1980-களில் வெளியாகி வெற்றிபெற்ற பல திரைப்படங்கள் முதிர்ச்சியான ரசிகர்களுக்கானவை யாக அல்லாமல், சிறுவர்களுக் காகவே எடுக்கப்பட்டதாக இப்போது தெரிகிறது. தர்க்கரீதியான கேள்விகளை அலட்சியம் செய்தபடி தன் போக்கில் நகரும் அவ்வாறான படங்கள் தமிழில் பல உண்டு.
ஆனாலும், சாகசங்களை விரும்பும் இளம் மனங்களுக்குப் பெரும் விருந்து படைத்த படங்கள் அவை. அப்படியான சாகசப் படங்களில் ஒன்று எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் ரஜினி, ரதி நடித்த ‘கழுகு’. காதல் திருமணம் செய்துகொள்ளும் ரஜினி-ரதி ஜோடிக்குப் திருமணப் பரிசாக ஒரு பேருந்து வழங்கப்படும்.
படுக்கை, குளியல் வசதிகள், சமைக்கும் கருவிகள் என்று சகல வசதிகளுடன் ஒரு நகரும் வீடாக இருக்கும் அந்தப் பேருந்தில், நெருங்கிய நண்பர்களின் துணையுடன், இதுவரை அறிந்திராத பகுதிகளுக்கு அவர்கள் பயணம் செய்வார்கள். புதிய இடம் ஒன்றில் அவர்கள் சந்திக்கும் மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. படம் முழுவதும் குதூகலம் தரும் பயணத் துணையாக, இளையராஜாவின் இசை கூடவே பயணிக்கும்.
மலைக் காற்றின் தீண்டல்
பாடல்களில் இசைக் கருவிகளுக்கு மாற்றாக, குரல்களை வைத்து இளையராஜா செய்த பரிசோதனைகள் நிறைய உண்டு. முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்த பாடல்கள் அவை. இப்படத்தில் இடம்பெறும், ‘பொன்னோவியம்… கண்டேனம்மா எங்கெங்கும்’ பாடல் அவற்றில் ஒன்று.
பசுமையான மலைப் பாதைகளின் வழியாகச் செல்லும் பேருந்துக்குள் இருந்தபடி, இயற்கையை ரசிக்கும் காதலர்கள் பாடும் பாடல் இது. ‘லலலலலா…’ என்று பல குரல்களின் சங்கமமாக ஒலிக்கத் தொடங்கும் ஹம்மிங்குடன், துள்ளலான தாளம் இனிமையைக் கூட்டும். ‘பொன்னோவியம்…’. என்று எஸ். ஜானகியின் குரல் தொடங்கும்போது மலைக் காற்றின் ஸ்பரிசத்தை உணர முடியும். இயற்கையின் வசீகரத்தைக் கொண்டாடும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாகப் பாடியிருப்பார் இளையராஜா.
முதல் சரணத்துக்கு முன்னதான நிரவல் இசையில் ஒலிக்கும் குரல்கள், கொண்டாட்டத்தில் துள்ளும் என்றால், இரண்டாவது சரணத்துக்கு முன்னதான நிரவல் இசை சலனமற்று உறைந்து கிடக்கும் நதிக்கரையின் அமைதியைக் கண்முன் நிறுத்தும். ‘ம்ம்ம்..ம்ம்ம்’ என்று ஆண் பெண் குரல்கள் இணைந்து ஒலிக்கும்போது, இயற்கை தேவதைகளே இளம் ஜோடியை வாழ்த்துவதுபோல் இருக்கும்.
இளையராஜா பாடிய பெரும்பாலான டூயட் பாடல்களில் அவருக்குத் துணையாகப் பாடியிருப்பவர் எஸ். ஜானகிதான். தனது அபாரமான கற்பனை வீச்சின் நுட்பங்களை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட பாடகி என்பதால், தான் பாடும் பாடல்களில் ஜானகியின் குரலை இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும். இருவரும் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இப்பாடல்.
கனவில் ஒலிக்கும் பாடல்
ஆயிரக் கணக்கான திரைப் பாடல்களைப் பாடியவர்களுக்குக் கிடைக்கும் புகழ், சிலருக்கு ஒரே பாடல் மூலம் கிடைத்துவிடும். இப்படத்தில் இடம்பெறும் ‘காதல் எனும் கோவில்’ பாடலைப் பாடிய சூலமங்கலம் முரளி அந்த வகையைச் சேர்ந்தவர். சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ராஜலட்சுமியின் மகன் இவர். சில பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால், சினிமாவில் அவர் பாடிய பாடல், அநேகமாக இது மட்டும்தான். பல உயரங்களுக்கு அனாயாசமாகப் பறந்து செல்லும் குரல் இவருடையது.
இந்தப் பாடல் உருவாக்கும் கற்பனை மிக நுட்பமானது. மாலை நேரத்தின் மஞ்சள் நிறம் கரைந்துவிடாத இரவின் தொடக்கம். கடல், மலை, மரங்கள் என்று எதுவுமே இல்லாத பரந்த சமவெளி. பூமியைத் தொட்டுக்கொண்டே புரளும் பிரம்மாண்டமான திரையாக வானம். அதில் ஆங்காங்கே நட்சத்திரங்கள்.
அசையாதச் சித்திரமாக விரிந்திருக்கும் இந்த கனவுப் பிரதேசத்தின் அமைதிக்கு நடுவில் மென்மையாக ஒலிக்கத் தொடங்குகிறது கிட்டார். சற்று நேர நடைக்குப் பின்னர் மெதுவாக ஓடத் தொடங்குவதுபோல், தொடக்க இசைக்குப் பின்னர் வேறுபட்ட திசையில் பாடல் திரும்பும். வேகம் கூடும் கிட்டாருடன், புல்லாங்குழல் ரகசியமாகக் கொஞ்ச, பாடல் தொடங்கும்.
நிரவல் இசையில் வயலின் சேர்ந்திசையில், விமானம் தரையிலிருந்து வானத்துக்கு ‘டேக்-ஆஃப்’ செய்யும் அற்புதத்தை உணர முடியும். சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட இசை இது. தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் மிதந்து செல்லும் உணர்வைத் தரும் இப்பாடல் தரும். கனவுகளில் தோன்றும் நிலப்பரப்பின் இசை வடிவம் என்றும் இந்தப் பாடலைச் சொல்லலாம்.
கோடை விடுமுறைச் சுற்றுலாவை நினைவுபடுத்தும் ‘ஒரு பூவனத்தில’ எனும் பாடலை எஸ்.பி.பி. பாடியிருப்பார். சிறு மலர்கள் அடர்ந்திருக்கும் புல்வெளி மீது தரைவிரிப்பைப் பரப்பி அமர்ந்துகொண்டு கேட்க வேண்டிய பாடல் இது. போலிச் சாமியாரின் மர்மங்களை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் ரஜினி ஆடிப் பாடும் ‘தேடும் தெய்வம்’ எனும் பாடலைத் தனக்கே உரிய உற்சாகத்துடன் பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன்.
Courtesy : http://tamil.thehindu.com
|