தரம் 

சண்டை - ஜூடோ ரத்தினம் 

ஒளிப்பதிவு - டி எஸ் விநாயகம் 

எடிட்டிங் - விட்டல் 

கதை - பிரபாகர் 

திரைக்கதை வசனம்  - பஞ்சு அருணாச்சலம் 

 

பாண்டியனின் பெரும் பலம் ரஜினி தான், படத்தின் பலவீனம் ரஜினிக்கான இன்னும் பலமான திரைக்கதை இல்லாதது தான். 

 

பாண்டியன் ஐபிஎஸ் என்ற கணீர் குரல் ஒன்றே ரஜினியின் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் போலீஸ் பட வரிசையில் கொண்டு உட்கார வைத்தது என்றால் அது மிகை ஆகாது. 

 

அண்ணாமலையின் பெரு வெற்றிக்கு பின் வந்த பாண்டியன் ரசிகர்களின் முழு பசிக்கும் தீனிப் போடாவிட்டாலும்  வியாபார ரீதியில்  ஒரு வெற்றி படமே.

 

- தேவ்

ஓவியம் : அறிவரசன்






 
0 Comment(s)Views: 562

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information