"லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், இயக்குநர் ஷங்கர், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண், நடிகை எமி ஜாக்சன், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக் குழுவினர் ட்ரெய்லரை வெளியிட்டனர்.
இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியது: இந்த படம் உலக தரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு லைகாவின் சுபாஷ்கரண் ரூ.600 கோடி முதலீடு செய்திருக்கிறார். என்னை நம்பியில்லை. ஷங்கரை நம்பி முதலீடு செய்திருக்கிறார். ஷங்கர் ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. இந்தியாவின் ஸ்பீல்பெர்க் போன்றவர் ஷங்கர். அடுத்து என் நண்பர் கமல்ஹாசன் நடிப்பில் அவர் எடுக்கவுள்ள "இந்தியன் 2' படமும் பெரும் வெற்றி பெறும்.
விலக நினைத்தேன்: இந்தப் படம் ஆரம்பித்தபோது எனக்கு உடல் நிலை மோசமானது. என்னால் 5 வரி வசனம்கூட பேச முடியாமல் போனது. "என்னை விட்டு விடுங்கள் ஷங்கர். என்னால் முடியவில்லை. வாங்கிய முன் தொகையை திருப்பித் தந்து விடுகிறேன்' என்றேன். ஷங்கர், 'சார் நீங்க இல்லாமல் இது முடியாது' என்றார். படப்பிடிப்பில் அவ்வளவு உதவியாக இருந்தார். ஷங்கரின் இந்தப் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். ஷங்கரும் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல நண்பர்கள் கோஹினூர் வைரம்: அதேபோல், சுபாஷ்கரண் பற்றியும் சொல்ல வேண்டும். நல்ல நண்பர்கள் கோஹினூர் வைரம் மாதிரி. தயாரிப்பாளர் சுபாஷ்கரண் எனக்கு அப்படித்தான். நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் என்னை தனிமையில் சந்தித்துப் பேசினார். என் கைகளைப் பிடித்துக் கொண்டு "4 மாதங்கள் இல்லை சார் 4 வருடங்கள்கூட காத்திருப்பேன். முடியவில்லை என்றால் படத்தை கை விட்டு விடலாம்; நீங்கள் இந்தப் படத்தை செய்வீர்கள்' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார். அவருக்கு என் நன்றிகள்.
வந்தால் கண்டிப்பாக ஹிட்தான்: இந்தப் படத்தின் வெளியீட்டில் ஏன் இவ்வளவு தாமதம் என்றார்கள். வருமா என்றெல்லாம் பேசினார்கள். தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஹிட் அடிக்க வேண்டும். ( ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டினர்...) நான் சினிமாவை சொன்னேன். மக்கள் வரும் என்று முடிவு செய்து விட்டார்கள். "ஹிட் அடிக்கும்' என்றும் முடிவு செய்து விட்டார்கள். தமிழ்த் திரையுலகை இந்திய அளவுக்கு தூக்கி சென்ற இயக்குநர் ஷங்கர். இப்போது சர்வதேச அளவுக்கு கொண்டு போகிறார் என்றார் ரஜினிகாந்த். விழாவில் படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
கமல் வாழ்த்து: 2 .0 படத்துக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் அனுப்பியிருந்த விடியோ, விழாவில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய கமல்ஹாசன், "நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது போல இயக்குநர் ராஜமௌலி, கன்னட நடிகர்கள் சிவ ராஜ்குமார், உபேந்திரா உள்ளிட்டோரும் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பியிருந்த விடியோ விழாவில் ஒளிபரப்பட்டது.
நல்ல அனுபவம் - ஷங்கர்: இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் "2.0'. சினிமாவைத் தாண்டி இதுவொரு நல்ல அனுபவமாக இருக்கும். தயாரிப்பாளர் சுபாஷ்கரண் இல்லாவிட்டால் இந்தப் படமே இல்லை. அவருக்கு சினிமா மேல் உள்ள ஆர்வம் காரணமாகவே இப்படியொரு படத்தை தயாரித்திருக்கிறார்.
படத்தின் பெரிய பலம் ரஜினி சார் தான். அவர் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இப்போதும் அவர் நடிப்பு புதிதாகவே இருக்கும். உடல் நிலை சரியில்லாத போதும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து தந்தார் ரஜினி. இந்த நேரத்தில் எனது உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் ஷங்கர்.
தமிழில் பேசிய அக்ஷய்குமார்: 2.0 படம் ஒரு பாடம். இந்தப் படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் என்ற அறிவுஜீவியிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஷங்கர் இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு விஞ்ஞானி என்றார் அக்ஷய்குமார்.
இந்த விழாவில் உரையைத் துவக்கும் போது தமிழில் பேசி அசத்தினார் அக்ஷய் குமார். "வணக்கம் சென்னை'. மகிழ்ச்சி. பாலிவுட் நடிகரான நான் பேரும் புகழும் நிறைந்த ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது ஒரு பெரும் அரிய வாய்ப்பு. மகிழ்ச்சி. நன்றி என்றார் அக்ஷய்குமார்.
2.0 Official Trailer Video
Thalaivar Rajinikanth Speech
|