 தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... ஜப்பான் ரசிகர்களுக்கும் ரஜினியை ரொம்பப் பிடிக்கும். அவரது நடிப்பில் 1995 ஆம் ஆண்டில் வெளியான `முத்து' திரைப்படம் ஜப்பானில் `முத்து-ஓடூரு மகாராஜா' என்ற பெயரில் வெளியானபோது, அங்குள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஜப்பானைச் சேர்ந்த அவரது ரசிகர்கள், சென்னை வந்தால் போயஸ்கார்டனுக்குப் போய் அவரைச் சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொள்வதும் உண்டு. இதன் தொடர்ச்சியாக, அவரின் புதிய படங்கள் அங்கு வெளியாகி, வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், அவரின் `முத்து' படம் 4k தொழில்நுட்பத்தில் ஜப்பான் மொழியில் வெளியாக உள்ளது. இதற்கானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.``முத்து படம் 4k முறையில் தயாராவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் ஜப்பான் ரசிகர்களிடம் மீண்டும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன். ஏனெனில், ஜப்பானியர்களின் மனதை நன்கு அறிவேன்'' என்று ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
`முத்து' திரைப்படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
|