ரஜினிகாந்த் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் பரபரப்பாகி விடுகிறது. இன்று நடந்த ஜெயலலிதா பதவியேற்பு விழாவிலும் கூட கடைசி நேரத்தில் ரஜினிகாந்த்தால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் ஆரம்பத்தில் நல்ல டர்ம்ஸ் இருந்ததில்லை. ஆனால் காலம் இருவரையும் நட்பாக்கியது. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா கைதாகி பின்னர், ஜாமீனில் வெளியே வந்த போது முதல் ஆளாக ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்ட ஜெயலலிதா இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார். அவருடன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அமர்ந்திருந்தார்.
இருவரும் செல்பி எடுத்து வெளியிட்டும் உற்சாகத்தைக் காட்டிக் கொண்டனர். ரஜினி சிரித்த முகத்துடன் நிகழ்ச்சி முழுவதையும் அமர்ந்து பார்த்தார்.
விழா முடிந்து ரஜினி கிளம்பியபோது அவரை அதிமுகவினர் மொய்த்துக் கொண்டனர். கை குலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். அவரைச் சுற்றி பலரும் மொய்த்ததால் அவரால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதில் ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றிவேல் ரஜினியிடம் காலில் விழுந்து ஆசி வாங்கியபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது (வெற்றிவேலுக்கு பிரச்சினை வருமோ...).
அதிமுகவினர் தான் என்று இல்லாமல் திரையுலகினரும் கூட ரஜினியைப் பார்க்க ஆர்வம் காட்டினர். நடிகர்கள் குண்டுக் கல்யாணம், ராமராஜன் என பலரும் வந்து கும்பிட்டு கை குலுக்கியதால் அவர் ஒரு "மினி ஜெயலலிதா" போல அந்த இடத்தில் மாறி விட்டார்.
பிறகு மிகவும் சிரமப்பட்டு கூட்ட அரங்கை விட்டு ரஜினி பத்திரமாக வெளியேறினார். பாதுகாவலர்களும் அவர் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்தனர்.
|